தமிழ்நாட்டில் பெரிய கோவில்கள், பெரிய கடைகள், சந்தைகளை மூட உத்தரவு

பட மூலாதாரம், ARUN SANKAR/getty Images
மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவரங்கம், ராமேஸ்வரம் கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள பெரிய ஜவுளி, நகைக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சில அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளைக் கொண்ட சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுடன் மருத்துவர்கள் காணொலிக் காட்சி மூலம் தொடர்புகொண்டு ஆலோசனைகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமுள்ள வாரச் சந்தைகள் மார்ச் 31ஆம் தேதி முதல் மூடப்பட வேண்டும்.
மக்கள் அதிகமாகக் கூடக்கூடிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், நீதிமன்றங்களில் தூய்மைப் பணிகள் தீவிரமாக்கப்படும். தனியார் நிறுவனங்கள், தொழிற்பூங்காக்களில் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Anadolu Agency/getty Images
ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெரிய ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், பல்பொருட்களை விற்கும் கடைகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும். நகைக்கடைகளில் ஆர்டர் கொடுத்த நகைகளை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
அத்யாவசியப் பொருட்களை விற்கும் கடைகள், காய்கறிக் கடைகள், மளிகைக்கடைகள் தொடர்ந்து இயங்கும்.


தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கும் வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருத்தணி முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் உட்பட பெரிய கோவில்கள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதிவரை மூடப்படும்.
அதேபோல, அதிக மக்கள் வரக்கூடிய மசூதிகள், தேவாலயங்களை மூட ஏதுவாக அந்தந்த நிர்வாகங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட மூலாதாரம், ARUN SANKAR/getty Images
பிற மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள், அங்கிருந்து வரும் பேருந்துகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ரயில்களைக் குறைக்க தென்னக ரயில்வேயிடம் கோரப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து, ரயில் மட்டும் சாலை மூலமாக வருபவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் ஏப்ரல் ஐந்தாம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் க்ரூப் 1 பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வை நடத்தவிருந்தது. அந்தத் தேர்வு தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












