மதுரை தமுக்கம் மைதானத்தின் விரிவான வரலாறும், அதன் எதிர்காலமும் Tamukkam History

மதுரை தமுக்கம் மைதானத்தை என்ன செய்யப் போகிறார்கள்?
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மதுரையில் பிரசித்திபெற்ற தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய அரங்கத்தைக் கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த பழைய கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த மைதானம் முன்பிருந்ததைப் போல உபயோகத்தில் இருக்குமா என்ற கவலையால் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தமுக்கம் மைதானத்தில் உண்மையில் என்ன கட்டப் போகிறார்கள்?

மதுரை நகரில் வைகை நதியின் வடகரையில் தல்லாகுளத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது தமுக்கம் மைதானம். வருடா வருடம் தமிழ்நாடு அரசு சித்திரைத் திருவிழா காலகட்டத்தில் சித்திரை பொருட்காட்சி என்ற பெயரில் கண்காட்சி ஒன்றை இந்த மைதானத்தில்தான் நடத்துவது வழக்கம். அதேபோல, வருடாந்திர புத்தகக் கண்காட்சியும் இங்கேதான் நடந்துவந்தது.

பல அரசியல் கட்சிகளின் மாநாடுகள், தனியார் நிகழ்ச்சிகள் இந்த மைதானத்தில் நடைபெறுவது வழக்கமாக இருந்திருக்கிறது. 1981ல் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது, தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தன மிகப் பிரம்மாண்டமான பொருட்காட்சி, மாநிலம் முழுவதும் பேசப்பட்டது. 1982ல் அரசு சார்பில் பாரதியார் நூற்றாண்டு விழாவும் இங்குதான் நடத்தப்பட்டது. பல விளையாட்டுப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்திருக்கின்றன.

இந்த நிலையில்தான், ஸ்மார்ட் சிடி திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானம் மாற்றியமைக்கப்படுவதாக செய்திகள் வெளியானதயைடுத்து பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திங்கட்கிழமையன்று மைதானத்திற்குள்ளிருந்த சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம் இடிக்கப்பட்டது.

தமுக்க மைதானத்தின் வரலாறு

தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகம் அமைந்துள்ள ராணி மங்கம்மாள் அரண்மனையின் ஒரு பகுதியாக இந்த மைதானம் இருந்துவந்தது. கோடை கால மாளிகை அல்லது சுவர்கள் இல்லாமல், தூண்களால் தாங்கப்பட்ட மண்டபம் என்ற பொருள் தரும் 'தமகமு' என்ற தெலுங்கு வார்த்தையிலிருந்து 'தமுக்கம்' என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளின் கோடை கால மாளிகையாக இந்த அரண்மனை இருந்துவந்தது. இந்த மாளிகையின் உப்பரிகையிலிருந்து அரச குடும்பத்தினர் மல்யுத்தம், மிருகங்களுடனான மோதல்களை கண்டுகளித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.

மதுரை தமுக்கம் மைதானத்தை என்ன செய்யப் போகிறார்கள்?

நாயக்கர் வம்சம் வீழ்ந்த பிறகு, கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திலும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் இந்த மாளிகையில் பல பிரிட்டிஷ் அதிகாரிகள் வசித்தனர். 1871ல் நேப்பியர் பிரபு மதுரைக்கு வந்தபோது, இந்த மாளிகையை புதுப்பிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்ட பொறியாளர், 22 ஆயிரம் ரூபாய் செலவில் இதனைப் புதுப்பித்தார்.

1882-1886 ஆண்டு காலத்தில் மதுரையின் ஆட்சியராக இருந்த சி.எஸ். க்ரோல் (C.S. Crole) இந்த தமுக்கம் மாளிகையில் குடியேறினார். அவர் அந்த மாளிகையில் வசித்தபோது, 1883ல் தமுக்கத்திற்கு முன்னால் உள்ள 70 ஏக்கர் நிலத்தை வேலியிட்டு 'பீப்புள்ஸ் பார்க்' என்ற பூங்காவை உருவாக்கினார். இந்தப் பூங்காவை உருவாக்க மதுரையில் வசித்த நகரத்தார் சமூகத்தினரும் சில ஜமீன்தார்களும் சில பணக்காரர்களும் நிதியுதவி செய்தனர். அந்தப் பணத்தில் நிலம் வாங்கப்பட்டு, நிலத்தின் பெயர் மதுரை நகராட்சியின் பெயருக்கு மாற்றப்பட்டது.

1886 டிசம்பரில் லார்ட் டஃபரின் மதுரைக்கு விஜயம் செய்தபோது, இந்தப் பூங்கா பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. 1883ல் சி.எஸ். க்ரோலின் முயற்சியால், உள்ளூர் பெரிய மனிதர்களுக்காக தி யூனியன் க்ளப் துவங்கப்பட்டது. இதற்காக தமுக்கம் மைதானத்தின் ஒரு பகுதி யூனியன் க்ளப்பிற்கு வழங்கப்பட்டது.

மீதமுள்ள பகுதிகள் மைதானமாகவே இருந்துவந்தன. இங்கு பொருட்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள், நாடகங்கள், சர்க்கஸ் போன்றவை நடத்தப்பட்டுவந்தன. இந்த நிலையில், 1962ல் ஒரு கலையரங்கம் மதுரை நகராட்சியால் கட்டப்பட்டது. மேடையும் தகரத்தாலான கூரையும் கொண்டு கட்டப்பட்ட இந்த அரங்கில், அவ்வப்போது கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துவந்தன.

1982ஆம் ஆண்டில் பாரதியார் நூற்றாண்டு விழா, உலகத் தமிழ் மாநாடு ஆகியவை இந்த மைதானத்தில் நடைபெற்றபோது, இதற்குப் புதுப் பொலிவு ஏற்பட்டது. தற்போது தமுக்கம் மைதானத்தில் உள்ள கோவில் போன்ற கட்டடம், அலங்கார வளைவுகள், தமிழன்னை சிலை ஆகியவை உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டன. தற்போது தமுக்கம் மைதானத்தின் பரப்பு சுமார் 9 ஏக்கர்.

மதுரை தமுக்கம் மைதானத்தை என்ன செய்யப் போகிறார்கள்?

இந்த நிலையில், கலையரங்கம் கட்டுப்படுவது தொடர்பான பணிகள் துவங்கியவுடன், சமூக வலைதளங்களிலும் உள்ளூர் ஊடகங்களிலும் இது குறித்த கவலைகளும் எதிர்ப்புகளும் பதிவாயின. குறிப்பாக, அங்கே என்ன கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது என்ற தகவல் முறையாக வெளியிடப்படாத நிலையில், தமுக்கம் மைதானத்தின் நிலை குறித்த கவலைகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்தனர்.

தமுக்கம் மைதானத்தில் என்ன கட்டப்படவிருக்கிறது என்பது குறித்து மதுரை நகரின் தலைமைப் பொறியாளர் அரசுவிடம் கேட்டபோது, சங்கரதாஸ் சுவாமி கலையரங்கம் இருந்த இடத்தில் புதிய கலையரங்கம் கட்டப்படவிருப்பதாகத் தெரிவித்தார்.

"தற்போதுள்ள சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம் மிகப் பழையது. மேலே தகரக் கூரைதான் போடப்பட்டிருக்கிறது. சுற்றிலும் கதவுகளோ, சுவர்களோ கிடையாது. இந்த இடத்தில் புதிதாக நவீனமான முறையில் ஒரு கலையரங்கத்தைக் கட்டுவதுதான் தற்போதைய திட்டம்" என்கிறார் அரசு.

தமுக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவர், உலகத் தமிழ் மாநாட்டின்போது கட்டப்பட்ட அலங்கார வளைவுகள், தமிழன்னையின் சிலை ஆகியவை இடிக்கப்படாது கலையரங்கத்திலம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டிருப்பதாகவும், அரங்கம் கட்டப்பட்ட பிறகு, அவை முன்பிருந்த நிலையிலேயே உருவாக்கப்படுமென்றும் கூறுகிறார் அவர்.

மதுரை தமுக்கம் மைதானத்தை என்ன செய்யப் போகிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

"45.5 கோடி ரூபாய் செலவில் சுமார் முவாயிரம் முதல் 3,500 பேர் உட்காரக்கூடிய வகையில் இந்த அரங்கம் அமையும். வாகன நிறுத்துமிடம் என்பது தனியாக அமைக்கப்படப்போவதில்லை. அரங்கத்திற்குக் கீழேதான் வாகன நிறுத்துமிடம் அமையும். அரங்கம் கட்டப்பட்ட பிறகும், சித்திரைப் பொருட்காட்சி உள்ளிட்ட பிற பொருட்காட்சிகள் இங்கே தொடர்ந்து நடக்கும்" என்கிறார் அரசு.

வருடாவருடம் சித்திரை (ஏப்ரல் - மே) மாதத்தில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி தமுக்கம் மைதானத்தில்தான் அரசுப் பொருட்காட்சி நடப்பது வழக்கமாக இருந்துவந்துள்ளது. ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்திற்கு முன்னும் பின்னுமான தினங்களில் லட்சக் கணக்கானவர்கள் இந்த பொருட்காட்சிக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டும் பொருட்காட்சி நடக்குமா?

"இந்த ஆண்டு கலையரங்கத்திற்கான பணிகள் நடப்பதால் பொருட்காட்சி நடக்காது. 18 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டுமென் திட்டம். பெரும்பாலும் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் பணிகளை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஆகையால் அடுத்த ஆண்டு நடக்கலாம்" என்கிறார் அரசு.

ஆனால், மதுரையில் ஸ்மார்ட் சிடி திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகள் குறித்து மதுரையைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கே சரியாகத் தகவல் தெரிவிப்பதில்லையென்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

"ஸ்மார்ட் சிடி திட்டம் தொடர்பாக எந்தத் தகவலையும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவிப்பதில்லை. இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டுமென தொடர்ந்து கேட்டுவருகிறோம். அது தள்ளிக்கொண்டே போகிறது" என்கிறார் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் சு. வெங்கடேசன்.

"ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது வந்து பார்த்துதான் போகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளுடனான கூட்டத்திற்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அன்றைய தினம் வேறு ஒரு கூட்டத்திற்காக சென்னை செல்ல வேண்டியிருந்ததால், அது ரத்தாகிவிட்டது. விரைவில் அம்மாதிரி ஒரு கூட்டம் நடத்தப்படும்" என்கிறார் அரசு.

இது தொடர்பாக மதுரை மாநகராட்சியின் ஆணையரின் கருத்தைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: