காஷ்மீரில் புல்வாமா பாணி தாக்குதல் திட்டம் ஒன்று முறியடிக்கப்பட்டது: போலீஸார் தகவல்

காஷ்மீர் போலீஸ்

பட மூலாதாரம், Getty Images

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது புல்வாமா பாணியிலான ஒரு மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டம் முறியடிக்கப்பட்டதாகக் கூறுகிறது காஷ்மீர் போலீஸ்.

புதன்கிழமை இரவு புல்வாமா மாவட்டத்தில் கார் ஒன்றை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனையிட்டபோது அதில் ஏராளமான வெடிபொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள் அதிகாரிகள்.

சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற அந்த கார் கடைசியில் ஒரு கிராமத்தில் நின்று கொண்டிருந்ததாகவும், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அதில் இருந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ததாகவும் போலீசார் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், போலீசார் அந்தப் பகுதிக்கு வருவதற்குள் அந்த காரில் வந்த தீவிரவாதிகள் ஓடித் தப்பிவிட்டதாக காஷ்மீர் காவல் துறைத் தலைவர் விஜய் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தீவிரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், தீவிரவாதிகளுக்கும் போலீசுக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்த பிறகே தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட நேரத்தில் உளவுத் தகவல்கள் கிடைத்ததாலும் பாதுகாப்புப் படையினர் விரைந்து நடவடிக்கை எடுத்ததாலும் மிகப் பெரிய துயரச் சம்பவம் தவிர்க்கப்பட்டதாக விஜய் குமார் தெரிவித்தார்.

Banner image reading 'more about coronavirus'

2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் உள்ள லேத்போரா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் மீது பெருமளவு வெடிபொருள் ஏற்றிவந்த வேன் ஒன்று மோதியதில் 40 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே ராணுவப் பதற்றம் ஏற்பட்டது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் போர்ச்சூழலும், மோதல்களும் ஏற்பட்டன.

புல்வாமா தாக்குதல் என்று அறியப்படும் இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை கடந்து பாகிஸ்தான் பக்கத்தில் இருக்கிற பாலகோட் என்ற இடத்திலிருந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுவீசித் தாக்கி அழித்ததாக இந்தியா கூறியது. ஆனால் அப்படி எந்த முகாம்களும் அங்கு இல்லை என்று பாகிஸ்தான் மறுத்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த சிறப்பு தன்னாட்சி உரிமைகளை இந்தியா ரத்து செய்த பிறகு ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள், பாகிஸ்தான் மேற்கொண்ட போர் நிறுத்த மீறல் சம்பவங்களில் 100 தீவிரவாதிகளும், 30 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கடைசி கமாண்டர் என்று அறியப்பட்ட ஜுனைட் செராய் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கடந்த வாரம் ஸ்ரீநகரில் கொல்லப்பட்டனர். புதன்கிழமை முறியடிக்கப்பட்ட புல்வாமா பாணி தாக்குதலை திட்டமிட்ட தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்கிறது போலீஸ்.

சமீப காலத்தில் காஷ்மீரில் புதிய கொள்கை ஒன்றை பாதுகாப்புப் படையினர் கடைபிடிக்கின்றனர். இதன்படி, துப்பாக்கிச் சண்டைகளில் கொல்லப்படும் தீவிரவாதிகள் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அவர்களின் முன்னோர்கள் புதைக்கப்பட்ட இடுகாடுகளில் இருந்து வெகு தொலைவில் போலீஸ் கண்காணிப்பில் அவர்கள் உடல்கள் புதைக்கப்படுகின்றன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு மிகப் பிரம்மாண்டமான இறுதி ஊர்வலங்கள் நடத்தப்படுவதைத் தடுக்கவே இந்த கொள்கை கடைபிடிக்கப்படுகிறது என்று உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். வன்செயல்களை நடத்தவும், தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேரவும் இத்தகைய பிரும்மாண்ட ஊர்வலங்கள் ஊக்குவிப்பை வழங்குகின்றன என்கிறார்கள் அந்த போலீஸ் அதிகாரிகள்.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவுமே இந்த கொள்கை கடைபிடிக்கப்படுவதாகவும் வேறொரு ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: