You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடப்பட்டதால் சர்ச்சை
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல், சமஸ்கிருத மொழியில் கடவுள் வணக்கப்பாடல் இசைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்பாதை தொடர்பான தேசிய தொழில்நுட்ப மையத்தை சென்னை ஐஐடியில் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி ஐஐடி வளாகத்தில் இன்று காலையில் கையெழுத்தானது. மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் ஐஐடியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
விழா துவங்குவதற்கு முன்பாக, மகா கணபதி என்ற சமஸ்கிருதப் பாடல் மாணவர்கள் நான்கு பேரால் பாடப்பட்டது. இதற்கு விருந்தினர்கள் எழுந்துநின்று மரியாதை செலுத்தினர். இதற்குப் பிறகு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபாக உள்ள நிலையில், அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடலை இசைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
"இந்தியை திணித்து சமஸ்கிருதத்திற்கு மகுடம் சூட்டும் வேலை"
"அனைத்துத் துறைகளிலும் இந்தியைத் திணித்து, செத்துப்போன மொழியான சமஸ்கிருதத்திற்கு மகுடம் சூட்டும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு கட்டம்தான் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடலைப் பாடியது" என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. "பாடப்பட்டது சமஸ்கிருத மொழியில் உள்ள பாடல் மட்டுமல்ல, இந்து மத வழிபாட்டுப் பாடல். மத்திய ஆளுங்கட்சியினரின் ஒற்றை மத ஆதிக்க அரசியல், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழித் திணிப்பு இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை என்பதற்கு இன்னொரு ஆதாரமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது" என்று அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
"என்ன பாடுகி்றோம் என்பது பிரச்சனையில்லை"
இது குறித்து சென்னை ஐஐடியின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியிடம் ஊடகங்கள் கேட்டபோது, "என்ன பாடுகிறோம், என்ன பாடவில்லை என்பது இங்கே பிரச்சனையில்லை. தமிழ்நாட்டு மாணவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறீர்களா, தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றுகிறீர்களா, இங்கிருக்கும் கல்லூரிகளுக்கு உதவுகிறீர்களா, தமிழ்நாட்டிற்கு பணியாற்றுகிறீர்களா என்பதைக் கேளுங்கள். எந்த பாஷையில் பாடுகிறீர்கள் என்பதைக் கேட்காதீர்கள்" என்று தெரிவித்தார்.
"ஒரு மதம் சம்பந்தப்பட்ட பாடலை எப்படி, ஒரு அரசு நிகழ்வில் பாடலாம் என்று கேட்டபோது, "இன்று மாணவர்கள் இந்தப் பாடலைத் தேர்வுசெய்தார்கள். மதம் சம்பந்தப்பட்ட விவகாரமே இல்லை இது. பொதுவாக மாணவர்களிடம் சென்று, இன்வொகேஷனுக்கு பாடவேண்டும், யாரால் பாட முடியம் என்று கேட்போம். இது பொறியியல் கல்லூரி. 100 பேர் இருந்தால் 3 பேர்தான் கையைத் தூக்குவார்கள். அவர்களுக்குத் தெரிந்தபாடலைத்தான் அவர்கள் பாடுவார்கள். சில சமயம் மராட்டியப் பாடலைக்கூட பாடியிருக்கிறார்கள். இது குறித்து ஐஐடியில் விதிமுறைகள் ஏதும் கிடையாது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி மத்திய அரசு நிறுவனமென்பதால், அங்கு சமஸ்கிருதப் பாடல் பாடியதில் தவறில்லை என பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்