கொரோனா ஊரடங்கால் உணவில்லை: மும்பை காட்டுக்குள் தவிக்கும் தமிழர்கள்

கொரோனா ஊரடங்கால் உணவில்லை: மும்பை காட்டுக்குள் தவிக்கும் தமிழர்கள்

பட மூலாதாரம், Mausam.A

    • எழுதியவர், கிருத்திகா கண்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ள சூழலில், வேலையின்மை, நோய்த்தொற்று அபாயம், அத்தியாவசியத் தேவைகள் பற்றாக்குறை என பல பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ள, மும்பையின் ஆரே வனப்பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அச்சுறுத்தும் அடுத்த பிரச்சனை பருவமழை.

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அங்கு முறையான வீட்டு வசதி இல்லாமல் வசிக்கும் தமிழர்கள் ஊர்திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் மும்பையில் தினக்கூலிகளாக பணியாற்றுகிறார்கள். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் அங்கு பணிக்கு செல்லும் மக்கள், மே மாதம் மீண்டும் தமிழகம் திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வசிப்பதற்கு முறையான வீடுகள் கிடைக்கும் வாய்ப்பும், பொருளாதார சூழலும் ஏதுவாக இல்லை என்பதால், மகாராஷ்டிராவில் மழைக்காலம் தொடங்கும்போது, இவர்கள் தமிழகத்திற்கே திரும்பி விடுகின்றனர்.

"நாங்கள் இங்கு நடக்கும் பல பணிகளுக்கு தினக்கூலிகளாக செல்கிறோம். தொடர்ந்து மும்பையிலேயே நாங்கள் வசிப்பதில்லை என்பதால், இந்த ஆரே வனப்பகுதியில் தார்ப்பாய்களைக் கொண்டு குடிசைகள் அமைத்து வாழ்கிறோம். ஆண்டுதோறும், பருவமழை ஆரம்பிக்கும் சமயத்தில் இங்கிருந்து கிளம்பி விடுவது எங்களின் வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு அதைத் தடுத்து விட்டது" என்கிறார் மோகன்ராஜ்.

கொரோனா ஊரடங்கால் உணவில்லை: மும்பை காட்டுக்குள் தவிக்கும் தமிழர்கள்

பட மூலாதாரம், Mausam.A

மோகன்ராஜ் போல சுமார் 800க்கும் மேற்பட்டோர் அங்கு வசிக்கிறார்கள். சிலர் குடும்பத்துடன் இங்கு இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக வேலையும் இல்லை, பணமும் இல்லை என்று கூறும் இவர்கள் தற்போது மழை வந்தால் தங்களுக்கென்று இடமும் இல்லை என அஞ்சுகிறார்கள்.

"இன்னும் இரண்டு வாரத்தில் பருவமழை ஆரம்பமாகி விடும் என கூறுகிறார்கள். இந்நிலையில் நாங்கள் தொடர்ந்து இங்கு இருந்தால், மழையில் மூழ்கிவிடுவோம். எங்களின் வீடும் வெறும் தார்ப்பாயால் மூடப்பட்ட ஒன்று. இது மழைக்கு தாங்காது. இப்போதே பலத்த காற்று அவ்வப்போது வீசத் தொடங்கி விட்டது. செவ்வாயன்று அடித்த காற்றில் கூட மாமரக்கிளை உடைந்து விழுந்து ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது" என்கிறார் தனலட்சுமி.

தற்போது, கொரோனா நோய்த்தொற்றால், அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளதோடு, பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் தமிழகத்திலிருந்து ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஆனால், தமிழகத்திற்கு வந்து சேர்வதற்கான ரயில்களுக்கான சேவை வியாழக்கிழமையோடு நிறுத்தப்பட்டு விட்டது.இதனால் இவர்கள் நேரடியாக மும்பையிலிருந்து சென்னை வந்து சேர எந்த வசதியும் இல்லை.இந்த மக்களுக்கு அருகிலுள்ள சிலர் உதவிகள் செய்கின்றனர்.

