You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறதா சென்னை மாநகராட்சி?
சென்னை மாநகராட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்து செயல்படக்கூடாது என செவ்வாய்க்கிழமை மாலை முதல் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டுவருகிறது. என்ன காரணம்?
ஏப்ரல் 12ஆம் தேதியன்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் ஆர்.எஸ்.எஸால் நடத்தப்படும் பாரதி சேவா சங்கம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவருவதாகக் கூறப்பட்டிருந்தது.
அதற்கு முன்பாக வந்த செய்தியில், ஆர்எஸ்எஸின் தன்னார்வலர்கள் சென்னை மாநகராட்சிக்கு உணவு விநியோகத்தில் உதவுவதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையான பிறகு, தாங்கள் அதில் ஈடுபடவில்லையென்றும், பாரதி சேவா சங்கம் மட்டுமே அதில் செயல்படுவதாகவும் ஆர்எஸ்எஸ் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
பாரதி சேவா சங்கம் என்பது இதுபோன்ற பேரிடர் காலங்களில் உதவிசெய்வதற்காக ஆர்.எஸ்.எஸின் தொண்டர்களால் நடத்தப்படும் ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பாகும்.
சில நாட்களுக்கு முன்பாக அரசு வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் தனியார் அமைப்புகள் யாரும் தாங்களாகவே உணவு போன்ற நிவாரண உதவிகளை வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டிருந்தது. தி.மு.கவின் சார்பில் அதன் தலைவர் நிவாரண உதவிகளை வழங்க ஆரம்பித்த பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்ததால், தி.மு.கவைக் குறிவைத்தே அந்த அறிவிப்பு வெளியானதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மட்டும் இதுபோல அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக செய்திவெளியானது சமூக வலைதளங்களில் இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. செவ்வாய்க் கிழமை மாலையிலிருந்து #ChennaiCorpRemoveRSS என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. புதன்கிழமை காலையிலிருந்து இந்த ஹாஷ்டாக் சென்னை ட்ரெண்டிங்கில் முதலிடத்திலிருந்துவருகிறது.
இதற்கிடையில் இந்த விவகாரத்திற்கு விளக்கமளிக்கும்வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு ட்விட்டர் செய்தியில், "பெருநகர சென்னை மாநகராட்சி மக்களுக்கு உணவு/நிவாரணப் பொருட்களை விநியோகிக்க எந்தவொரு குறிப்பிட்ட அமைப்பிற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழக அரசு ஆணைப்படி, நன்கொடை அளிக்க விரும்புவர்கள் மாநகராட்சியிடமிருந்து முன்அனுமதி பெற்று பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் முன் விநியோகிக்க வேண்டும்" என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., சென்னை மாநகராட்சியின் கருத்தைப் பெற செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: