தமிழ்நாட்டில் ஆன்-லைன் வகுப்புகள் நடத்தலாமா, கூடாதா? அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் குழப்பம்

தமிழ்நாட்டில் ஆன் - லைன் வகுப்புகள் நடத்தலாமா, கூடாதா? அமைச்சரின் பேச்சால் குழப்பம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு ஆன் -லைன் வகுப்புகளை சில பள்ளிகள் நடத்திவருகின்றன.

இப்படி ஆன் - லைன் வகுப்புகளை நடத்தக்கூடாது என முதலில் தெரிவித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பிறகு அதனை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் இணைக்க 'வகுப்பறையை நோக்கி' என்ற ஆப் இன்று வெளியிடப்பட்டது. இதை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

"கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. அப்படியே திறக்கப்பட்டாலும் மாணவர்களை நெருக்கமாக அமரவைத்து வகுப்புகளை நடத்துவது சவாலாக இருக்கும் என்பதால் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை காலையிலும், 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பிற்பகலிலும் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி துறை பரிசீலித்து வருகிறது" என்று கூறினார் செங்கோட்டையன்.

செங்கோட்டையன்

பட மூலாதாரம், K.A Sengottaiyan Facebook page

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படவிருப்பதாகவும் இந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்ட குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், பல பள்ளிகள் ஆன் - லைன் மூலம் வகுப்புகள் நடத்திவருவதாக கூறி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் "ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். மேலும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அமைச்சரின் பேட்டிக்குப் பிறகு ஊடகங்களில் ஆன் -லைன் வகுப்புகளுக்கு தடை என செய்தி வெளியானது. இதையடுத்து பல ஊடகங்களைத் தொடர்பு கொண்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் ஆன்-லைன் வகுப்புகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

இதற்கு சில நிமிடங்களுக்குப் பிறகு கல்வித் துறையின் சார்பில் ஊடகங்களைத் தொடர்பு கொண்டு, ஆன் - லைன் வகுப்புகளை எடுக்கத் தடை இல்லை என்றும் இதற்காக ஆசிரியர்களை பள்ளிக்கூடங்களை வரவழைப்பதற்குத்தான் தடை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கிற்கு முன்பாகவே பள்ளிக்கூடங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது.

இதையடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்ப்டடனர். மார்ச் 27ஆம் தேதி துவங்கவிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிப்போடப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: