You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CAA NRC: "ஆதார் தகவல்களை தவிருங்கள்" இஸ்லாமியர்கள் வாக்கு வங்கியை தக்கவைக்க அதிமுகவின் முயற்சியா இது?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பின் போது ஆதார் தகவல்கள் கேட்பதைத் தவிர்க்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுப்பதன் மூலம், தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தமிழக அரசு நினைக்கிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்றும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என ஒன்பது நாட்களாக வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடங்கிய பின்னர், நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தில், குடியுரிமை சட்டத்தை ஏற்கமாட்டோம் என தீர்மானம் கொண்டுவரவேண்டும் என திமுக கோரியபோது, அதனை அவைத்தலைவர் தனபால் நிராகரித்தார். மேலும் கடந்த பிப்ரவரி 20ம் தேதி முடிவுற்ற சட்டமன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கடிதம் எழுதி உள்ளோம்
இதனை அடுத்து, தேசிய மக்கள் பதிவேட்டில் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களைக் கேட்கக்கூடாது என தற்போது மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பை விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் என்ன பாதிப்பு சொல்லுங்கள்" என்று சட்டப்பேரவையில் வெற்று முழக்கம் இட்டுவிட்டு, இப்போது, என்பிஆர் கணக்கெடுப்பில் 'தாய்மொழி, தந்தை, தாயார் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி' ஆகியவற்றைத் தவிர்க்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருப்பதாக ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் கூட்டறிக்கை விட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் எழுதியுள்ள கடிதத்தின் தாக்கம் என்னவாக இருக்கும் எனப் போராட்டக்காரர்கள், அரசியல் விமர்சகர் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பிபிசி தமிழ் கேட்டறிந்தது.
ஒரு பயனும் இல்லை
வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் கடந்த ஒன்பது நாட்களாகக் கலந்துகொண்டுள்ள கதீஜா பீவி பேசுகையில் குடியுரிமை சட்டம் முழுவதுமாக ரத்து என்ற அறிவிப்பு வந்தால்தான் போராட்டம் கலையும் என்கிறார். ''முதல்வர்,துணை முதல்வர் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தால் எந்த பயனும் இல்லை. நமக்கான உரிமையைக் கேட்காமல், அவர்களிடம் கடிதம் எழுதி, கோரிக்கை விடுப்பதால் எந்த பயனும் ஏற்படாது. அண்டை மாநிலமான கேரளாவில் குடியுரிமை சட்டத்தின் கீழ், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க அனுமதிக்கமாட்டோம் என உறுதியாகச் சொல்கிறார்கள். தமிழகத்தில் ஏன் உறுதியான முடிவை அரசாங்கம் எடுக்க மறுக்கிறது,''எனக் கேள்வியெழுப்புகிறார்.
இஸ்லாமியர்களின் வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர அதிமுக எடுக்கும் முயற்சியாக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கடிதத்தைப் பார்ப்பதாகக் கூறுகிறார் அரசியல் விமர்சகர் ராமஜெயம்.
''அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் மற்ற சமூகத்தினரைப் போல இஸ்லாமியர்களின் வாக்குகள் அவசியம். ஓட்டு அரசியலாக மட்டும் இந்த விவகாரத்தைப் பார்க்காமல் இந்த நகர்வை கவனிக்கவேண்டும். ஒரு சில முக்கிய பிரச்சனைகளின் மாநிலக் கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு மத்திய அரசை பின்வாங்கவைத்திருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, இந்தி எதிர்ப்பு, காவிரி விவகாரம் ஆகியவற்றில் இரண்டு திராவிட கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றாக இருந்தது. குடியுரிமை சட்டமும் இதுபோன்ற ஒரு பொது பிரச்சனைதான். ஆனால் அதிமுக குடியுரிமை சட்டம் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் வெளியிடாமல் இருந்தது வருத்தத்திற்குரியது,''என்கிறார் ராமஜெயம்.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் எழுதியுள்ள கடிதத்ததால் பெரிய தாக்கம் ஏற்படப்போவதில்லை என்று கூறும் அவர், ''தமிழக அரசியலில் அதிமுகவின் பங்கு நாளுக்குநாள் குறைந்துவருகிறது என்பதைத்தான் இந்த கடிதம் காட்டுகிறது. இந்தியா முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்படும் பிரச்சனை குறித்து எந்த கேள்வியும் எழுப்பாமல் அதிமுக இருப்பது விமர்சனத்திற்குரியது. இந்திய அளவில் தமிழகம் எடுக்கும் முடிவுகளைப் பல மாநிலங்கள் வியந்து பார்த்த நிலை இருந்தது. ஆனால் குடியுரிமை சட்டம் விவகாரத்தில், அதிமுக இத்தனை காலம் விவாதிக்காமல் ஆறப்போட்டுவிட்டார்கள். திமுகவினர் மிகவும் வலிமையாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில், தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக இந்த கடிதம் அனுப்பப்பட்டிருக்கும்,'' என்கிறார் ராமஜெயம்.
பல ஆண்டுகளாக சென்சஸ் சட்டத்தின் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது என்றும் இனிவரும் காலங்களில், குடியுரிமை சட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடத்துவதை, தமிழக அரசு உறுதியாக எதிர்க்கவில்லை என்கிறார் சமூக ஆர்வலர் ஹென்றி திபேன்.
எந்த நன்மையும் இல்லை
''குடியுரிமை சட்டம் பற்றி அதிமுகவினர் பலருக்கும் தெளிவான பார்வை இல்லை. சிறுபான்மையினர் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் எனப் பேட்டி கொடுக்கிறார்கள். குடியுரிமை சட்டம் சிறுபான்மையினரை மட்டும் பாதிக்காது, பாதிப்பு எல்லோருக்கும்தான். குடியுரிமை சட்டத்தின் கீழ் சென்சஸ் எடுப்பதைத்தான் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு என்கிறார்கள். சென்சஸ் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் கணக்கெடுப்பில், நாம் பகிரும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் கணக்கெடுப்பில் கொடுக்கும் தகவல்களை அரசாங்கம் நினைத்தால் சந்தேகம் இருப்பதாகக் கூறி, யாரை வேண்டுமானாலும், இந்திய குடியுரிமை கிடையாது எனக் குடியுரிமையை ரத்து செய்யலாம். இதனை விளக்கி மக்களின் ஆதங்கத்தை மத்திய அரசிடம் வெளிப்படுத்தி, உரிமையோடு போராடாமல் கடிதம் கொடுப்பதால் எந்த நன்மையும் இல்லை,''என்கிறார் ஹென்றி.
மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதம் ஒரு அரசியல் நகர்வு மட்டுமே என்றும் போராட்டக்காரர்களிடம் தங்களது இருப்பை காட்டிக்கொள்வதற்காக அதிமுக எடுக்கும் நடவடிக்கை இந்த கடிதம் என்கிறார் ஹென்றி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: