மலேசிய பிரதமர் பதவி: அன்வார், மொகிதின் இடையே நேரடி போட்டி - யாருக்கு வாய்ப்பு?

மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதமர் வேட்பாளரை முன்மொழிய வேண்டும் என மலேசிய மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து பிரதமர் பதவிக்கு அன்வார் இப்ராகிம், மொகிதின் யாசின் ஆகிய இருவருக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இடைக்கால பிரதமராகப் பொறுப்பு வகிக்கும் மகாதீர் முகமது மீண்டும் பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக, திங்களன்று மகாதீர் திடீர் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து மலேசிய அரசியலில் குழப்பமும் பரபரப்பும் நீடித்து வருகிறது.

மகாதீரை அடுத்து அன்வார் இப்ராகிம் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

மகாதீரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்ட மலேசிய மாமன்னர் அப்துல்லா, அவரை இடைக்கால பிரதமராக பொறுப்பில் நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தாமே நேர்காணல் செய்து, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதைக் கண்டறியப் போவதாகவும், அவரை பிரதமராக அறிவிக்கப் போவதாகவும் மாமன்னர் அப்துல்லா தெரிவித்தார்.

அதன்படி இரு தினங்களுக்கு அவர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் நேர்காணல் நடத்தினார். எனினும் இந்த நடைமுறையின் மூலம் தம்மால் பெரும்பான்மை ஆதரவு கொண்ட பிரதமரை அடையாளம் காண முடியவில்லை என்று மாமன்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மகாதீர் அறிவிப்பை செயல்படுத்த மறுத்த நாடாளுமன்ற சபாநாயகர்

இந்நிலையில், மார்ச் 2ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் வாக்கெடுப்பின் மூலம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்றும் இடைக்கால பிரதமர் மகாதீர் அறிவித்தார்.

இதை ஏற்காத அம்னோ உள்ளிட்ட கட்சிகள், வாக்கெடுப்பு நடக்கும் என்று அறிவிக்க இடைக்கால பிரதமருக்கு அதிகாரம் இல்லை என்றும் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தின. மேலும், மாமன்னரின் உத்தரவுப்படியே அனைத்து நடைமுறைகளும் நடைபெற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டின.

இந்நிலையில் அதிரடித் திருப்பமாக, இடைக்காலப் பிரதமர் மகாதீர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்த இயலாது என நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சட்ட விதிமுறைகளின் கீழ் இத்தகைய கூட்டத்தைக் கூட்டுவதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு

இவ்வாறு அடுத்த குழப்பம் தலைதூக்கிய நிலையில், மாநில சுல்தான்கள் பங்கேற்கும் மலாய் ஆட்சியாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என மாமன்னர் அறிவித்தார். அதன்படி இன்று அந்தக் கூட்டம் நடைபெற்றது.

அதன் முடிவில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் பிரதமர் வேட்பாளரை முன்மொழியலாம் என மாமன்னர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட மோதலுக்கு தயாராகி வருகின்றன. ஒற்றுமை அரசாங்கம் அமைக்க தயார் என்று இரு தினங்களுக்கு முன்பு விருப்பம் தெரிவித்திருந்தார் இடைக்கால பிரதமர் மகாதீர்.

பெரும்பாலான கட்சிகள் மகாதீரே பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் அவர் ஒற்றுமை அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் யாரும் தலையிடக் கூடாது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத அமைச்சரவையை அமைத்தால் எதிர்க்கக் கூடாது, ஊழல் கட்சிகளுக்கு ஒற்றுமை அரசாங்கத்தில் இடமில்லை என்ற நிபந்தனைகளை விதித்த பிறகு நிலைமை மாறியது.

குறிப்பாக மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கும் பெரிய கட்சியான 'அம்னோ' தம்மால் இணைந்து செயல்பட இயலாது என்று மகாதீர் திட்டவட்டமாக அறிவித்தார். இதன் பிறகே சில கட்சிகள் அவரை ஆதரிப்பதில் இருந்து பின்வாங்கின.

அன்வார், மொகிதின் யாசின் இடையே நேரடிப் போட்டி

இதையடுத்து மகாதீர் தலைமையேற்றுள்ள பெர்சாத்து கட்சி சார்பாகவே பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை. மாறாக, அக்கட்சியின் மற்றொரு முக்கிய பிரமுகரும், ஹராப்பான் கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவருமான மொகிதின் யாசின் முன்மொழியப்பட்டுள்ளார்.

அதேபோல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பாக அன்வார் இப்ராகிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை வேறு யார் பெயரும் அறிவிக்கப்படவில்லை. எனவே அன்வார் இப்ராகிம், மொகிதின் இடையே போட்டி நிலவுகிறது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் தம்மால் இப்போதே பெரும்பான்மையை நிரூபிக்க இயலும் என்பதால் மாமன்னரை சந்திக்க அனுமதி கோரியுள்ளதாக அன்வார் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை நாடாளுமன்ற வாக்கெடுப்புக்குப் பிறகும் பெரும்பான்மை ஆதரவு கொண்ட பிரதமர் அடையாளம் காணப்படவில்லை எனில், மலேசியா 20 மாதங்களுக்குள் அடுத்த பொதுத் தேர்தலைச் சந்திக்க நேரிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: