கொரோனா ஊரடங்கு: வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுகிறீர்களா? - இதனை படியுங்கள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "சிறப்பு ரெயில்களில் எத்தனை பயணிகள் செல்லலாம்?"
சிறப்பு ரெயில்களில் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
ஊரடங்கின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகளை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக ரெயில்வே அமைச்சகம் கடந்த 1-ந் தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. இதற்கான செலவை சம்பந்தப்பட்ட மாநிலங்களே ஏற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
90 சதவீத பயணிகள்
* சிறப்பு ரெயில்கள் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தூரத்துக்கு இயக்கப்படுவதால், இடையில் எந்த இடத்திலும் நிற்காமல் செல்லும்.
* ஒரு ரெயிலில் சுமார் 1,200 பயணிகள் வரை பயணிக்கலாம். 90 சதவீதத்துக்கும் குறையாத அளவுக்கு அதில் பயணிகளை ஏற்றி அனுப்பவேண்டும்.
* இதற்கான டிக்கெட்டுகளை ரெயில்வே அச்சிட்டு மாநில அரசிடம் வழங்கும். மாநில அரசு அந்த டிக்கெட்டுகளை பயணம் செய்பவர்களிடம் கொடுத்து டிக்கெட் கட்டணத்தை வசூலித்து ரெயில்வேயிடம் வழங்க வேண்டும்.
* உரிய பரிசோதனைக்கு பின், பயணம் செய்வதற்கான டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
* பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை அவர்களை அனுப்பி வைக்கும் மாநில அரசுகளே வழங்கவேண்டும்.
உடல் வெப்ப பரிசோதனை
* முக கவசம் வழங்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்துவதோடு, ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
* பயண நேரம் 12 மணி நேரத்துக்கும் மேல் நீட்டித்தால் ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படும்.
* பயணிகள் குறிப்பிட்ட இடத்தை சென்று அடைந்ததும் அந்த மாநில அரசு அதிகாரிகள் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை அனுப்பிவைக்க வேண்டும்.
* இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால் சிறப்பு ரெயில்கள் இயக்குவதை நிறுத்தி வைக்கும் உரிமை ரெயில்வே நிர்வாகத்துக்கு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தினமணி: தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயா்ந்தது

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தின் நிதிநிலையைச் சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசு உயா்த்தியுள்ளது. இந்த வரி உயா்வால் தமிழகத்தில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.2.97-ம், டீசல் விலையில் ரூ.2.31-ம் உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வுகள் திங்கள்கிழமை (மே 4) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
எரிபொருள்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி உயா்வு குறித்த உத்தரவை வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளா் (முழு கூடுதல் பொறுப்பு) என்.முருகானந்தம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.
பெட்ரோலியப் பொருள்கள் மீது இப்போதுள்ள 34 சதவீத மதிப்புக் கூட்டு வரிக்குப் பதிலாக, 15 சதவீதம் வரியாக மாற்றப்பட்டு, அதனுடன் லிட்டருக்கு ரூ.13.02 கூடுதலாகச் சோ்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று, டீசல் மீது 25 சதவீத மதிப்புக் கூட்டு வரிக்குப் பதிலாக 11 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதனுடன் லிட்டருக்கு ரூ.9.62 கூடுதலாகச் சோ்க்கப்படுகிறது. இந்த புதிய வரி விதிப்பு நடைமுறைகள் அனைத்தும் திங்கள்கிழமை காலையில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளன.
விலை உயா்வு: மதிப்புக் கூட்டு வரி உயா்வால், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.2.97-ம், டீசல் விலையில் ரூ.2.31-ம் அதிகரிக்கும். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.72.28 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மதிப்புக் கூட்டு வரி உயா்வால், ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.75.25 ஆக உயா்ந்துள்ளது.
இதேபோன்று, டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.72 ஆக விற்கப்பட்டு வந்தது. இதன் விலையில் லிட்டருக்கு ரூ.2.31 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.68.03 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று தாக்குதலுக்குப் பிறகு தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு மதிப்புக் கூட்டு வரியை உயா்த்தி இருப்பதன் மூலமாக பெட்ரோல், டீசல் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
எவ்வளவு கிடைக்கும்: தமிழக அரசுக்கு சொந்த வரி வருவாயைத் தரக் கூடிய துறைகள் மிக மிகக் குறைவு. அவற்றில் மதுபானங்கள் விற்பனை, பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி விதிப்பு ஆகியன குறிப்பிடத்தக்க அளவு வருவாயை ஈட்டித் தருகின்றன. டாஸ்மாக் கடைகள் அடைப்பு, பத்திரப்பதிவு நிறுத்தம் ஆகியவற்றால் மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய சொந்த வரி வருவாய்கள் முற்றாக நின்றுள்ளன. இந்த நிலையில், தமிழக அரசுக்கு வருவாயை உயா்த்த இருக்கக் கூடிய ஒரே வாய்ப்பான பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயா்த்தியுள்ளது.
ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்: மதிப்புக் கூட்டு வரி உயா்த்தப்பட்டதால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.26 முதல் 30 ஆயிரம் கோடி அளவுக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தனிநபா் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து எரிபொருள் பயன்பாடு உயரும்போது இந்த வருவாய் அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஒரு லிட்டா் பெட்ரோல் மீது 19.48-ம், டீசல் மீது 15.33-ம் மத்திய அரசு வரியாக விதிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்து தமிழ் திசை: நொறுக்குத் தீனிக்காக ரூ.2.22 லட்சத்தை இழந்த மும்பை தொழிலதிபர்
மும்பை புறநகர் பகுதி போரிவலியைச் சேர்ந்த 40 வயதான தொழிலதிபர் ஒருவர், ஆன்லைனில் உணவுப் பொருட்கள் ஆர்டர் செய்திருக்கிறார். டெலிவரி செய்யப்பட்ட பிறகு அவற்றில் ரூ.400 மதிப்புள்ள 2 நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் குறைந்திருக்கின்றன. அதுபற்றி விசாரிக்க அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார்.
சேவை மைய தொடர்பு எண்ணை கூகுளில் தேடி தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த எண் இணைய மோசடியில் ஈடுபடுபவர்கள் அந்நிறுவனத்தின் பெயரில் பதிவேற்றிய போலி தொடர்பு எண்ணாகும். அந்த எண்ணை தொடர்பு கொண்ட தொழிலதிபரிடம் மோசடி நபர், லாவகமாக பேசி வங்கி விவரங்களை வாங்கியுள்ளார். வங்கிக் கணக்கு எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம் கார்டு எண், சிவிவி எண் என யாருக்கும் பகிர கூடாத அனைத்து விவரங்களையும் கொடுத்திருக்கிறார்.
பின்னர் மோசடி நபர் இவரது எண்ணுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி அதை வேறு எண்ணுக்கு அனுப்புமாறு கூறியிருக்கிறார். பின்னர் தொழிலதிபரின் எண்ணுக்கு வந்த ஒன் டைம் பாஸ் வேர்டையும், அவரது யுபிஐ பரிவர்த்தனை ரகசிய எண்ணையும் கேட்டிருக்கிறார். அவற்றையும் தொழிலதிபர் வழங்க, அவரது கணக்கில் இருந்து ரூ.2.25 லட்சத்தை எடுத்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக தொழிலதிபர் புகார் அளிக்க எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இணைய மோசடி புலனாய்வு அதிகாரி ரிதேஷ் பாட்டியா இதுகுறித்து கூறுகையில், "இந்த ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற மோசடிகள் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலும், பல மோசடி செய்திகள் வந்தாலும் தொடர்ந்து எப்படிதான் ரகசிய விவரங்களைப் பகிர்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












