தமிழகத்தில் கொரோனா வைரஸ்: கோவிட்-19 தொற்றால் ஒரு மாதத்தில் நடந்த மாற்றங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இருப்பது மார்ச் 7ம் தேதி முதன்முதலில் தெரியவந்தது. அப்போது ஒரே ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்போது ஒரு மாதம் ஆகிறது. இதுவரை 621 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முதலில், ஓமனில் இருந்து காஞ்சிபுரத்திற்கு திரும்பிய பொறியாளர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் எட்டு பேர் குணமடைந்துவிட்டனர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த ஒரு நாள் மக்கள் ஊரடங்கு மார்ச் 22ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அடுத்த நாளே, கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் மார்ச் 24 மாலை ஆறு மணி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,மார்ச் 24ம் தேதி இரவே இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவித்தது மத்திய அரசு.
சமூக விலகலைத் தீவிரப்படுத்த நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என அரசு வலியுறுத்திவருகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு முன்னர் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை அனுமதி இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
தற்போது அந்த நேரமும் குறைக்கப்பட்டு, மதியம் ஒருமணிவரை மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராட்சத லிப்ட் மூலம் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு, தெருக்களில் குப்பைகள் அகற்றப்படுவது, அரசு அலுவலகங்கள் தூய்மையாக இருப்பது என ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதியில் இருந்து பல முன்னெடுப்புகளை தமிழக அரசு எடுத்துவருகிறது. பெரும்பாலான பொது மக்களும் தங்களது பங்கிற்கு தனிமைப்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- வாசனைகளை முகர முடியாததும், சுவை இழப்பதும் கொரோனா அறிகுறியா?
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?

மார்ச் 24 தொடங்கி 21 நாட்கள் ஊரடங்கு விதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆலைகள், தனியார் நிறுவனங்கள், பல்பொருள் கடைகள், நடைபாதை கடைகள் இயங்கவும் தடை கொண்டுவரப்பட்டது.
பின்னர், கடைகளில் உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்பட்டு எப்போதும் போல இயங்கும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விகி, சொமேட்டோ போன்ற உணவுகளை நேரடியாக கொண்டு வந்து கொடுக்கும், செயலி வழிச் சேவைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் இவை காலை 7 முதல் 9 மணி வரையும் நண்பகல் 12 முதல் 2 மணி வரை மாலை 6 முதல் 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
பொதுமக்கள் சமைத்த உணவுகளை எளிய மக்களுக்கு வழங்க தடை கொண்டுவரப்பட்டது. உணவு பொருட்களை அரசிடம் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் சமூக நலக்கூடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டதால், அவர்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சோதனை மையங்கள் இருந்தாலும் குறைவான சோதனை?
மார்ச் மாதம் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை கையாள வசதிகள் செய்யப்பட்டன. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் திறக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
350 படுக்கைகள் கொண்ட தனிவார்டு ஓமந்தூரார் மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தாங்களாகவே வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் கொரோனா சோதனை செய்வதற்கான சோதனை மையங்கள் இரண்டு மட்டுமே இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 17ஆக உள்ளது. இந்தியாவில் அதிக சோதனை மையங்களை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.
இருந்தபோதும், தற்போதுவரை 4,612 நபர்களுக்கு மட்டுமே சோதனை நடத்தப்பட்டுள்ளதை எதிர்த்து சமூக ஆவலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கு மட்டுமே சோதனை செய்யப்படுகிறது என அரசுத் தரப்பு சொன்னாலும், சோதனை செய்யப்படும் அளவு அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.
தற்போது டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் உள்ள சுமார் 1,200 நபர்களை அடையாளம் கண்டு, கொரோனா சோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தினமும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படுகிறது.
அதோடு ஊரடங்கை மக்கள் தீவிரமாக கடைபிடித்தால், கொரோனா பரவலை தடுக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா காலத்தில் ஏற்படும் இழப்புகளை சமாளிப்பது குறித்து அறிக்கை வெளியிடுகிறார்.

பட மூலாதாரம், ARUN SANKAR /getty images
சமீபத்தில், ஊரடங்கின் போது நடைபாதை வியாபாரிகள், கட்டடத்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கருத்து எழுந்ததை அடுத்து, அவர்களுக்கு சலுகைகளை தமிழக அரசு அறிவித்தது.
கட்டடத் தொழிலாளர்கள், ஓட்டுநர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆட்டோ தொழிலாளர்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதியுடன் மேலும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ. 1,000 உதவித்தொகை
தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் மக்கள் ரேஷன் கடைகளில் டோக்கன் பெறுவதற்காக கூட்டம் கூட்டமாக அணிவகுத்து நின்றனர். பின்னர், ரேஷன் கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படவேண்டும் என கூறப்பட்டு, டோக்கன் கொடுக்கும் நேரத்தில், ரேஷன் பொருட்கள் அளிக்கப்படும் என்றும் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வீடுகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விலையின்றி கிடைக்கும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிப்பது, ரேஷன் பொருட்கள் வழங்குவது ஆகியவற்றுக்காக ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்யப்படது.
காவல்துறை நடவடிக்கை எப்படி இருந்தது?
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், இரு சக்கர வாகனத்தில் சுற்றும் இளைஞர்களை காவல்துறையினர் தோப்புகரணம் போடச்சொல்லியும், சாலைகளில் உருள செய்தும் தண்டித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதையடுத்து, மூத்த காவல்துறை அதிகாரிகள், பொது மக்களை, இளைஞர்களை காவல்துறையினர் தண்டிக்ககூடாது என அறிவுறுத்தினர்.
ஊரடங்கை கடைபிடிக்காமல், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுக்க, தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை காவல்துறையிடம் அளித்தது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்காணிப்பு வலையத்திற்குள் வந்தனர். தேனி மாவட்ட காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் இருப்பவர்களுக்கு அவர்கள் வீட்டில் நேரடியாக பழங்கள் வழங்கியது பலரின் கவனத்தை ஈர்த்தது.

பட மூலாதாரம், ARUN SANKAR/Getty images
சென்னை வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் ரஜேஷ் பாபு கொரோனா விழிப்புணர்வு தகவலை சொல்வதை விட, வித்தியாசமாக புரியவைத்தால், மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவார்கள் எனக்கருதி கொரோனா வடிவிலான ஹெல்மெட்டை அணிந்து பொது இடங்களில் வலம்வருகிறார். கொரோனா மாதிரி தடுப்பு மற்றும் ஹெல்மெட் அணிந்து சாலையில் வரும் இளைஞர்களை தடுத்து கொரோனா பற்றி கேட்கிறார். ''நீங்க வீட்டுக்கு போகலைனா, கொரோனாவாகிய நான் உங்க வீட்டுக்கு வந்திடுவேன்'' எனக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கோயில்களில் என்ன நிலை?
மார்ச்19 முதல் மார்ச் 31 வரை தமிழகத்தில் எல்லா கோயில்களும் மூடப்படும் என சுய ஊரடங்கின்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்ச் 24ம் தேதி மத்திய அரசு கொண்டுவந்த 21 நாள் ஊரடங்கின் காரணமாக கோயில்கள் மூடப்படுவது நீட்டிக்கப்பட்டது.
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, தமிழகத்திலுள்ள எல்லா கோயில்களும் மூடப்பட்டன. தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், ஸ்ரீரங்கம், சுசீந்திரம், சென்னையில் வடபழனி முருகன் கோயில், பார்த்தசாரதி கோயில் மற்றும் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் கடவுளருக்கு அனுதின பூசைகள் மட்டும் செய்யலாம் என்றும் பக்தர்களை அனுமதிக்ககூடாது என்று உத்தரவிடப்பட்டது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பல கோயில்களில் விரதம் முடிப்பதற்காக பக்தர்கள் கோயிலுக்கு வரவேண்டாம் என்றும், அவரவர் வீடுகளில் விரதம் கலைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், திருவண்ணாமலையில் ஏப்ரல் 7ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார்.
எளிமையாக நடந்த திருமணங்கள்
கொரோனா அச்சம் காரணமாக முன்னர் முடிவுசெய்யப்பட்ட திருமணங்கள் பலவும் எளிமையாக நடந்தன. திருமணத்தில் மணமகன், மணமகள் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டு, முகக்கவசம் அணிந்துகொண்டு திருமணம் நடத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
திருமணமான தம்பதிகள் சிலர் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வடபழனி முருகன் கோயிலில் குடும்ப உறுப்பினர்கள் பத்து நபர்கள் மட்டும் கலந்துகொண்ட திருமணம் பலரின் கவனத்தைப் பெற்றது.
கொரோனா பாதிப்பை தடுக்க, பத்திரிகை அளிக்கப்பட்ட உறவினர்களிடம் போன் செய்து திருமணத்திற்கு வரவேண்டாம் என அந்த தம்பதிகள் தெரிவித்திருந்தனர். திருமண மண்டபங்களில் கிருமிநாசினி தெளிப்பது, முகக்கவசம் வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.
சிறைவாசிகளின் நிலை என்ன?
சிறைவாசிகள் சிறையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர்கள் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சிறைவாசிகளுக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் சிறைத்துறை தெரிவித்தது.

அதோடு, அனைத்து சிறைவாசிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. காய்ச்சல், சளி, இருமல் உள்ள சிறைவாசிகள் தற்காலிக தடுப்பு காப்பு அறைகள் அமைத்து தனிமைப்படுத்தி அடைக்கபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிறைவாசிகளுக்கு சோப்புகள் வழங்கி, அவ்வப்போது கைகளை கழுவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதோடு, வழக்கறிஞர் மற்றும் சிறைவாசி ஆகிய இருவரும் பேசும்போது, முகக்கவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் தொடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
யோகா, தியானம் போன்றவற்றை செய்கிறவை தவிர அனைத்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி சம்பந்தமான பார்வையாளர்கள் ஒரு மாத காலத்திற்கு சிறையினுள் அனுமதிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. சிறைக்கைதிகள் மூலம் முகக்கவசம் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












