இந்தியாவில் டிரம்ப்: இந்த பயணத்தால் அமெரிக்க அதிபர் சாதிக்க நினைப்பது என்ன?

    • எழுதியவர், ருத்ரா சௌத்ரி
    • பதவி, பிபிசிக்காக

முதன்முறையாக இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்தியாவுக்கு வரும் ஏழாவது அமெரிக்க அதிபர் டிரம்ப். தூதரக உறவுகள் மற்றும் பாதுகாப்பு பற்றி எழுதும் ருத்ரா சௌத்ரி, இந்தப் பயணத்தின் முக்கியத்துவம் பற்றி விவரிக்கிறார் இந்த கட்டுரையில் விவரிக்கிறார்.

டிரம்பின் இரண்டு நாள் பயணம் அவருடைய ’பெருமையைக்’ கூட்டுவதற்காக, முக்கியமாக, 2020 அமெரிக்க பொதுத் தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து கொள்வதற்கானதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அவர் மூன்று நகரங்களுக்குச் செல்கிறார்: நாட்டின் தலைநகர் டெல்லி; ஆக்ரா, அங்கு தாஜ்மஹாலை பார்க்கிறார்; மற்றும், குஜராத் மாநிலத்தில் பிரதானமான ஆமதாபாத் நகரம், அங்கு 100,000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார். அந்த நிகழ்வுக்கு, ``நமஸ்தே டிரம்ப்'' என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டன் நகரில் பங்கேற்ற ``Howdy, Modi!'' என்ற நிகழ்ச்சிக்குப் பிரதி உபகாரமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹூஸ்டன் நிகழ்ச்சியில் நரேந்திர மோதியும், டிரம்ப்பும் அமெரிக்காவில் வாழும் 50,000 இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினர்.

இந்த வருகைகள் சாதாரணமான நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதோ அல்லது சாதாரண சூழ்நிலையில் அமைந்தவையோ அல்ல. இந்தியா குறித்த அமெரிக்க அதிபரின் பொதுவான அணுகுமுறையில் ஒரு மாற்றத்துக்கு கட்டாயப்படுத்தும் வகையிலும் இவை அமைந்துள்ளன.

அமெரிக்காவில் உள்ள 2.4 மில்லியன் இந்தியர்களின் தயவைப் பெறுவதற்காக, இந்தியாவின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்துக்கு டிரம்ப்பை சம்மதிக்க வைப்பதாக இது அமைந்துள்ளது.

அவருடைய ஈகோவுக்கு ஒரு வகையில் இது வலு சேர்ப்பதாக இருக்கும்: பலமான, புத்திசாலித்தனமான உறவுகளை உருவாக்கும் வகையில் இது இருக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் வகையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாவதற்கான வாய்ப்புகள் குறைவே.

ஆப்பிள், வால்நட், மருத்துவ உபகரணங்களின் விலைகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன; இந்தியாவின் பால் பொருள்கள், கோழிப்பண்ணை மற்றும் மின்னணு வணிக சந்தையில் தங்களுக்கு அதிக இடமளிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்துகிறது; அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் வரிகளை குறைக்க வேண்டும் என்ற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

அமெரிக்க அரசின் தொழில் துறை பிரதிநிதியாக இருக்கும், சமரசத்துக்கு இடம் தராதவராக இருக்கும் ராபர்ட் லைத்திஜெர் இந்தப் பயணத்தில் இடம் பெறுவாரா அல்லது தவிர்த்துவிடுவாரா என்ற கருத்துகள், ஒப்பந்தம் எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உணர்த்துவதாக உள்ளன. குறைந்தபட்சம் இப்போதைக்கு இருக்காது என்று தெரிகிறது. டிரம்ப்பின் வார்த்தையில் சொன்னால், பேரம் உருவாக்குபவருக்கு எந்த ``பேரமும்'' இருக்காது.

2008 ஆண்டில் 66 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்த அமெரிக்கா - இந்தியா வர்த்தகம் 2018ல் 142 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது. இந்தியாவின் ஜிடிபி ஆண்டுக்கு 7 - 8 சதவீதம் என்ற அளவில் வளர்ந்த போது, இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் வர்த்தகம் உயர்ந்தது.

ஆனால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்த நிலையில் (2019 - 20ல் 5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது), ரொம்பவும் பாதுகாப்பான பொருளாதாரக் கொள்கைகளின் அறிமுகம், தற்போது இந்தியாவுக்குச் சாதகமாக உள்ள வர்த்தகப் பற்றாக்குறையை சமன் செய்ய டிரம்ப் எடுத்த நடவடிக்கை ஆகிய காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைத்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், வர்த்தக உறவுகள் குறித்த விஷயத்தில் அமெரிக்க அதிபர், விலகி வந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சம்மதிக்க வைக்க வேண்டிய கட்டாயம் திரு. மோடியின் அரசுக்கு உள்ளது. அமெரிக்க - இந்திய உறவுகளில் முக்கியத்துவமான விஷயங்களில் கவனம் செலுத்த வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

உலகில் மிக அதிக அளவில் டேட்டா பயன்படுத்தும் சந்தையாக இந்தியா இருக்கிறது. தனிநபர் டேட்டா பயன்பாடு உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகமாக உள்ளது. அமெரிக்காவின் ``பெரிய தொழில்நுட்ப'' நிறுவனங்களுக்கு, வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இப்போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலும், அமெரிக்க பொருள்கள் மற்றும் வணிகத்துக்கு, மிகப் பெரிய வளரும் சந்தையாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும்.

இந்தியா பெருமளவில் ஆயுதங்களும் இறக்குமதி செய்கிறது. இந்த உறவுகளில் பாதுகாப்புத் துறை வர்த்தகம் நல்ல வாய்ப்புள்ள துறையாக இருக்கிறது. கடந்த தசாப்தத்தில் இந்தியா - அமெரிக்கா பாதுகாப்புத் துறை வர்த்தகம் பெருமளவு உயர்ந்திருக்கிறது. 2008ல் ஏறத்தாழ எதுவுமே இல்லை என்ற நிலையில் இருந்து 2019ல் 15 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அளவை எட்டியுள்ளது.

பாதுகாப்புத் துறை தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் - அமெரிக்காவின் பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் பன்முக பயன்பாடு கொண்ட 24 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் - டிரம்ப்பின் இந்திய வருகையின் போது பூர்த்தி செய்யப்படலாம் என தெரிகிறது.

பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் தொடர்பாக நுணுக்கமான விஷயங்களை அதிகாரிகள் முடிவு செய்து கொண்டிருக்கும் நிலையில், டிரம்ப்பை அசத்துவதற்காக பிரமாண்டமான ஸ்டேடியம் மற்றும் நகரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. தன்னுடைய செல்வாக்கை காட்டிக் கொள்வதில் டிரம்ப்புக்கு பிடித்தமான விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கும் மேலானதாக இந்த தனித்துவமான உறவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1945க்குப் பிந்தைய உலக அரசியல் அமைப்பு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது: சர்வதேச உத்தரவாதங்களில் இருந்து அமெரிக்கா பகுதியளவுக்கு பின்வாங்கிக் கொள்வது, பருவநிலை மாறுபாடு தொடர்பான ஒப்பந்தங்களில் பன்முக வர்த்தக ஒப்பந்தங்களை மாற்றும் திட்டத்தில் இருந்து பின்வாங்கியதன் மூலம் தெளிவாகியுள்ளது; பெல்ட் அண்ட் ரோடு முயற்சி (BRI) மூலம் சீனாவின் டிரில்லியன் டாலர் முயற்சி ரஷியா திரும்பியது; பிரெக்ஸிட்; மற்றும் 5 ஜி போன்ற புதிய தொழில்நுட்ப விஷயங்களில் ஐரோப்பாவில் ஒற்றுமை இல்லாதது என மாற்றங்கள் நடந்துள்ளன. உலகின் மிகப் பெரிய மற்றும் மீட்கும் தன்மையுள்ள ஜனநாயக நாடுகள் பரவலான சவால்கள் மற்றும் கவலைகள் மீது அக்கறை காட்ட வேண்டியுள்ளது.

ஆமதாபாத்தில் நடன நிகழ்ச்சிகளுக்கும், தாஜ்மஹாலில் நீண்ட நேரம் நடைபயிலும் நேரத்துக்கும் இடையில், உலகின் தற்போதைய நிலை குறித்து திரு. மோதியும், திரு. ட்ரம்ப்பும் பேசுவதற்கு நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதில் இந்தியா - அமெரிக்கா உறவின் உண்மையான வாய்ப்பு பற்றியும் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்கொல்லி நோய்கள் பரவாமல் தடுப்பது, அவற்றைக் கையாள்வது குறித்த விஷயங்களில் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குதல் மற்றும் பலப்படுத்துதல் பற்றியும் தீவிரமாக விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு இந்த அவசியம் அதிகமாக உள்ளது. புதிதாக உருவாகி வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் எல்லைகள் கடந்து டேட்டா பரிமாற்றம் ஆகியவற்றின் சவால்கள் பற்றி மறு ஆய்வு செய்து, புதிய சர்வதேச கட்டமைப்புகளை (ஒருமித்த கருத்துடைய நாடுகளுக்கு இடையில் பங்களிப்பை உருவாக்குதல் போன்ற) அல்லது பழைய திட்டங்களைப் புதுப்பித்தல் (உதாரணமாக ஜி 20 மூலமாக) தற்கால கவலைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டியுள்ளது.

வர்த்தகம் மற்றும் ஒப்பந்தங்களில் டிரம்ப் ஆர்வம் காட்டுவார் என்றாலும், அவரை வியப்பில் ஆழ்த்த வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது என்றாலும், இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் 21வது நூற்றாண்டை உண்மையில் எப்படி உருவாக்கலாம் என்பது தொடர்பான கலந்துரையாடலுக்கு இரு தலைவர்களுக்கும் போதிய நேர அவகாசம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ருத்ரா சௌத்ரி Carnegie India அமைப்பின் இயக்குநராக உள்ளார். சிந்தனையாளர், Forged in Crisis: India and the United States Since 1947 - புத்தகத்தை எழுதியவர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :