You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமா?
ஐஐடி சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ஐஐடி பேராசிரியர்கள் பலரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதுகலை படிப்பில் முதலாமாண்டு மாணவியான பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு பாடம் கற்பித்த பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லோரும் விசாரணை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஊடகத்தினரிடம் பேசுகையில் தற்கொலைச் செய்து கொள்ளும் அளவுக்கு தன் மகள் கோழையாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார். மதரீதியான பாரபட்சத்தை ஒரு பேராசிரியர் தரப்பில் பாத்திமா எதிர்கொண்டார் என்றும் ஒவ்வொரு தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றாலும், தான் மோசமாக நடத்தப்படுவதாக முன்னர் சொல்லியிருக்கிறார் என்றார். தன்னை தரக்குறைவாக நடத்திய பேராசிரியர் ஒருவரின் பெயரை அலைபேசியில் பாத்திமா எழுதிவைத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளதாக தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.
மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறை தலைவர் உமாகாந்த்தாஸ் இடம் பாத்திமா குறித்துக் கேட்டபோது தனது துறையில் உள்ள பலரும் பாத்திமாவின் தற்கொலை ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை எனத் தெரிவித்தார்.
''பாத்திமா எல்லோரிடமும் நன்றாகப் பழகும் மாணவி. துடிப்பானவர். வகுப்பில் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வார். அவருக்கு எல்லோரிடமும் நல்ல நட்பு இருந்தது. ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார் என எங்களுக்குத் தெரியவில்லை. மனஉளச்சல் ஏற்படும் அளவுக்கு ஏதாவது பிரச்சனை நடந்திருந்தால், முதலில் எங்கள் துறையில் புகார் கொடுத்திருக்கலாம். அதற்கான வழிமுறைகளை நாங்கள் பின்பற்றி நடவடிக்கை எடுத்துவருகிறோம். எங்களிடம் ஏன் எதையும் சொல்லவில்லை என அதிர்ச்சியாக உள்ளது,'' என்றார் உமாகாந்த்தாஸ்.
கோட்டூர்புரம் துணை ஆணையர் சுதர்ஷனிடம் பாத்திமாவின் தற்கொலை தொடர்பான விசாரணை குறித்து கேட்டபோது, ''தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என பதிவு செய்துள்ளோம். உடற்கூறு பரிசோதனை செய்து பெற்றோரிடம் மாணவியின் உடலை ஒப்படைத்துள்ளோம். பாத்திமாவின் உடன் பயிலும் சகமாணவர்கள் மட்டுமின்றி அந்த துறையில் உள்ள பேராசிரியர்களும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம். மாணவியின் அலைபேசி எங்களிடம் உள்ளது. அவரது இறப்புக்கு முன்னர் பேசிய விவரங்கள், தகவல்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்,''என்றார்.
பாத்திமாவின் தந்தை தனது மகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது பற்றிக் கேட்டபோது, ''விசாரணையை முழுவதுமாக முடித்தால்தான் எங்களால் பதில் சொல்லமுடியும். பேராசிரியர்கள் பலர் பல அலுவல்களில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் நேரத்தை பொறுத்து அவர்களிடம் விசாரணை நடைபெறும்,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் சமூக ஊடகங்களில் #justiceforfathimalatheef என்ற ஹாஷ்டேகும் டிரண்டாகி வருகிறது.
பலர் அவர் அலைப்பேசியிலிருந்தாக ஒரு செய்தியையும் பகிர்கின்றனர்.
அதில் அவர் தனது பெயர்தான் பிரச்சனைக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :