கொரோனா வைரஸ் ஊரடங்கு: நரேந்திர மோதி அமைச்சர்களுடன் ஆலோசனை

பட மூலாதாரம், NICHOLAS KAMM / getty images
இந்திய அளவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த, இன்றைய 10 முக்கியத் தகவல்களின் தொகுப்பு.
1.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு முடிவடையும் மே 3ஆம் தேதிக்கு பிறகு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமைதி ஷா, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
2.கோவிட்-19 தொற்று அதிகமாக உள்ள 'சிவப்பு குறியீடு மாவட்டங்கள்' தவிர, மிதமான பாதிப்புள்ள 'ஆரஞ்சு குறியீடு மாவட்டங்கள்' மற்றும் குறைவான பாதிப்புள்ள 'பச்சைக் குறியீடு மாவட்டங்கள்' ஆகிய பகுதிகளில், மே 3க்கு பிறகு ஊரடங்கு கணிசமான அளவில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3.இந்தியாவில் புதிதாக 1993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இன்று மாலை 4 மணியளவில் இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 35,043 ஆக உயர்ந்துள்ளது.
4.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸால் 73 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1147 ஆக உள்ளது.
5.இதுவரை 8,888 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது இந்தியாவின் மொத்த கொரோனா தொற்றுகளில் 25.37 % விழுக்காடு அளவாகும்.

6.இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டுள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் , மாணவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் சேவையை பயன்படுத்த இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
7.இந்தியாவில் 2.01 கோடி பாதுகாப்பு உடைகள் (PPE) தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும்,அதனை பூர்த்தி செய்யும் வகையில் 2.22 கோடி பாதுகாப்பு உடைகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
8.தற்போது 19,398 வெண்டிலேட்டர்கள் இந்தியாவில் இருப்பதாகவும், மேலும் 60,884 வெண்டிலேட்டர்களுக்கு ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதில் 59,884 வெண்டிலேட்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9.இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய தனிநபர் இடைவெளி குறித்த விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
10.கொரோனாவால் அதிகம் பாதிகப்பட்டுள்ள முதல் ஐந்து மாநிலங்கள் முறையே மகராஷ்டிரா, குஜராத்,டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை உள்ளன. தமிழகம் ஆறாம் இடத்தில் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