சமீபத்தில் கூட, சில தன்னார்வலர்கள் இவர்களுக்கு உணவுக்கான பொருட்களை கொடுத்துள்ளனர்.

"பத்து நாட்களுக்கு முன்பு, ஒரு சிலர் எங்களுக்காக உணவு சமைக்க அரிசி போன்ற பொருட்களை கொடுத்தார்கள். தினமும் வேலைக்கு சென்றால்தான் எங்களுக்கு சம்பளம். அதைக்கொண்டே நாங்கள் உணவு சாப்பிட்டு வந்தோம். தற்போது அதற்கு வாய்ப்பில்லாத நிலையில்தான் இந்த பொருட்கள் கிடைத்தன. இந்த பொருட்கள் உதவியாகதான் இருக்கின்றன. ஆனால், எங்களுக்கு உணவு வேண்டாம். மழையிலிருந்து தப்பித்து தமிழகத்திற்கு போனால் போதும். இந்த மழையில் செல்வதற்கான எந்த வழியும் இல்லாமல் இருப்பதால், குழந்தைகளை வைத்துக்கொண்டு பயத்தில்தான் இருக்கிறோம்" என்கிறார் தனலட்சுமி.

கொரோனா ஊரடங்கால் உணவில்லை: மும்பை காட்டுக்குள் தவிக்கும் தமிழர்கள்

பட மூலாதாரம், Mausam.A

"இங்குள்ள மக்களுக்கும் எங்களுக்கும் மொழி வேறுபாடு இருப்பதால், எங்களுக்கு தேவையான உதவிகளைக்கூட அரசு அதிகாரிகளிடம் எங்களால் கேட்டுப் பெற முடியவில்லை. மழை வருவதற்குள் எங்களுக்கு சரியான வழி தேவை," என்கிறார் மோகன்ராஜ்." தமிழக அரசு எங்களை ஊருக்கு அழைத்து சென்றுவிட்டால் போதும். இல்லையென்றால், கொரோனா பாதிக்கவில்லை என்றாலும், வரவிருக்கும் பருவமழையால் ஏற்படும் மலேரியா தொற்றில் கண்டிப்பாக நாங்கள் மாட்டிக்கொள்வோம்." என்கிறார் அவர்.

காணொளிக் குறிப்பு, "உணவு வேண்டாம், தமிழ்நாட்டுக்கு போனால் போதும்" - மும்பையில் தவிக்கும் தமிழர்கள்

அந்த மக்களுக்கு உதவிகள் செய்து வருகிற சிலரில் மும்பையை சேர்ந்த மௌசம் ஒருவர்.

"நானும் இந்த பகுதியில் வசிக்கிறேன். ஒருநாள் இங்கிருந்த கடையில், ஒருவர் ஐந்து ரூபாய் கொடுத்து எதாவது சாப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்ததை பார்த்தேன். அந்த கடைக்காரர் அவரை விரட்டியதால், அவர் யார் என விசாரித்து உதவ வந்தேன். அப்போதுதான், இந்த இடத்தில் இவ்வளவு பெரிய ஒரு தொழிலாளர்கள் கூட்டம் இருப்பதை பார்க்க முடிந்தது."

Banner image reading 'more about coronavirus'

"இவர்களுக்கு உள்ளூர் மொழி தெரியாததால், பல சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். இந்த மாவட்ட அதிகாரிகளிடம் உதவிகள் கேட்டுள்ளோம். ஆனாலும், தமிழக அரசு இந்த மக்களை அவர்களின் ஊருக்கு அழைத்துச்செல்ல சிறப்பு ரயில் எதும் இதுவரை விடவில்லை என்பதால், இங்குள்ள மகாராஷ்டிர மாநில அதிகாரிகளாலும், இவர்களை ஊருக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது," என்கிறார் மௌசம்.

கேரளாவில் மழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்து மும்பையிலும் பருவமழை தொடங்கும் என்பதால், இந்த மக்கள் எங்கு செல்வது, என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: