You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாம்பே ஓ குரூப்: கர்ப்பிணிக்கு தேவைப்பட்ட அரியவகை ரத்தம் - உதவி செய்த புதுச்சேரி காவலர்
கர்ப்பிணியான மகளை காப்பாற்ற 'பாம்பே ஓ குரூப்' என்ற அரிய வகை ரத்தப் பிரிவை தேடி அலைந்த தாய்க்கு உதவி செய்து தாய், சேய் இருவரின் உயிரையும் காப்பாற்ற உறுதுணையாக இருந்துள்ளார் காவலர் ஒருவர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமியின் மனைவி விஜயலட்சுமிக்கு வயது 25). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவ சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பாம்பே ஓ பிரிவு (HH Blood Group) என்ற அரிய வகை ரத்தப் பிரிவு என்று கண்டறிந்தனர்.
அரிய வகை ரத்தப்பிரிவு
விஜியலட்சுமிக்கு தேவைப்படும் ரத்தம் விழுப்புரத்தில் கிடைக்காத காரணத்தினால், மருத்துவர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரைத்தனர். விஜயலட்சுமியை காப்பாற்ற அவரது தாயார் அலமேலு ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தார்.
விஜயலட்சுமிக்கு ரத்தம் குறைவாக உள்ளதால் அறுவை சிகிச்சையின் போது கூடுதல் ரத்தம் தேவைப்படும் என்பதாலும், அவருக்கு ரத்ததில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கின்ற காரணத்தினாலும், பாம்பே ஓ குரூப் ரத்தத்தை ஏற்பாடு செய்தால் மட்டுமே தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்று விஜயலட்சுமியின் தாயார் அமலமேலுவிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உதவிய கோரிய தாய்
இதனைத் தொடர்ந்து, பரிட்சியம் இல்லாத இடத்தில் எப்படி இந்த அரிய வகை இரத்தத்தை ஏற்பாடு செய்யப்போகிறோம் என செய்வதறியாது, மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் கண்ணீர் மல்க தனது மகளைக் காப்பாற்ற உதவும் படி கேட்டுள்ளார்.
மருத்துவமனை வாயிலில் செல்வம் என்ற காவலர் அவரது உறவினர் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்ததால், அங்கே காத்துக்கொண்டிருந்தார். அப்போது விஜயலட்சுமியின் தாயார் காவலர் செல்வத்திடம், தனது மகளைக் காப்பாற்ற இந்த பாம்பே ஓ பிரிவு ரத்தத்தை எப்படியாவது ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதைக்கேட்ட காவலர் செல்வம், அவரது நண்பர்களுக்கும், சமுக வலைத்தளத்திலும், தன்னார்வல ரத்த அமைப்புகளுக்குத் தெரிவித்தார். தொடர்ந்து இடைவிடாது தேடியதில், புதுச்சேரியில் தன்னார்வல ரத்த அமைப்பு ஒன்றை ஒருங்கிணைத்து வரும் பிரபு என்பவர் மூலமாக புதுச்சேரியில் சந்தோஷ் என்ற இளைஞருக்கு பாம்பே ஓ பிரிவு இரத்தம் இருப்பது கண்டறியப்பட்டு, அவரை அழைத்து வந்து இரத்தம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர்.
இதுகுறித்து சிகிச்சை பெற்ற விஜயலட்சுமியின் தாயார் அலமேலுவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், "தெரியாத ஊரில் உதவிக்கு யாரைக் கேட்பது என்று தெரியாமல் மருத்துவமனை வெளியே இருந்த அனைவரிடமும் அழுது கெஞ்சினேன். அப்போது அருகே ஒருவர் இருந்தார். அவர் சீருடையில் இல்லாத காரணத்தினால் காவலர் என்று அப்போது எனக்குத் தெரியாது. அவரிடம் சென்று எனது மகளை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். உன் மகளைப் போல நினைத்து அவளை எப்படியாவது காப்பாற்றிக்கொடு என்று அவரை தெய்வம் போல நினைத்து காலைப்பிடித்து வணங்கிக் கேட்டேன். தொடர்ந்து அவரை விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவரும் இரண்டு நாட்களாகத் தேடி எனது மகளின் பிரசவ அறுவை சிகிச்சைக்கு அந்த இரத்தத்தை ஏற்பாடு செய்து கொடுத்து, எனது மகளையும், குழந்தையையும் காப்பாற்றினர். "என தெரிவித்தார்.
மேலும் காவலர் செல்வத்திடம் பேசியபோது, அவர் கூறியதாவது, "எனது அண்ணி பிரசவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனது அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால், நான் விடுமுறை எடுத்து அவர்களுக்கு உதவியாக இருக்க அங்கே காத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென அந்த வயதான பெண் எனது மகளைக் காப்பாற்றிக் கொடுக்கும் படி என்னிடம் கெஞ்சினார். அன்று தான் எனக்கு பாம்பே ஓ பிரிவு என்ற ஒரு ரத்த வகை இருப்பது தெரிந்தது. எனக்கு அவர் கூறியபோது அந்த ரத்த வகையை ஏற்பாடு செய்யமுடியும் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால், அந்த தாய் என்னை விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தார் அவர்களுக்கு உதவி செய்ய முடிந்தது எனது பாக்கியம்." என நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
பாம்பே ஓ பிரிவு ரத்தம்
பாம்பே ஓ பிரிவு ரத்தம் மிகவும் அரிதான ஒன்று. இது இரண்டரை லட்சம் மக்களில் ஒருவருக்கு மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய நாட்டில் முதன் முதலில் இந்த HH பிரிவு இரத்த வகையானது, 1952 ஆம் ஆண்டு மும்பையில் கண்டறியப்பட்டதால் அதற்குப் பாம்பே இரத்த பிரிவு (Bombay Blood Group) என்று அப்போது பெயரிட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: