TNPSC Group 4 - டிஎன்பிஎஸ்சி முறைகேடு நடந்த இடத்தில் இடைத்தரகரிடம் விசாரணை

இடைத்தரகர், டிஎன்பிஎஸ்சி அலுவலக பணியாளரிடம் விசாரணை

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இடைத்தரகர் மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலக பணியாளர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் ராமேஸ்வரம் அழைத்து வந்து விசாரித்தனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக ஓம்காந்தன், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் ஆறு நாள் காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்ததன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இருவரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று (வெள்ளிக்கிழமை) ராமேஸ்வரம் அழைத்து வந்து விசாரித்தனர்.

News image

குரூப் 4 முறைகேட்டில் இதுவரை 20 பேர், வி.ஏ.ஓ தேர்வு முறைகேடு தொடர்பாக 4 பேர், குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 22 பேர் என இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குரூப் 4 முறைகேட்டில் முக்கிய மூளையாக செயல்பட்ட இடைதரகர் ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலக பணியாளர் ஓம்காந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, இருவரும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளிலும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் மீதும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி சிவனு பாண்டியன் தலைமையில், ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தன் ஆகிய இருவரையும் ராமேஸ்வரத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

குரூப் 4 தேர்வுக்கு ஒரு நாள் முன்னரே ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இதனைதொடர்ந்து, ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள சார் கருவூல அலுவலகத்துக்கும் சர்ச்சைக்குரிய தேர்வு மையங்களுக்கும் இடையே உள்ள பொந்தம்புளி என்ற இடத்திற்கு சிபிசிஜடி போலீசார் இருவரையும் வேனில் அழைத்து வந்தனர்.

இடைத்தரகர், டிஎன்பிஎஸ்சி அலுவலக பணியாளரிடம் விசாரணை

பின்னர் வேனில் இருந்து ஜெயக்குமாரை மட்டும் இறங்க சொன்ன போலிசார் குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் எப்படி முறைகேடு செய்தனர் என்பது குறித்து ஜெயக்குமார் அளித்த வாக்குமூலத்தை காணொளியாக பதிவு செய்தனர்.

பின்னர், விசாரணைக்காக இருவரையும் ராமேஸ்வரத்தில் இருந்து தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய மற்ற மாவட்டங்களுக்கு அழைத்து சென்றனர்.

முன்னதாக மதுரை மாவட்டம் மேலூர் புறவழிச்சாலையிலுள்ள தனியார் உணவகம் அருகில் விடைத்தாள்களை அரசு வாகனத்தில் இருந்து எடுத்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு அழைத்து வந்து மேலூர் கிராம நிர்வாக அலுவலர் தமோதரன் மற்றும் உதவியாளர் பதினெட்டான் முன்னிலையில், ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரனை நடத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: