You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வரும்'
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரையறைக்குள் வரும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இல் வரையறுக்கப்பட்டுள்ள 'பொதுமக்களுடன் தொடர்புடைய அமைப்பு' எனும் விளக்கத்துக்குள் வருவதாக ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று ஏக மனதாக தீர்ப்பளித்துள்ளது.
"வெளிப்படைத்தன்மை நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்காது; அதை வலுப்படுத்தவே செய்யும்," என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இன்றைய தீர்ப்பு, உச்ச நீதிமனற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வரும் என்று 2010இல் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எல். தத்து, ஏ.கே. கங்குலி மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் நியமனம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளர் சுபாஷ் சந்திர அகர்வால் கோரிய தகவல்களை உச்ச நீதிமன்றத்தின் மத்திய தகவல் அலுவலகம் வழங்க மறுத்தது.
எனினும், மேல்முறையீட்டு அலுவலகத்தில் தனக்கு ஆதரவான தீர்பபை பெற்றார் அகர்வால்.
மேற்கண்ட மூன்று நீதிபதிகளைவிட மூத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருப்பதால், அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்படுவதை பிரதமர் அலுவலகம் எதிர்த்ததாக கூறப்பட்டதை அடுத்து, அது தொடர்பாக பிரதமர் அலுவலகம் மற்றும் உச்ச நீதிமன்றம் இடையே மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்ற விவரங்களை அகர்வால் கோரியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு ஆகஸ்டு 2016இல் அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பரிந்துரை செய்தது. அந்த அமர்விலும் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இருந்தார்.
பிரஃபுல்லா பந்த் மற்றும் ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் மற்ற இரண்டு நீதிபதிகள் ஆவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்