மோதி 2.0 முதலாண்டு: நடுத்தர வர்க்கம் எழுதிய தீர்ப்பு என்ன?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அலோக் ஜோஷி
    • பதவி, முன்னாள் ஆசிரியர், சி.என்.பி.சி ஆவாஸ்

மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக்காலம், அதாவது 2019 க்குப் பிறகு நடுத்தர வர்க்கத்தின் மீது மத்திய அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளதா? இந்த கேள்வி என்னவோ மிகவும் எளிதானதுதான். இந்தக் கேள்வியை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ கேட்டால், 'நிச்சயமாக இல்லை!' என்ற பதிலே ஒரு நொடியில் கிடைக்கும்...

ஆனால் உண்மையில் இந்த வினாவுக்கான விடை நேரடியானதா? உண்மையில் பதிலளிக்க சுலபமானதா? அப்படியானால், பிரதமர் மோடியின் புகழ் அதிகரித்து வருகிறது, கைதட்டுவது தொடங்கி விளக்கேற்ற சொன்னது வரை அவரது கோரிக்கைக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது, அதனால் மக்களிடையே உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியது என்பது போன்ற ஆய்வுகள் அனைத்தும் எங்கிருந்து வருகின்றன?

எனவே இப்போது இதே கேள்வியை தலைகீழாக கேட்டுப் பார்க்கலாம். மோடி அரசு 2019க்கு பிறகும் நடுத்தர வர்க்கத்திற்காக ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் இருந்ததா? முதலில் இது போன்ற கேள்விகளை ஏன் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

எனவே இப்போது உங்களைச் சுற்றியுள்ள நடுத்தர வர்க்க மக்களை கவனிக்க முயற்சிக்கவும். பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் அரசாங்கம் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று மிகவும் வருத்தப்படுகிறார்கள். என்ன செய்யவில்லை என்று கேட்டால், ஒன்றல்ல, பற்பல உதாரணங்களுடன் பதில் கிடைக்கலாம். அதுமட்டுமல்ல, எந்த அரசாங்கமாவது இதற்கு முன் நடுத்தர வர்க்கத்திற்காக ஏதாவது செய்திருக்கிறதா? என்ற பதில் கேள்வியை எதிர்கொள்ள நேரிடும். இதுவரை யாரும் இவர்களுக்காக எதையும் செய்ததுமில்லை, இப்போது செய்வதுமில்லை.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் துக்கம் என்ற வலி நிறைந்த பெட்டகம் தொடர்ந்து தனது கொள்ளளவைக் கூட்டிக் கொண்டேயிருந்தது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதைக் கொண்டாடிய பிறகு, முத்தலாக் விவகாரத்தில் விவாகரத்துக்கு சவால் விடுத்து எக்காளமிட்ட பிறகு, அடுத்த எதிர்பார்ப்பு பட்ஜெட்டை நோக்கி இருந்தது.

ஆனால்… வந்த பட்ஜெட்டோ, பட்டென்று இதயத்தை உடைத்துவிட்டது! இரண்டாவது முறை அரசமைக்க வாக்களித்த தங்களுக்கு ஏதாவது இனிப்பான செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கிடைத்தது அல்வா தான்! வருமான வரி அடுக்குகள் அதிகரிக்கப்பட்டு, வரி விகிதம் குறையும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் இலவு காத்த கிளி போன்ற கதையானது.

ஆம்... அவர்கள் தன்னிறைவும், தற்சார்பும் பெற்றுவிட்டார்கள். இருப்பினும் இப்படி பெயர் எதுவும் இடப்படவில்லை. வரி விகிதத்தில் இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டன. முழு தள்ளுபடி சலுகைகளையும் விட்டுவிட்டு, குறைந்தபட்ச அடுக்கை தெரிவு செய்துக் கொள்ளலாம், அல்லது நீங்கள் பழைய முறையை பின்பற்ற விரும்பினால், விகிதம் மற்றும் வருமான வரி அடுக்கு பழையதாகவே இருக்கும்.

எந்த தெரிவை தேர்ந்தெடுத்தால் எவ்வளவு லாபம், சேமிப்பு என்றெல்லாம், உதாரணங்கள் உடனுக்குடனே கூறப்பட்டாலும், புதிய திட்டத்தில் லாபம் ஏதும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் பொறுப்பான ஆலோசகர்கள் சொன்னது என்ன தெரியுமா? ஆடு எத்தனை நாள் தப்பித்துக் கொண்டிருக்கும். இன்று மிகவும் இளம் குட்டியாக இருந்தால், சில காலம் கழித்து வெட்டப்படும்.. அதேபோல், எந்த தள்ளுபடியாக இருந்தாலும், இன்று கொடுக்கப்பட்டால், நாளை அது லாவகமாக திரும்ப எடுக்கப்படும். எனவே, பலியிடப்போவது நடக்கத்தான் போகிறது. அது இன்றா அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளலாம் என்பதுதான் உங்களிடம் உள்ள தெரிவு.

திரைகள் விலக-விலக, காயங்கள் வலி கொடுக்கும் வடுக்களாக மாறின. அரசின் வரிவிதிப்பின் மிகப்பெரிய தாக்கமானது வரி மீதோ அல்லது இன்று சம்பாதிப்பவரின் பணப்பையின் மீதோ அல்ல. ஆனால் புதிய தலைமுறையின் எதிர்காலம், சேமிப்பு திட்டங்கள் மற்றும் அவர்களின் வயதான காலத்திற்காக சேமிக்கும் பணத்தின் மீதுதான் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தனியார் வேலைகளைப் பற்றி பேசாவிட்டாலும், குறைந்தது அரசு வேலையைப் பற்றி பேசுவோம். எதிர்காலத்தில், அரசாங்கத்தில் பணி புரிந்து ஓய்வுபெறும் போது, ஓய்வூதியம் கிடைக்காது. இதற்கு முன்பாவது, எதிர்காலத்திற்கான சேமிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது அதுவும் கானல்நீராகிவிட்டது. முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மீது முள் பட்டாலும், சேதம் என்னவோ சேலைக்குத் தான் என்பது போல, இறுதியில் பாதிப்பு என்னவோ நடுத்தர வர்க்கத்திற்கு தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

வேலைவாய்ப்பு என்ற அத்தியாயமும் ஏற்கனவே மோசமடைந்து போய்விட்ட நிலையில், இப்போது கொரோனா, உலகளாவிய மந்தநிலை மற்றும் நீண்டகால முடக்கநிலை ஆகியவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றன.

மன்ரேகா, வங்கிக் கடன் அல்லது இருபது லட்சம் கோடி நிதித் தொகுப்பு என அனைத்தையும் பார்த்த முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர், இந்த அரசாங்கமும் முந்தைய அரசாங்கங்களைப் போலவே திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ளது என்று விமர்சிக்கிறார். இந்த அரசில் தென்படும் ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், இங்கு திருப்தி என்பது மத அடிப்படையில் அல்ல, பொருளாதார அடிப்படையில் என்பதே.

உஜ்வாலா முதல் கிராமங்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும் கணக்கிட்ட அவர், நடுத்தர வர்க்கத்திற்கு அதில் என்ன கிடைத்தது என்று வினவுகிறார். உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையானது அதல பாதாளத்திற்கு செல்லும் நிலையில், இங்கு, பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது ஏன் என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.

இதற்கான பதிலும் ஆட்சியாளர்களிடம் தயாராக இருக்கிறது. "நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு வைப்பதற்கான வசதிகள் குறைவாக இருக்கின்றன. ஏற்கனவே இருப்பது தீர்ந்த பிறகு தான் புதிதாக கச்சா எண்ணெயை வாங்கி சேகரிக்க முடியும்"

ஒருமுறை விலை குறைத்திருந்தால், இருப்பில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்றுவிட்டால், ஒரே அம்பில் மூன்று இலக்குகள் எட்டப்பட்டிருக்கும். முதலில் அனைவரும் குறைந்த விலையில் வாகன எரிபொருள் கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சியடைவார்கள், இரண்டாவதாக போக்குவரத்து செலவுகள் குறையும் என்பதால், தேவை இல்லை என்று எரிபொருள் நிரப்பாமல் இருப்பவர்களும், உடனடியாக வந்து தங்கள் வாகனங்களில் எரிபொருளை நிரப்பியிருப்பார்கள்.

இது எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்த இருப்பை காலி செய்திருக்கும். மூன்றாவதாக, குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி சேமித்திருக்கலாம், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கியிருக்கலாம். ஒரு கல்லை வீசியிருந்தால் பல மாங்காய்கள் கிடைத்திருக்கலாம்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

அரசாங்கத்தின் பணிகள் குறித்தும், அரசாங்கத்தின் முடிவுகள் குறித்தும் விரல் நீட்டி பேச வேண்டிய அவசியமே இன்று இல்லை. ஏனென்றால் ஒரு வருடத்திற்கு முன்பு அவர்கள் சிந்தித்து எடுத்த முடிவுகளையும், செயல்படுத்த நினைத்த திட்டங்களையும், கொரோனா என்ற வைரஸ் முற்றிலுமாக தனது பிடிக்குள் வசப்படுத்திவிட்டது. அதாவது, இப்போது கரும்பலகையில் எழுதிய அனைத்தையும் கொரொனா அழித்துவிட்டது. இனி புதிதாகத்தான் எழுதத் தொடங்க வேண்டும்.

ஒரேயொரு வாய்ப்பு உள்ளது. ஆனால் அதுவும் வெகு தொலைவில் உள்ளது. பிரச்சனையின் முடிவில், அது மக்களை ஊக்குவிக்கவும், பொருளாதாரத்திற்கு திரும்பக் கொண்டுச் செல்லவும் என்ன செய்வது என்று அரசாங்கம் தற்போது திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம். அதாவது, கொரோனா குறித்த பயம் படிப்படியாய் குறைந்து, தற்போது முடக்கநிலை சிறிது சிறிதாக தனது இயல்பை மாற்றிக் கொண்டு, இயல்புநிலைக்கு திரும்புகிறது. இந்த சமயத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், நடுத்தர வர்க்கத்திற்கு நிவாரணத்தையும் உற்சாகத்தையும் தரும் ஒரு அறிவிப்பு வரக்கூடும்.

ஆனால், இப்போதைக்கு நடுத்தர வர்கத்தினர் குறிப்பிட்ட சிறிது காலத்திற்கு கடன் தவணைகளை செலுத்தக்கூடாது, வீடுகளுக்கோ, கடைகளுக்கோ வாடகை கொடுக்க வேண்டாம், பணியாளர்களை நீக்கக்கூடாது. அவர்களுக்கான ஊதியத்தை கொடுக்க வேண்டும், குறைக்கக்கூடாது. அதுமட்டுமல்ல, மின்சாரம், நீர், எரிவாயு, தொலைபேசி கட்டணம் மற்றும் அரசாங்க வரிகளையும் செலுத்த வேண்டாம் என்று சொல்லவேண்டும்.

கொரோனா

மக்கள் ஏற்கனவே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் சூழ்நிலையில், அரசாங்கத்தின் கடந்த ஒரு வருட ஆட்சி பற்றி நடுத்தர வர்கத்தினரிடம் என்ன கேட்பது? லாக்டவுன் அமலில் இருந்தபோது ரமலான் நோன்பு வந்தது. ஈகைத் திருநாளுக்கு எந்த பொருட்களையும் வாங்கக்கூட முடியவில்லை, ஈகைத் திருநாள் வாழ்த்துகள் என்று சொல்லவோ, மார்போடு அணைத்து ஈத் முபாரக் என்று சொல்லவோ முடியாத நிலையில் ஈகைத் திருநாள் எப்படி இருந்தது என்று கேட்க முடியுமா?

ஆனால் எது எப்படி இருந்தபோதிலும், நீங்கள் கேள்விகளைக் கேட்க முயற்சிக்க வேண்டும். மிகச் சிலரே நேரடியாக பதிலளிப்பார்கள். அந்த பதிலில் ஒரு கேள்வி தொக்கி நிற்கலம். அந்தக் வினா, மாநில அரசைப் பற்றியும் இருக்கலாம், அல்லது முந்தைய அரசாங்கத்தின் மீதும் இருக்கலாம். அந்த பதில்கேள்வியானது கடந்த எழுபது ஆண்டுகளைப் பற்றியதாகவும் இருக்கலாம். அப்படி ஏதும் இல்லையென்றல், வேறு யாரைப் பற்றிய கேள்வி எழாவிட்டாலும், குறைந்தது கேள்விக்கான பதிலை கேட்டவரைப் பற்றிய வினாவாகவும் அந்த பதில்கேள்வி இருக்கலாம்.

உண்மை என்னவென்றால், மோடி அரசாங்கத்தின் கவனம் நடுத்தர வர்க்கத்தின் மீது இல்லை என்றாலும் கூட, இந்த அரசை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட, பிரதமர் மீது நடுத்தர வர்க்கத்தினருக்கு நம்பிக்கை இருப்பதாகச் சொல்கிறார்கள். சங்கடங்கள் இருந்தாலும், வருத்தங்கள் இருந்தாலும், புகார்கள் இருந்தாலும், ஏமாற்றம் இருந்தாலும், பரிதாபமான நிலையில் இருந்தாலும், நடுத்தர வர்கத்தினருக்கு அரசு மீது கோபம் இருப்பதாக தெரியவில்லை.

அதே சமயம், வாக்கு வங்கி எதுவாக இருந்தாலும், தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் வர்க்கம் நடுத்தர வர்க்கமே... "அதாவது, இந்த அரசாங்கம், தனது முதல் ஆண்டில் தேர்ச்சி பெற்றதா என்ற பரிட்சைக்கான முடிவை கொடுக்க வேண்டியது நடுத்தர வர்க்கத்தினரே. ஆனால், இந்த ஆண்டு, தேர்வு எழுதாமலேயே ஒன்பதாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது போலவே, இந்த அரசும், தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றுவிட்டது!

(இந்த கட்டுரையின் ஆசிரியர் ஒரு மூத்த பத்திரிகையாளர் மற்றும் youtube.com/c/1ALOKJOSHI என்ற YouTube சேனலை நடத்தி வருபவர்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: