IND vs NZ கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் 165 ரன்களில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து

பட மூலாதாரம், MARTY MELVILLE / getty images
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
நியூசிலாந்து தரப்பில் இரு பந்து வீச்சாளர்கள் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய தரப்பில் இருவர் டக் அவுட் ஆகினர்.
வெள்ளிக்கிழமை தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மழை காரணமாக, வெள்ளியன்று, முதல் நாள் ஆட்டம் 55 ஓவர்களிலேயே முடித்து வைக்கப்பட்டபோது, இந்தியா ஐந்து விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று, சனிக்கிழமை, தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகளையும் மளமளவென பறிகொடுத்தது இந்திய அணி.
இந்திய அணியில் ஒருவர்கூட 50 ரன்களைக் கடக்கவில்லை. ரஹானே 138 பந்துகளில் 46 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
அஷ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள்.

பட மூலாதாரம், Hagen Hopkins / getty images
இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள 25 வயதாகும் நியூசிலாந்து பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய கேப்டன் கோலி உள்பட நால்வரின் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
நியூசிலாந்தின் இன்னொரு பந்து வீச்சாளரான டிம் சௌத்தியும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின்நியூசிலாந்து சுற்றுப்பயணம்
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் விளையாடியுள்ளது.

பட மூலாதாரம், MARTY MELVILLE / getty images
டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வெல்ல, ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று பழி தீர்த்தது நியூசிலாந்து அணி.
பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 16 வரை நடந்த பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்த நிலையிலேயே இன்றைய போட்டி தொடங்கியுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு வெற்றி ஏன் முக்கியம்?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையின்படி இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி முதலிடத்திலும் நியூசிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளன.
அடுத்த ஆண்டு ஐசிசியின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் ஒன்பது அணிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கு உலகக்கோப்பை இருப்பதைப் போல பாரம்பரியம் மிக்க டெஸ்ட் போட்டிகளுக்கும் உலகக்கோப்பை இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Hagen Hopkins / getty images
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் மட்டுமல்லாது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதில் நியூசிலாந்து ஆறாம் இடத்தில் உள்ளது.
2019 - 2021 காலகட்டத்தில் ஒன்பது டெஸ்ட் அணிகள் தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் விளையாடும். அதில் அதிகம் தொடர்களில் வெல்லும் அணிகள் இறுதியில் மோதும்.
தனிப்பட்ட போட்டிகளில் பெறும் வெற்றிகளை அல்லாமல் தொடர்களில் பெறும் வெற்றிகளின் அடைப்படையிலேயே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், இந்த டெஸ்ட் தொடரில் வெல்வது தனது முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும்.
குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகள் பாதிக்க கூடாது என்பதால், டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல், டெஸ்ட் தொடர்களின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படுகிறது.
ஒரு தொடரில் இரண்டு முதல் ஐந்து போட்டிகள் இருக்கும்.
ஆறாம் இடத்தில் உள்ள நியூசிலாந்து தரவரிசையில் முன்னேற இந்தியாவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













