You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் கொரோனா வைரஸ்: 170 'ஹாட்ஸ்பாட்' மாவட்டங்கள்
இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் 170 மாவட்டங்கள் 'ஹாட்ஸ்பாட்' மாவட்டங்களாக, அதாவது கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும்; கொரோனா தொற்று தீவிரமாக இருக்கும் மாவட்டங்கள், அதிக தீவிரம் இல்லாமல் இருக்கும் மாவட்டங்கள், மற்றும் கொரோனா தொற்று இல்லாமல் இருக்கும் மாவட்டங்கள் என மூன்றாக பிரிக்கப்படும் என இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் லாவ் அகர்வால்.
இந்தியாவில் தற்போது 10,197 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்றும், 1343 பேர் குணமடைந்துவிட்டனர் என்றும், 392 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் இதுவரை சமூகப் பரவல் ஏற்படவில்லை என்றும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கரிடம் ஹாட்ஸ்பாட் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஒரு மாவட்டத்தில் 15 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அது 'ஹாட்ஸ்பாட்' எனப்படுகிறது என்றார்.
அந்த கணக்குப்படி தமிழகத்தில், சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட மொத்தம் 25 மாவட்டங்களில் 15 நபர்களுக்கும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வெளவால்களிடமிருந்து...
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள இடங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
"சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வுப்படி, கொரோனா வைரஸ் வெளவால்களில் தொடங்கியிருக்கும் என்றும், அதன்பின் அதன் அது எறும்புண்ணிகளுக்கு சென்றிருக்கும் என்றும் பின் அது மனிதர்களுக்கு பரவி இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது," என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ராமன் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்
"நாங்கள் கண்காணித்த வரையில், இருவிதமான வெளவால்கள் உள்ளன என்றும், அது கொரோனா வைரஸை கடத்துகிறது என்றும் ஆனால் அவை மனிதர்களை பாதிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது. வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவது மிக அரிதானது அது ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறக்கூடியது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விரைவாக நடவடிக்கை
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன், இந்தியாவில் சுமார் 400 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க தொடங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஜனவரி 17ஆம் தேதி முதலே சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
அடுத்து வரக்கூடிய 2-3 வாரங்கள் மிக முக்கியமான காலம் என்றும் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: