கோவையில் 21 வயது கல்லூரி மாணவி கொலை - இளைஞர் மீது வழக்கு

கோவையில் திருமணம் செய்து கொள்ள தாமதித்ததால் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கீரணத்தம் பகுதிக்கு அருகே உள்ள கல்லுக்குழியை சேர்ந்த நந்தினி (வயது 21) அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார்.

இவரும், சங்கனூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 21) என்பவரும் பள்ளிக்காலம் முதல் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்று உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.

"கடந்த சில மாதங்களுக்கு முன் உடனடியாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நந்தினியிடம் தினேஷ் வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து, நந்தினி தனது பெற்றோரிடம் காதல் குறித்து தெரிவித்தார்."

"இருவரின் பெற்றோர்களும் சந்தித்து பேசி நந்தினியின் படிப்பு முடிந்தவுடன் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என முடிவு செய்தனர். ஆனால், தினேஷ் உடனடியாக திருமணம் செய்யவேண்டும் என ஆசைப்பட்டார். கல்லூரிக்கு சென்றுவரும் நந்தினையை தினேஷ் அடிக்கடி சந்தித்து, உடனடியாக திருமணம் செய்துகொள்ளுமாறு தொந்தரவு செய்துள்ளான்," என்கின்றனர் நந்தினியின் உறவினர்கள்.

தினேஷின் வற்புறுத்தலால் வெறுப்படைந்த நந்தினி, கடந்த சில நாட்களாக அவரிடம் பேசாமல் விலகிச் செல்ல துவங்கியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த தினேஷ், வெள்ளிக்கிழமை பிற்பகல் நந்தினியின் வீட்டிற்கு சென்று தனியாக இருந்தவரிடம் கூச்சலிட்டு சண்டையிட்டுள்ளார் என காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நந்தினியின் பெற்றோர் தரப்பில் பதியப்பட்டிருக்கும் புகாரில், நந்தினி தனியாக இருக்கும்போது வீட்டிற்கு வந்த தினேஷ் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் கதவைத் திறந்து பார்க்கையில் நந்தினியின் கழுத்தில் துப்பட்டா இருக்கப்பட்டும், வாயில் இருந்து சாணிப்பவுடர் வெளியேறுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று, வெள்ளிக்கிழமை, மாலை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நந்தினி சிகிச்சை பலனின்றி இன்று, சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.

நந்தினி வீட்டிலிருந்து தப்பிச்சென்ற தினேஷ் சாணிப் பவுடரை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது. தினேஷின் மீது சட்டப்பிரிவு 302ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

உளவியல் ரீதியாக இளைஞர்கள் பாதிக்கப்படுவதால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக கூறுகிறார் கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மனநல மருத்துவர் வெள்ளைச்சாமி.

"பெண்கள் மீதான வன்முறை சம்பவங்களுக்கான முக்கிய காரணம், இளைஞர்களின் மனரீதியான வளர்ச்சியை பெற்றோர்கள் கவனிக்க தவறியதே ஆகும். மேலும், வலைதளங்களில் கொட்டிக்கிடக்கும் ஆபாசப் படங்களும், எளிதாக கைக்கு கிடைக்கும் போதைப் பொருட்களும் இன்றைய இளைஞர்களை தவறான முடிவுகளை எடுக்கச்செய்து வாழ்க்கையை சீரழிக்கிறது. எனவே, குழந்தைகளின் மனரீதியான வளர்ச்சியை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியம்" என்கிறார் மருத்துவர் வெள்ளைச்சாமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: