You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CAA Protest: வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டம் எட்டாம் நாளை எட்டியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்றும், மத்திய அரசு இந்த சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றுவருகிறது.
முதல் முறையாக போராட்டக்களத்தில் இறங்கியுள்ள பெண்கள் பலரும், தங்களது குழந்தைகளுடன் ஒரு வார காலமாக வண்ணாரப்பேட்டை பென்சில் பாக்டரி பகுதியில் முகாமிட்டுள்ளனர். கடந்த வெள்ளியன்று போராட்டத்திற்கு வந்தவர்களில் பலர் வீடு திரும்பவில்லை.
பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளின் கல்வியில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதால், போராட்டம் நடக்கும் இடத்தில் குழந்தைகளை படிக்க வைப்பதாக சொல்கிறார்கள்.
பிபிசி தமிழிடம் பேசிய ஆஸ்மா ரஹமதுல்லா(38) தனது மகன் முசம்மில்லை பரீட்சைக்கு தயார் செய்வதாக கூறினார். ''என் மகன் ஐசிஎஸ்சி பிரிவில் நான்காம் வகுப்பு படிக்கிறான். இதுவரை நடந்த பரீட்சைகளுக்கு வீட்டில் சொல்லிக்கொடுத்தேன். தற்போது நான் போராட்டத்தில் இருக்கிறேன். இந்த போராட்டம் அவன் எதிர்காலத்திற்கானது என்பதால், நான் இந்த களத்தில் இருந்து வீட்டுக்கு போக முடியாது. அவனது புத்தகங்களை கொண்டு வந்து இங்கே முடிந்தவரை சொல்லிக் கொடுக்கிறேன். அவனது பள்ளியில் தகவல் சொல்லிவிட்டேன். முதல் நான்கு நாட்கள் இவன் பள்ளிக்கு போகவில்லை. போராட்டம் முடியும்வரை இந்த களம்தான் எங்கள் வீடு,''என்கிறார் ஆஸ்மா.
முசம்மிலிடம் பேசியபோது தனது அம்மா போராட்டத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்துள்ளதாக சொல்கிறான். ''கடந்த வெள்ளிக்கிழமை இங்கு வந்தோம். போலீஸ் தடியடி நடந்தது. அம்மா இங்கேதான் நாம் இருக்கவேண்டும் என சொன்னார். எனக்கு முதலில் பயம் இருந்தது. இப்போது என் நண்பர்கள் எல்லோரும் இங்கேதான் இருக்கிறோம். நான்கு நாட்கள் பள்ளிக்கு செல்லாததால், மற்ற நண்பர்கள் என்னிடம் கேட்டபோது, போராட்டத்தில் இருந்ததாக சொன்னேன்''என்கிறான் புன்னகையுடன்.
போராட்டத்தை பற்றி கேட்டபோது, போராட்டக்களத்தில் ஒலிக்கும் கோஷங்களை பற்றி கூறிய சிறுவன், ''குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்தால்தான் அம்மா வீட்டுக்கு வருவார். அன்றுதான் போராட்டம் முடியும்,'' என்றான்.
ஷெனாஸ், அமீர் தம்பதி முழுநேரமாக இருவருமே போராட்டத்தில் இருக்கிறார்கள். மூன்று குழந்தைகளும் போராட்டம் நடைபெறும் இடத்தில்தான் பெற்றோரை சந்திக்கிறார்கள். ''காலை பள்ளிக்கு போகும் முன்பாகவும், இரவில் தூங்குவதற்கு முன்பாகவும் சிறிது நேரம் பாடங்களை சொல்லிக்கொடுக்கிறோம். என் மகனுக்கு மூன்று பரீட்சைகள் உள்ளன. வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் நாங்கள் இருவருமே தன்னார்வலர்களாக இருப்பதால், குழந்தைகளுக்கான நேரத்தை முழுமையாக ஒதுக்கமுடியவில்லை. ஆனால் இந்த போராட்டம் சமூகத்திற்கான போராட்டம் என்பதால், நாங்கள் எங்கள் வசதிக்காக பின்வாங்கவிரும்பவில்லை,''என்கிறார் அமீர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பதால், குழந்தைகளை மட்டும் வீட்டில் தங்கவைப்பதை விரும்பவில்லை என்பதால் தங்களுடன் தங்கவைப்பதாக தெரிவித்தார் அமீர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் வந்து போராட்டக்கார்களிடம் பேசுகிறார்கள்.
இருப்பினும், கடந்த பிப்ரவரி 14 அன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை அரசு கொண்டுவரவேண்டும் என திமுக கோரியபோது, அந்த கோரிக்கையை அவைத்தலைவர் தனபால் நிராகரித்துவிட்டார். அடுத்த சட்டமன்ற கூட்டம் எப்போது நடைபெறும் என தேதி அறிவிக்கப்படாமல் பிப்ரவரி 20ம் தேதி அன்று சட்டமன்ற கூட்டம் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :