கொரோனா வைரஸ்: ஊரடங்கை மீறி தொழுகை - தென்காசியில் 4 பேர் கைது; 300 பேர் மீது வழக்கு

கொரோனா: ஊரடங்கை மீறி தொழுகை - தென்காசியில் 4 பேர் கைது; 300 பேர் மீது வழக்கு

பட மூலாதாரம், Design Cells / getty images

தென்காசியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கை மீறி வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய முயன்ற 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர்.

தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதியின்றி ஏராளமானோர் தொழுகைக்காக கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் நடுப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

பின்னர் ஐமாத் தலைவரை அழைத்து, அனைவரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால், அங்கு வந்திருந்த இஸ்லாமியர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கூட்டத்தை கலைக்கவும், தாக்குதலை தடுக்கவும் போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கொரோனா வைரஸ்

காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் 4 பேரை கைது செய்து பிணையில் விடுவித்தனர். அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் பிபிசி தமிழிடம் பேசுகையில், "வெள்ளிக்கிழமை நடுப்பேட்டை பள்ளி வாசலில் தொழுகைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடினர். மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது இவ்வாறு கூடுவது தவறு என எச்சரித்தோம். ஆனால் அங்கு கூடியிருந்தவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு இல்லாமல், அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க கூடியிருந்தவர்களை காவல்துறையினர் கலைத்தனர்."

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்

பட மூலாதாரம், Google

படக்குறிப்பு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்

"அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், வைரஸ் தொற்று பரவக் காரணம், 144 தடையை மீறி ஒன்று கூடியது, அரசு அதிகாரிகளை திட்டியது என நான்கு பிரிவுகளின் கீழ் 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

மேலும் அவர் பேசுகையில், நேற்று (வெள்ளிகிழமை) மாலை மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறை சார்பில் இஸ்லாமிய தலைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பள்ளி வாசலுக்கு யாரும் தொழுகைக்காக வரவேண்டாம் என்றும், கொரோனா தொற்று குறித்து இஸ்லாமிய மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

வரும் மாதங்களில் இந்து கோயில்களில் அதிகம் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அவர்களையும் அழைத்து பேசி திருவிழா நடத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளோம் என்று சுகுணா சிங் தெரிவித்தார்.

வெள்ளியன்று நடந்த சம்பவம் குறித்து கருத்து கேட்பதற்காக தென்காசி இஸ்லாமிய தலைவர்கள் சிலரை பிபிசி தமிழ் தரப்பில் தொடர்பு கொண்டபோது அவர்கள் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: