ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ''ஆணையம் நீதி வழங்குமா என்பது கேள்விக்குறிதான்''

தூத்துக்குடி துப்பாக்கி சூடு
படக்குறிப்பு, துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களிலேயே 17 வயதிருந்த மாணவி ஸ்னோலின்தான் மிகவும் இளையவர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 2018-ஆம் ஆண்டு மார்ச்22ல் போராட்டம் நடத்தி, துப்பாக்கிச் சூட்டிற்கு 13 நபர்கள் பலியான இரண்டாம் ஆண்டு நினைவு நாள், அமைதியாக கடைப்பிடிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது இடங்களில் நினைவேந்தல் கூட்டங்கள் சிறிய அளவில் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தங்களது வீடுகளில், தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் பதாகைகள் வைத்து மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் நடத்தினர்.

பாத்திமா நகர் குடியிருப்பு பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றி நினைவேந்தல் அனுசரித்த பொதுமக்கள், தூத்துக்குடியில் சுதந்திரமான, சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதற்காக 13 நபர்கள் உயிர்கொடுத்து தியாகம் செய்தனர் என்று கூறி அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
படக்குறிப்பு, ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது

காற்று, நிலம், நீர் என சுற்றுச்சூழலை ஸ்டெர்லைட் தாமிர ஆலை மாசுபடுத்தியுள்ளதாக கூறி, பலருக்கும் புற்றுநோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகக்கூறி 2018ம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் 100 நாட்கள் அமைதிவழியில் மக்கள் போராட்டம் நடத்தினர். 100வது நாளன்று ஊர்மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்துவந்த மக்கள் திரள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 13 நபர்கள் கொல்லப்பட்டனர். பலரும் காயமடைந்தனர்.

இதனை அடுத்து, உடனடியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் எப்படி நடந்தது, யார் உத்தரவின் பேரில் மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விமர்சனங்கள் எழுந்தன . தமிழக அரசு இதற்கு தீர்வு காண்பதாகக்கூறி ஒர் ஆணையத்தை மார்ச் மாதமே அமைத்தது. அந்த ஆணையத்தின் விசாரணையில் இதுவரை 492 நபர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும் அரசாங்க தரப்பில் இன்னும் விசாரணை நடத்தவேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்த 13 நபர்களில் இளவயது நபர் 17 வயது ஸ்னோலின். வழக்கறிஞராக கனவு கண்ட ஸ்னோலினின் இறப்பு, அவரின் குடும்பத்துக்கு பெரிய இழப்பாக மாறிவிட்டது. ''எங்கள் பகுதியில் சிறிய அளவில் நினைவு கூட்டம் நடத்தினோம்.எல்லோருக்கும் சாப்பாடு வழங்க முடியாது என்பதால், உணவு பொட்டலங்களை முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லங்களுக்கு கொடுத்தோம். 13 நபர்களை இழந்த வருத்தம் இப்போதும் உள்ளது. உள்ளூர் மக்கள் எல்லோரும் நினைவேந்தல் நடத்தி எங்களின் துக்கத்தில் பங்குகொள்கிறார்கள்,'' என்றார் ஸ்னோலினின் சகோதரர் காட்வின்.

ஸ்டெர்லைட்

பட மூலாதாரம், Reuters

கடந்த ஆண்டு ஸ்னோலின் குடும்பத்தார் நினைவேந்தல் கூட்டத்திற்கு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மட்டுமல்லாது, காவல்துறையினரையும் அழைத்து நிகழ்வை நடத்தியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நினைவேந்தல் சமயத்தில் பிபிசி தமிழிடம் பேசிய ஸ்னோலினின் தாய் வனிதா, ''இனி என் மகளுக்கு கல்யாணமா நடத்தப்போறேன். முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எல்லோரையும் அழைச்சிருக்கேன். எத்தனையோ மக்கள் என் மகளுக்காக கண்ணீர் விட்டாங்க. எளிமையாக சர்ச்சில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எல்லோரும் வரணும். அரசு அதிகாரிங்க, போலீஸ்காரங்களையும் அழைச்சிருக்கேன். அவுங்கள மன்னிச்சிட்டேன். அன்பு மட்டும்தான் நிஜம்னு என்னோட ஸ்னோலின் சொல்லுவா. அவளுக்காக, அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறேன்,'' என கண்ணீருடன் பேசியது பலரையும் நெகிழவைத்தது.

ஸ்டெர்லைட்

அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (சிபிஎம் கட்சி)தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பூமயில் பேசும்போது ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்த இழப்பில் இருந்து மனரீதியாக மீண்டு வரவில்லை என்றார். ''கொரோனா ஊரடங்கு இருப்பதால் எங்கள் கட்சி அலுவலகத்தில் நினைவேந்தல் நடத்தினோம். ஸ்டெர்லைட் போராட்டத்தில் அமைதி வழியால் போராடியவர்கள் துப்பாக்கிச்சூட்டிற்கு இறையானார்கள். இன்றுவரை பல குடும்பங்கள் இழப்பிலிருந்து மீளவில்லை.ஒரு சிலருக்கு அரசாங்க வேலை கிடைத்துள்ளதால், ஓரளவு தேறியுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் அமைத்த ஆணையம் எப்போது அறிக்கை சமர்ப்பிக்கும், நீதி எப்போது கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான்,''என்கிறார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை என்று தெரிவித்துள்ளார். கனிமொழியின் ட்விட்டர் பதிவில், ''போராடிய மக்களின் உயிர் குடித்தது அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய ரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா? இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம்,'' என பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: