கண்ணன் அம்பலம்: 43 சிறுபாலங்கள், 28 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள்- ஆப்ரிக்காவில் அசத்தும் மதுரைக்காரர் - வியக்க வைக்கும் கதை

கண்ணன் அம்பலம்
    • எழுதியவர், மு. நியாஸ் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞர் ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் நீர் மேலாண்மையில் அசத்திக் கொண்டிருக்கிறார். எத்தியோப்பியாவின் காடுகள் மலைகளுக்கு நடுவே உள்ளடங்கி இருக்கும் கிராமங்களின் முகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

தினம் தினம் கொரோனா குறித்த செய்திகள்தான் நம் உள்டப்பிகளையும், மனதையும் ஆக்கிரமிக்கிறது. எதிர்காலம் குறித்த அச்சம் திசையெங்கும் படர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் நம் அனைவருக்கும் ஊக்கம் தரும் உற்சாகம் தரும் செய்திகள் தேவைப்படுகின்றன. அப்படியான செய்தி இது.

வீரியமிக்க விதை எந்தநிலத்தில் பயிரிட்டாலும் வளரும் என்பார்கள். அப்படி ஆப்ரிக்காவில் காட்டு மரமாய் வளர்ந்து நிற்கும் மதுரை விதையின் கதை இது.

'கண்ணன் அம்பலம்' எனும் நம்பிக்கை விதை

மதுரை அலங்காநல்லூர் பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் அம்பலம். ஐ.ஏ.எஸ் கனவில் இருந்தவருக்கு அந்த கனவு கைகூடவில்லை. படித்த படிப்புக்கு எத்தியோப்பியாவில் பேராசிரியர் பணி கிடைக்கிறது. 2009 ஆம் ஆண்டு அங்குச் செல்கிறார். ஆனால், அந்த நாட்டின் நிலை இவருக்குத் துயரத்தைத் தருகிறது. அதனை மாற்ற முயற்சி செய்கிறார்.

கண்ணன் அம்பலம் மற்றும் எத்தியோப்பிய மக்கள்

கண்ணன் அம்பலம் சொல்கிறார், "நான் ஐ.ஏ.எஸ்-ஆக விரும்பியது மக்கள் பணி செய்வதற்காகதானே. ஆட்சியர் ஆக முடியாமல் போனதற்காக நோக்கத்தைக் கைவிட முடியுமா என்ன? ஆட்சியர் ஆகி இருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பேனோ, அதனை எல்லாம் செய்ய விரும்பினேன். அதனை உள்ளூர் மக்களைக் கொண்டு செய்தேன்," என்கிறார்.

மதுரை தியாகராயர் கல்லூரியில் இளங்கலை வேதியியலும், மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் முதுகலை படிப்பும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் எம்.பில் மற்றும் பி.எஹ்டி முடித்திருக்கிறார் கண்ணன் அம்பலம்.

"எப்படியாவது ஐ.ஏ.எஸ் ஆகவிட வேண்டும் என விரும்பினேன். மூன்று முறை முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை. சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, எத்தியோப்பியாவில் வொல்லேகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி கிடைத்தது," என்கிறார்.

அவர் பல்கலைக்கழகம் வளாகம் அருகே அவர் பார்த்த ஒரு காட்சிதான் எத்தியோப்பியா கிராமங்களின் உள்கட்டமைப்பு மாற காரணமாக இருந்திருக்கிறது.

ஆற்றை கடக்க மட்டும் அல்ல துயரத்தை கடக்கவும்

பலம் கட்டும் பணி

"ஒரு நாள் பணிக்கு செல்லும்போது செவக்கா கிராமத்தில் ஒரு வயதான அம்மா ஆற்றைக் கடக்கச் சிரமப்படுவதை பார்த்தேன். பின், மாணவர்களிடம் இது குறித்து பேசினேன். அப்போது அவர்கள் இது போன்று பல இடங்கள் இருப்பதாகவும், ஆற்றைக் கடக்கும் போது மரணங்கள் நிகழ்வதாகவும் கூறினார்கள்."

"குறுகலாகச் செல்லும் ஆறுதானே நாமே மரங்களைக் கொண்டு பாலம் அமைத்தால் என்ன என்று முடிவு செய்தேன். மாணவர்களும், உள்ளூர் மக்களும் உதவினார்கள். அவர்களின் உதவியுடன் முதல் பாலத்தை அமைத்தேன்," என்கிறார்.

ஆனால், அந்த பாலம் அமைத்த பிறகுதான் அவருக்கு வேறு பிரச்சனைகள் புரிந்திருக்கிறதது.

பாலம் அமைக்கும் பணி

கண்ணன் அம்பலம், "எத்தியோப்பியா கிராமங்களில் போக்குவரத்துக்குப் பிரதானமாக இருப்பது கழுதைகள்தான். இந்த மர பாலத்தை கழுதைகள் கடக்கும் போது அதன் கால்கள் மரக்கட்டைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு இடரி விழுந்தன. அதன்பின், அந்த மரபாலத்தை சிமெண்ட் பாலமாக மேம்படுத்தினோம்," என்று கூறுகிறார்.

அதன் பின் எத்தியோப்பியாவில் பல கிராமங்களில் இதுபோன்ற சிறு பாலங்கள் அமைத்திருக்கிறார்.

பாலங்கள் மட்டும் அல்ல பல இடங்களில் குடிநீர் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

எத்தியோப்பிய மக்கள்

"நான் இருக்கும் பகுதி மலைகள் சூழ்ந்த பகுதி. இங்கு ஏராளமான நீரூற்றுகள் உள்ளன. மக்கள் அந்த தண்ணீரை அப்படியே குடிக்கப் பயன்படுத்தி வந்தார்கள். அந்த தண்ணீர் அவ்வளவு தூய்மையாக இருக்காது. சிறு சிறு கட்டமைப்புகள் மூலம் தண்ணீரை வடிக்கட்டும் வசதி ஏற்படுத்தி அதனைக் குடிப்பதற்கு ஏதுவாக மாற்றினோம்," என்கிறார்.

43 சிறுபாலங்கள், 28 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள், 1 சிறு அணை ஆகியவற்றை கட்டமைத்துள்ளார் கண்ணன் அம்பலம்

பணமும் உழைப்பும்

இந்த பணிகளுக்காக பெரும்பாலும் தமது ஊதியத்தையே செலவிடுகிறார்.

கண்ணன் அம்பலம் மக்களுடன் இணைந்து கட்டமைத்த பாலம்

அவர், "ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த அதிகபட்சம் நூறு டாலர்கள் வரை செலவாகும். இதனை பெரும்பாலும் என் சம்பளப் பணத்திலிருந்தே செலவிடுவேன். சில சமயம் நண்பர்கள் தருவார்கள். பணத்தைவிடப் பிரதானம் உடல் உழைப்புதான். அதனை உள்ளூர் மக்கள் தருவார்கள். அவர்களால்தான் இவை சாத்தியமாகிறது," என்று தெரிவிக்கிறார்.

எத்தியோப்பிய மக்களுடன் இணைந்து நீர் சுத்திகரிப்பு கட்டமைத்தல்

உள்ளூர் மக்களை ஈடுபடுத்தாமல் நான் எந்த பணியையும் செய்வதில்லை. மக்களை ஈடுபடுத்தாமல் ஒரு பாலத்தையோ அல்லது குடிநீர் கட்டமைப்பையோ உருவாக்கினால், அவர்களுக்கு அதன் மீது உரிமை வராது. யாரோ கட்டியதுதானே என்ற மனப்பான்மை இருக்கும். அதனைப் பாதுகாக்க மாட்டார்கள். அதனால், அவர்களைக் கொண்டே ஒரு செயலுக்கு வடிவம் தருகிறேன் என்று கூறுகிறார் கண்ணன்.

பென்னிகுவிக்கிடமிருந்து பெற்ற ஊக்கம்

இப்படியான பணிகளில் விருப்பம் வர காரணம் என்ன என்ற நம் கேள்விக்கு, "பென்னிகுவிக்" எனும் பதத்தைப் பதிலாகத் தருகிறார் கண்ணன்.

எங்கிருந்தோ வந்து தனது சொந்த காசை செலவு செய்து நம் தாகத்தை தீர்த்து இருக்கிறார் பென்னிகுவிக். அவர்தான் எனது செயல்களுக்கான ஊக்கி என்று கூறும் கண்ணன், "படித்த படிப்பு மக்களுக்கு பயன்படத்தானே? எனக்கு ஒரு விஷயத்தில் கொஞ்சம் அறிவு இருக்கிறது. அந்த அறிவு சிலருக்குத் தேவைப்படுக்கிறது. அப்போது நாம் அதனைப் பகிர வேண்டும் அல்லவா. அதைத்தான் செய்தேன். இதனை தன்னடக்கமாகவெல்லாம் சொல்லவில்லை. உண்மையில் தனியனாகவும் நான் எதனையும் செய்துவிடவில்லை. என் மாணவர்கள், உள்ளூர் மக்கள் என ஒரு குழுவாக நாங்கள் செய்கிறோம். அந்த குழுவை இணைக்கும் பாலம் மட்டுமே நான்," என்கிறார் கண்ணன்.

எத்தியோபாவில் ஏரளமான அரசியல் பிரச்சனைகள் உள்ளன. ஆனால், இந்த மக்கள் எல்லாம் அவ்வளவு பாசமானவர்கள். அவர்களுக்கு நாம் உதவுகிறோம் என்று தெரிந்தால், அவர்கள் நமக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பார்கள். அவர்கள் அன்பினால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது என்று கூறுகிறார் கண்ணன் அம்பலம்.

இதுவரை 43 சிறுபாலங்கள், 28 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள், 1 சிறு அணை, 1 கழிப்பிடம் ஆகியவற்றைக் கட்டியிருப்பதாகக் கூறுகிறார் கண்ணன் அம்பலம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: