You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் டிரம்ப்: மோதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன என டிரம்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
இரண்டுநாள் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், இன்று பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த டிரம்பை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் வரவேற்றனர்.
குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து புறப்பட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்றார் டிரம்ப்.
அதன்பின் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்திற்கு மோதி மற்றும் டிரம்ப் புறப்பட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் டிரம்ப் மற்றும் மோதி செய்தியாளர்களை சந்தித்தனர்.
மோதியின் உரை
"இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவின் முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது,"
"இன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பாதுகாப்பு, மூலோபாய ஆற்றல் கூட்டணி, வர்த்தகம் போன்ற பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இருநாடுகளுக்கும் மத்தியிலான பாதுகாப்பு கூட்டணியை பலப்படுத்துவதே எங்கள் கூட்டணி உறவின் முக்கிய அம்சமாகும்,"
"மன நலம் மற்றும் மருத்துவப் பொருட்களின் பாதுகாப்பு உட்பட இந்தியா மற்றும அமரிக்கா பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது,"
"இருநாட்டு வர்த்தக அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு ஒரு சட்ட வடிவத்தை கொடுக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்," என்று மோதி பேசினார்.
டிரம்பின் உரை
"இந்திய மக்கள் எங்களுக்கு வழங்கிய மகத்தான வரவேற்பை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம்,"
"மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அப்பாச்சி மற்றும் எம்எஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் போன்ற முன்னணி அமெரிக்க ராணுவ உபரகரணங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது;
தீவிர இஸ்லாமியவாத பயங்கரவாததிலிருந்து இருநாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பை உறுதிபடுத்திக் கொண்டோம்,"
"பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களை அழிக்க அமெரிக்கா பாகிஸ்தானுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது.
பாதுகாப்பான 5ஜி தொழில்நுட்பம் குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம்.
இதுவரை இல்லாத அளவு இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவு வலுப்படுத்தப்பட்டுள்ளது." என்றார் டிரம்ப்
இதனிடையே டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப், தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சர்வோத்யா மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு குழந்தைகளுடன் உரையாடினார்.
நேற்றைய பயணம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று (திங்கள்கிழமை) இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்கள் முதலில் ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று, பின் அங்கு மொடேரா அரங்கத்தில் நடைபெற்ற `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் உரையாற்றியபின் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.
டிரம்பின் உரை
ஆமதபாத்தின் மொடேரா அரங்கம் முழுவதும் கூடியிருந்த மக்கள் முன் இந்திய பிரதமர் மோதியும், டிரம்பும் உரையாற்றினர்.
அப்போது பேசிய டிரம்ப், "`டீ வாலா` வாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பிரதமர் மோதி. அவர் டீ விற்கும் பணி செய்தார். அனைவரும் அவரை நேசிக்கின்றனர். ஆனால் நான் சொல்கிறேன் அவர் மிகவும் கடினமானவர்." என தெரிவித்தார்.
"நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டுமல்ல; நீங்கள் கடின உழைப்பால் இந்தியர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு நீங்கள்," என்று பேசிய டிரம்ப், "இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்க இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும். ஐஎஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது," என்று தெரிவித்தார்.
"மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற உபகரணங்களை இந்திய ஆயுதப் படைக்கு விற்கும் ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும்,"என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
மோதியின் உரை
"இந்த நிகழ்ச்சியின் பெயர் `நமஸ்தே` - இது உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதமாகும். இதன் பொருள் நாங்கள் அந்த மனிதருக்கு மற்றும் மரியாதை வழங்கவில்லை. அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையையும் மதிக்கும் என்று பொருள்,"
டிரம்பின் இந்த வருகையால் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவு மேலும் நெருக்கமானதாக மாறியுள்ளது என்று மோதி தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: