புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்த முதல் விமானம்: ஜார்கண்டில் ஒரு முயற்சி

ஜார்கண்ட்டிற்கு வந்த பிறகு மண்ணை தொட்டு வணங்கும் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், RAVI PRAKASH/BBC

படக்குறிப்பு, ஜார்கண்ட்டிற்கு வந்த பிறகு மண்ணை தொட்டு வணங்கும் தொழிலாளர்கள்
    • எழுதியவர், ரவி பிரகாஷ்
    • பதவி, ராஞ்சியிலிருந்து பிபிசி ஹிந்தி சேவைக்காக

மும்பையிலிருக்கும் ஜார்கண்ட் மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 174 பேர் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

இந்த 174 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமானநிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் 2 மணி நேரம் 15 நிமிட பயணத்திற்கு பிறகு ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா விமானநிலையத்துக்கு வந்தடைந்தனர்.

இந்த சிறப்பு விமான செலவுகளை பெங்களூரூவில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஏற்றுகொண்டுள்ளனர். மேலும் மும்பையில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக மேலும் சில விமானங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்த 174 பேரில் பெரும்பாலானோர் இப்போதுதான் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்கின்றனர்.

இவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தின் கட்வா, ஹஸாரிபாக் மற்றும் ராஞ்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சிலர் தனியாகவும் சிலர் தன் குடும்பத்துடனும் சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர்.

இவர்களில் பலருக்கு ரயிலில் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது விமானம் மூலம் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர்.

வீடு வந்து சேர்ந்த மகிழ்ச்சி

இது குறித்து ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரேன் கூறுகையில், ”தேசிய சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் , ஜார்கண்ட் மாநில அதிகாரிகள் மற்றும் மஹாராஷ்டிரா மாநில அரசு அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்பால் 174 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலம் வந்தடைந்தனர். இந்த முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கும் மற்றும் பெங்களூரூ தேசிய சட்டக் கல்லூரி முன்னாள் மாணவ அமைப்புக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்த சம்பத்தை பார்த்து இது போன்ற அமைப்புகள் உதவி செய்ய முன்வரும்”, எனக்கூறி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த விமானத்தில் பயணம் செய்த 174 புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் ஒருவர்தான் கட்வா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் சௌத்ரி.

அவர் கூறியபோது, ”வீட்டிற்கு திரும்பியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் என்னை பதிவு செய்ய சொன்னார்கள். நான் பதிவு செய்த 2 நாட்களுக்கு பிறகு மே 28 அன்று மும்பையிலிருந்து ராஞ்சிக்கு விமானம் செல்லும் விமானப் பயணிகளின் பட்டியலில் என் பெயரும் இருந்தது. என்னால் முதலில் இதை நம்ப முடியவில்லை. ஆனால் இப்போது வீட்டிற்கு வந்துவிட்டேன். இது என்னுடைய முதல் விமானப் பயணம் ஆகும். அதனால் வாழ்க்கையில் இது மறக்கவே முடியாத சம்பவம்” ஆகும் என்கிறார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

பட மூலாதாரம், RAVI PRAKASH/BBC

அதேபோல் மும்பையிலிருந்து ஜார்கண்ட் வந்தவர்களில் ஒருவரான மேரி கூறியபோது, “ யாருடைய உதவியால் நாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தடைந்தமோ அவர்களுக்கு நன்றி. மும்பையிலிருந்து ஜார்கண்ட்டிற்கு ரயில் ஏதும் இல்லாததால் நாங்கள் வருத்தத்தில் இருந்தோம். பின்னர் விமான சேவை என்றது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் இது வேடிக்கை அல்ல. இப்போது நாங்கள் எங்கள் மண்ணுக்கு வந்துவிட்டோம். இனி சொந்த மண்ணில் இருக்கிறோம். தெரியாத ஊரில் இருக்கிறோம் என்பது இல்லை.” என்கிறார்.

ஜார்கண்ட் மாநில அரசின் முயற்சி

விமானம் மூலம் வந்த அனைவருக்கும் ஸ்கிரீனிங் செய்யப்பட்டது.

Banner image reading 'more about coronavirus'

விமான நிலையத்திலிருந்து தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விமான நிலையத்தில் தண்ணீர் மற்றும் திண்பண்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இந்த பேருந்துகள் தூய்மைபடுத்தி வைத்துக்கப்பட்டிருந்தன.

ஜார்கண்ட் மாநிலம் முதலில் உள்துறை அமைச்சகத்திடம் அந்தமான், லடாக் போன்ற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர சிறப்பு விமானங்களுக்கு அனுமதி கேட்டிருந்தது. ஏனென்றால் இந்த இடங்களிலிருந்து ரயில் அல்லது பேருந்துகளில் அழைத்து வருவது என்பது முடியாத ஒன்று.

ஜார்கண்ட் மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இந்த வேலை கடைசி கட்டத்தில் உள்ளது. இந்த வாரத்திலோ அல்லது நாளையே கூட எங்களுக்கு சிறப்பு விமானத்திற்கான அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி கிடைத்துவிட்டால் குடியேறி தொழிலாளர்களை மாநில அரசின் முயற்சியால் விமானம் மூலம் அழைத்து வந்த முதல் மாநிலமாக ஜார்க்கண்ட் இருக்கும்” என்றார்.

முதல் ரயில், முதல் விமானம்

மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினமன்று நாடு முழுவதும் முடக்கநிலையில் இருக்கும்போது தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்ட்க்கு தான் முதல் ரயில் இயக்கப்பட்டது.

அதன் பிறகு தான் பல மாநிலங்களுக்கு வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் இயக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதில் சுமார் 1200 தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் வந்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான முதல் ரயிலும் முதல் விமானமும் ஜார்கண்ட் மாநிலத்துக்கு தான் சென்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: