You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி, சச்சின், கோலி குறித்து டிரம்ப் கூறியது என்ன?
36 மணிநேர பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள மொடெரா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தினார்.
இந்தியா - அமெரிக்காவுக்கிடையேயான பொருளாதாரம், ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சில எதிர்பார்க்காத விடயங்கள் குறித்து பேசினார். அவற்றில் சில விடயங்களை கீழே தொகுத்தளித்துள்ளோம்.
- அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, மதிக்கிறது என்பதை கூறுவதற்காக நானும் எனது மனைவியும் 8,000 கிலோமீட்டர்கள் பயணித்து இங்கு வந்துள்ளோம்.
- இந்த குறிப்பிடத்தக்க விருந்தோம்பலை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். இந்தியா எங்களது இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
- பிரதமர் நரேந்திர மோதி 'டீ வாலாவாக' வாழ்க்கையை தொடங்கினார், அவர் தேனீர் விற்பனையாளராக பணியாற்றினார். எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள், ஆனால் அவர் மிகவும் உறுதியானவர் என்பதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
- நரேந்திர மோதி, நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டுமல்ல, கடின உழைப்பு மற்றும் முழு ஈடுபாட்டின் மூலம், இந்தியர்கள் அவர்கள் விரும்பும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் உதாரணமாக இருக்கிறீர்கள்.
- உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாலிவுட் படங்கள், பாங்க்ரா நடனம் மற்றும் தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே மற்றும் ஷோலே போன்ற மகத்தான படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
- தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி போன்றவர்களின் சாதனைகளை கொண்டாடும் மக்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.
- இந்தியா சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை முதலாக கொண்டு செயல்படுகிறது. பல்வேறு சமூகங்களும் மொழிகளும் இருந்தாலும், நீங்கள் அனைவரும் ஒரு சிறந்த தேசமாக ஒன்றுபடுகிறீர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: