கொரோனா: ஏப்ரல் 15 வரை இந்தியாவுக்கான விசாக்கள் நிறுத்திவைப்பு

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்தியர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்து திரும்பினால் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படலாம் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவும் அச்சத்தால், இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜரீக அதிகாரிகள், ஐநா அல்லது சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்கள், பணி நிமித்தப் பயணம், அலுவல் திட்ட ரீதியான விசாக்களை தவிர்த்து அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

"வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்கள் விசா இன்றி இந்தியாவுக்கு பயணம் செய்ய வழங்கப்பட்ட வசதி ஏப்ரல் 15, 2020 வரை இடைநிறுத்திவைக்கப்படுகிறது.

இத்தாலி, சீனா, இரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியிலிருந்து பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு வந்தவர்கள் அனைவரையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். இது வரும் மார்ச் 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தியர்கள் அவசியமில்லாத பயணங்களை ரத்து செய்ய கேட்டு கொள்ளப்படுகின்றனர். மேலும் வெளிநாட்டுக்கு பயணம் செய்து வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்," என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், "இத்தாலியில் வாழும் இந்தியர்கள்/மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று சோதனை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, இத்தாலியில் இருந்து சோதனை மாதிரிகள் அவ்வப்போது சேகரிக்கப்படும். அவ்வாறு சோதனை செய்யப்பட்டவர்களில், கொரோனா வைரஸ் இல்லாதவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் இந்தியா வந்ததில் இருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்." என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலை நோய் தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த அறிவிப்புகள் வந்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: