டெல்லி கொரோனா முகாமில் கவனிப்பு இல்லாமல் உயிரிழந்த இரு தமிழர்கள்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினகரன்: டெல்லி கொரோனா முகாம்: கவனிப்பு இல்லாமல் உயிரிழந்த இரு தமிழர்கள்

டெல்லியில் உள்ள கொரோனா முகாமில் தங்கியிருந்த இரண்டு தமிழர்கள் போதிய கவனிப்பு இல்லாமல் உயிரிழந்ததாக தினகரன் நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.

இவர்கள் ஏற்கனவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

டெல்லியில் துவாரக்கா, சுல்தான்புரி மற்றும் நரேலா உள்ளிட்ட இடங்களில் கொரோனா முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் தமிழ்நாடு, உ.பி, கேரளா, ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மலேசியா, கிர்கிஸ்தான், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினரும் தங்கவைக்கட்டுள்ளனர். இவர்களுக்கு கோவிட் 19 வைரஸ் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனையில் சிலருக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது தெரியவந்தது. கொரோனா பாசிட்டிவ் உள்ளவர்களும் இதே முகாமில் தனிப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று இல்லாதவர்களும் இங்கையே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 அல்லது 5 பேர் மருத்துவமனைகளுக்கும் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இருதய நோய் மற்றும் நீரழிவு நோய் உள்ளவர்கள் போதிய மருத்துவ வசதிகள் இன்றி, மருந்துகள் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட இருவர் டெல்லி சுல்தான்புரியில் உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல் 22ம் தேதி முகமது முஸ்தப்பா என்பவர் உயிரிழந்துள்ளார். ஹாஜி ரிஸ்வான் சுமார் 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இதுகுறித்து டெல்லி முதல்வரும் ஆளுநரும் விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி சிறுபான்மை ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது என தினகரன் நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.

தினமணி: சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகள் : கொரோனா பரப்ப வீசப்பட்டதா?

சென்னை கொருக்குப்பேட்டை சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகள் கொரோனா பரவுவதற்காக வீசப்பட்டிருப்பதாக வதந்தி பரவியது. நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50 ரூபாய் நோட்டும் சாலையில் கிடந்தது. இந்த ரூபாய் நோட்டுகளை புகைப்படம் எடுத்து, இது கொரோனா தொற்று பரப்புவதற்காக அப்பகுதியில் வீசப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன.

இது குறித்து தகவல் அறிந்த ஆர்.கே நகர் போலீசார் ரூபாய் நோட்டுகள் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்த ரூபாய் நோட்டுகளையும் அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்தினர்.

இந்த வதந்தியை பரப்பிய நபர்களை கண்டுபிடிப்பது குறித்து காவல் துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் இது போன்ற வதந்தி பரவ காரணமாக இருந்த ரூபாய் நோட்டுகளை காவல் துறையினர் சேகரித்து எரித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் என தினமணி நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: பொருளாதாரத்தை காக்க வேண்டும் - சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம்

சிறு குறு தொழிலாளர்களை காப்பதற்கு 1 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோதியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை செய்ய தவறினால் சிறு குறு தொழில்களில் ஏற்படும் பாதிப்பு இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் வேலையும் ஊதியமும் இன்றி தவித்து வரும் தொழிலாளர்களுக்கு இந்த நெருக்கடி நிலையில் 24 மணிநேரமும் உதவி செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு சோனியா பிரதமருக்கு எழுதும் ஏழாவது கடிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: