You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிம் ஜாங்-உன் எங்கே? வட கொரிய நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் அவருடையதா?
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் உடல்நலம் குறித்தும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கிம் ஜாங்- உன்னிற்கு சொந்தமானது என்று கருதப்படும் ரயில் ஒன்று அந்நாட்டின் உல்லாச நகரம் என்று கூறப்படும் வான்சன் நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக ராய்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
வாஷிங்டனில் இருந்து இயங்கும் வட கொரிய கண்காணிப்பு திட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இதுதொடர்பான செயற்கைக்கோள் படங்கள் கிடைத்துள்ளன.
ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் "தலைவர்களுக்கான ரயில் நிலையத்தில்" அந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம், கிம் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தும் ரயில் நிலையம் என்றும் அந்த கண்காணிப்பு திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ரயில் கிம் ஜாங்-உன்னின் ரயிலாக இருக்கலாம் என்றாலும் அதனை தனிப்பட்ட விதத்தில் உறுதி செய்ய முடியவில்லை என்று ராய்டர்ஸ் கூறியுள்ளது. கிம் ஜாங்-உன், வான்சன் நகரத்தில்தான் இருந்தாரா என்பதையும் உறுதிபடுத்த முடியவில்லை என்று அந்த செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது
இந்நிலையில் ரயில் வான்சனில் நிற்பதால், வட கொரியத் தலைவர் அங்குதான் இருப்பார் என்பதற்கு அது ஆதாரமாக அமையாது என்றும் இதைவைத்து அவரது உடல்நலம் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது எனவும் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள உல்லாச நகரமாக வான்சனில் தலைவர் கிம் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த சர்ச்சை?
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை.
இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பின் பொது இடங்களில் கிம் தோன்றவில்லை
இந்நிலையில், கிம் ஜான்-உன்னிற்கு மருத்துவ ஆலோசனை வழங்க சீனா, வட கொரியாவிற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிம் ஜான் உன்னிற்கு பிறகு யார் அந்த நாட்டின் தலைவராக இருப்பார் என்று தெளிவாக தெரியவில்லை என்பதால், சர்வதேச அளவில் இது கவனத்தை பெற்றுள்ளது.
ஆனால், வட கொரியதலைவர் குறித்து வெளியாகும் அறிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த அறிக்கைகைள் தவறானதாக இருக்கலாம் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
36 வயதான கிம் ஜாங்-உன் மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்படியான எந்த அறிகுறிகளும் வட கொரியாவில் நிலவவில்லை என தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: