"தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 88% பேருக்கு அறிகுறிகள் தெரியவில்லை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் புதிதாக 805 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஏழு நபர்கள் இறந்துள்ளனர் என்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 118ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று இறந்தவர்களில் ஐந்து நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும் இரண்டு நபர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வந்தவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இவர்கள் அனைவருக்கும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், மூச்சுதிணறல் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் இறந்த 118 நபர்கள் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ததாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், ''தமிழகத்தில் கொரோனாவினால் இறந்த நபர்களில் 84 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி மற்றும் உயர் ரத்தஅழுத்தம் ஆகியவற்றோடு, கொரோனா தாக்கமும் இருந்தது. வெறும் 16 சதவீத நபர்களுக்கு மட்டுமே நாள்பட்ட நோய்கள் ஏதுமின்றி, கொரோனா தாக்கத்திற்கு பிறகு இறப்பு நிகழ்ந்துள்ளது,'' என்றார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

மேலும், கொரோனா ஆய்வு குறித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளான நபர்களில் 88 சதவீதம் நபர்கள் எந்தவித அறிகுறியும் தெரியாத ஏசிம்டமேடிக் நிலையில் இருந்தனர் என்றும் 12 சதவீதம் நபர்களுக்கு மட்டுமே அறிகுறிகள் தெரிந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அறிகுறிகள் தென்பட்ட நபர்களில் 40 சதவீத நபர்களுக்கு காய்ச்சல், 37 சதவீதம் நபர்களுக்கு இருமல், 10 சதவீதம் நபர்களுக்கு தொண்டை வலி, 9 சதவீதம் நபர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் 4 சதவீம் நபர்களுக்கு சளி இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், குஜராத், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களாக இருப்பது மற்றும் பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகளவில் செய்யப்படுவதால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது போன்ற தோற்றம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதங்களில், மகாராஷ்டிராவில் இருந்த வந்த 726 நபர்கள், குஜராத்தில் இருந்து வந்த 21 நபர்கள், டெல்லியில் இருந்த வந்த 15 நபர்கள், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 19 நபர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

மொத்தமாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 942 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது என்றார். இன்று ஒரே நாளில் பாதிப்புக்கு உள்ளான 805 நபர்களில் 93 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல், தமிழகத்தில் விமான சேவை தொடங்கியுள்ளதால், தமிழகத்திற்குள் 25 விமானங்கள் வரை மட்டுமே இயக்க வேண்டும் என மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: