You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி
- எழுதியவர், ஷைலி பட்,
- பதவி, பிபிசி குஜராத்தி
உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர் என பல தரப்பினர் இந்த போரில் முன்னணியில் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில், சூரத் நகரில் வாழும் மக்களிடையே ஒரு இஸ்லாமியர் மிகவும் பிரபலமடைந்துள்ளார். இந்த கட்டுரை எழுதப்பட்ட நேரத்தில்,சூரத் நகரில், நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். அவர்களின் இறுதி சடங்கை நடத்தினார், அப்துல் மல்பாரி என்ற அந்த நபர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் எந்த மதம் அல்லது சாதியை சேர்ந்தவராக இருந்தாலும், இவர் இந்த சேவையை செய்கிறார்.
இறந்தவர்களின் குடும்பத்தினரே, நோய் தொற்று ஏற்படும் என அஞ்சி அருகில் செல்ல தயங்கும் நிலையில், தனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறார் அப்துல்.
30ஆண்டுகால சேவை
"கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக, இவ்வாறு கைவிடப்பட்ட பிணங்களின் இறுதி சடங்கை செய்து வருகிறேன். சாலையோரங்களில் பிச்சை எடுப்பவர்கள், இறக்கும்போது அவர்களுடன் யாரும் இருப்பது இல்லை, அதேபோல, தற்கொலை செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு இறப்பவர்களின் இறுதிச்சடங்கை செய்ய யாருமே முன்வருவதில்லை'' என்று அவர் கூறினார்.
"இந்த சேவையை கேதார்நாத் வெள்ளம், கட்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சென்னையில் சுனாமி வந்தபோதும் நாங்கள் செய்தோம். இந்த சேவையில் என்னோடு சேர்ந்து, 35 பேர் தன்னார்வலர்களாக பணியாற்றுகிறார்கள்" எண்டு அவர் மேலும் விவரித்தார்.
"கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகத் தொடங்கியதும், சூரத் பேரூராட்சி அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டார்கள். இந்த வைரஸ் தாக்கத்தால் உலகளவில் எப்படி ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின என்று விளக்கினார்கள். இவ்வாறான மரணங்கள் சூரத்தில் நடப்பதற்கு வாய்ப்புள்ளது என்பதையும், அப்படி மரணிப்பவர்களின் உடலை குடும்பத்தினரிடம் கொடுக்க முடியாது என்பதை கூறினார்கள்." என்று அப்துல் குறிப்பிட்டார்.
"எங்களால் இந்த உடல்களை தகனம் செய்யவோ, எரியூட்டவோ முடியுமா என்று கேட்டார்கள். நாங்கள் உடனடியாக ஒப்புக்கொண்டோம்."
"வெவ்வேறு நேரங்களில் சேவையாற்றும் வகையில், எங்கள் குழுவில் உள்ள 20 பேரின் பெயர்களை கொடுத்துவிட்டு வந்தோம். எங்களிடம் அனைத்து முக்கிய அதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் எண்கள் இருப்பதால், அவர்களால் எங்களை எந்த நேரமும் தொடர்பு கொள்ள முடியும். எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தவுடன், சரியான உபகரணங்களுடன் கிளம்பிவிடுவோம். இணை ஆணையர் ஆஷிஷ் நாயக், இந்த பாதுகாப்பு உபகரணங்களை எப்படி பயன்படுத்துவது, இறந்தவர்களின் உடல்களை எவ்வாறு மூடவேண்டும், எங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கற்றுத்தந்துள்ளார்." என்கிறார் அப்துல்.
தற்காப்பிற்கு என்ன செய்கிறார்கள்?
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் இவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தங்களின் தற்காப்பு குறித்து பேசும் அப்துல், "உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள அறிவுரைகளை நாங்கள் கடைபிடிக்கிறோம். முகக்கவசம், கையுறை, உடலுக்கான பிரத்யேகமாக ஆடை ஆகியவற்றை அணிந்துகொள்கிறோம்." என்கிறார்.
"இறந்தவர்களின் உடல்களில் ரசாயனம் முழுமையாக தெளிக்கப்பட்டு, பிளாஸ்டிக் கொண்டு உடல்கள் கட்டப்படுகின்றன. உடல்களை எடுத்து செல்வதற்கென எங்களிடம் ஐந்து வண்டிகள் உள்ளன. இதில் இரண்டு வண்டிகளை கோவிட்-19 மரணங்களுக்காகவே பிரத்யேகமாக ஒதுக்கியுள்ளோம். அவற்றையும், தொடர்ந்து கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்கிறோம்."
"ஏக்தா அறக்கட்டளை என்ற எங்களின் இந்த அமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தினமும் சூரத், வைப்பை, பாருச் ஆகிய பகுதிகளில், நாங்கள் 12-13 உடல்களை தகனம் செய்து வருகிறோம். நதி, ஓடைகளின் கரைகளிலும், ரயில் தண்டவாளங்களில் வெட்டப்பட்ட நிலையிலும், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களையும் நாங்கள் தகனம் செய்கிறோம். தினமும் இப்படியான உடல்களை எடுத்து வருவதால், கைக்கவசம், முக்கவசம் ஆகியவற்றை இந்த உடல்களின் இறுதிச்சடங்கு சமயங்களில் அணிகிறோம்."
"இந்த சேவையில் எங்களுக்கு அரசின் உதவியும் கிடைக்கிறது. துப்புரவு பணியாளர்கள், தீயணைப்புத்துறை, சப்-இன்ஸ்பெக்டர்கள் என பலர் எங்களின் அணியில் இருக்கின்றனர்." என்றார் அவர்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
பயத்தைவிட வலி அதிகம்
இறந்தவர்களின் குடும்பங்கள் குறித்து பேசுகையில், "ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவரின் குடும்பமும் தனிமைப்படுத்தப்படுகிறது. அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள சம்ரஸ் என்ற விடுதியில் உருவாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் இடத்தில் இருக்க வைக்கப்படுகிறார்கள்."
"அங்கு 14 நாட்கள் வைக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தால், அவரின் இறுதிச்சடங்கில், குடும்பத்தினர் பங்கேற்க முடியாது. நாங்கள் இந்த பணியை பல காலமாக செய்து வருகிறோம். ஆனால், கொரோனாவால் ஏற்படும் மரணம் என்பது, பயத்தைவிட வலியை அதிகமாக கொண்டுள்ளது. இறந்தவருக்கு கடைசி மரியாதை செய்ய, குடும்பத்தினர் விரும்புவதை பார்க்கும்போது, வருத்தமளிக்கிறது. அந்த இடத்தில் இருக்கவேண்டும் என குடும்பத்தினர் விரும்புவது இயற்கையான ஒன்று என்றாலும்கூட, இந்த சூழலில், அது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது" என்கிறார் அப்துல்.
"குடும்பத்தினர் நிறைய அழுகிறார்கள். இறந்தவர்களை பார்ப்பது குறித்து நிறைய பேசுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காகதான் இவ்வாறு செய்கிறோம் என்பதை நாங்கள் விளக்குகிறோம். அவர்களின் மத நம்பிக்கைப்படி, முறையே இறுதிச்சடங்குகளை செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். ஆனாலும், அவர்கள் சமாதானம் கொள்வதில்லை. சூரத்தில் இறந்த நான்கு பேரில், மூவர் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள்."
"தூரத்து சொந்தங்கள் சில நேரத்தில், சற்று தள்ளி நின்று இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படியான சூழல்களில், இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்கு அவர்களை நாங்கள் தனியே ஒரு வாகனத்தில் அழைத்து செல்கிறோம். சற்று தள்ளி நின்று பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிடுகிறோம்."
'குடும்பத்தைவிட்டு தனியாக இருக்கிறோம்'
இந்த சூழல் குறித்து அறியவந்த போது, உங்களின் குடும்பம் என்ன கூறினார்கள் என்று நாம் அப்துலிடம் கேட்டபோது, "பார்த்து, பத்திரமாக இருங்கள் என்று மட்டும் கூறி அனுப்பினார்கள். கொரோனா பகுதியில் இருக்கும்போது மட்டுமே நாங்கள் அந்த பாதுகாப்பு உடைகளை அணிகிறோம். இறுதிச்சடங்கு முடிந்தவுடன், கழற்றிவிடுகிறோம்."
"வேலை முடிந்த பிறகு, நாங்கள் வெதுவெதுப்பான நீரில் கை, கால்களை கழுவி விட்டு, சுத்தமான உடைகளை அணிந்துகொள்கிறோம். நாங்கள் இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் சூழலிலும், இது எங்களின் குடும்பத்தினருக்கு ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளது. அதனால், இந்த பணிகளை முடித்து வைக்கும் வரை, குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக, அவர்களிடமிருந்து விலகியே வாழ்கிறோம். இந்த சூழல் சுமூகமாகும் வரையில், எங்களின் குடும்பத்தை பார்க்கவே முடியாது. எங்களின் அலுவலகத்திலேயே ஓய்வு எடுத்துக்கொள்ளும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன."
மக்களுடன் பழகுவது குறித்து விளக்கும் அவர், " நான் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்வது குறித்து இப்போது மக்களுக்கு தெரியும் என்பதால், சிலர் என் வாகனத்தில் உட்காருவது இல்லை. சிலர் தூரத்தில் நின்றே சலாம் கூறுகிறார்கள். ஆனால், இத்தகைய செயல்கள் என்னை பாதிப்பதில்லை."
அரசிடமிருந்து கிடைக்கும் பொருளாதார உதவிகள் குறித்து கூறிய அப்துல், "அரசு எங்களின் அமைப்பிலுள்ளவர்களுக்கு நிதி உதவி செய்துள்ளது. இந்த நகரத்தில் வாழும் பலரும் கூட எங்களுக்கு நிதியுதவி செய்வதால். போதுமான அளவு நிதி உள்ளது, எந்த பிரச்னையும் இல்லை."
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சூரத் ஊராட்சியின் இணை ஆணையர் ஆஷிஷ் நாயக், "இத்தகைய இக்கட்டான சூழலில், அப்துல் செய்யும் இந்த சேவை என்பது, பெரிய உதவி. நாங்கள் அவர்களிடம் உதவி என்று கேட்டவுடனேயே அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அவர்களை நாங்கள் தொடர்பு கொண்ட 10-15 நிமிடங்களில் அவர்கள் எங்களை சந்திக்கிறார்கள். இறந்தவரின் உடல் தகனம் அல்லது எரியூட்டப்பட்ட பிறகு, அப்துல் மற்றும் அவரின் குழுவினர், இறுதிச்சடங்கு நடந்த முழு இடத்தையும் கிருமி நாசினி கொண்டு, சுத்தம் செய்கிறார்கள். அவர்கள் செய்யும் பணி மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று." என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: