கம்பாலா எருமை பந்தயம் - ஸ்ரீனிவாச கௌடாவின் சாதனையை முறியடித்த நிஷாந்த்

ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிடப்பட்ட கம்பாலா வீரர் ஸ்ரீனிவாச கௌவுடாவின் வேகத்தையே விஞ்சியுள்ளார் நிஷாந்த் ஷெட்டி எனும் கம்பாலா எருமைப் பந்தைய வீரர்.

பிப்ரவரி 1 அன்று கர்நாடகாவில் நடந்த கம்பாலா எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சென்ற ஞாயிறன்று பஜகோலி ஜோகிபேட்டு எனும் ஊரைச் சேர்ந்த நிஷாந்த் ஷெட்டி என்பவர் 143 மீட்டர் தூரத்தை தனது அணியின் எருமைகளை விரட்டிக்கொண்டு 13.61 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார் என்று கம்பாலா எருமை பந்தைய ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கணக்கிட்டால் அவர் முதல் 100 மீட்டர்களை 9.51 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார். இது ஸ்ரீனிவாச கௌடாவின் 9.55 நொடிகள் எனும் நேரத்தைவிட குறைவு என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஸ்ரீநிவாஸா கௌடா கர்நாடக முதல்வர் எடியூரப்பாவால் நேரில் அழைத்து பாராட்டப்பட்டார். அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அப்போது வழங்கப்பட்டது.

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பாக அவரது ஓட்டத்திறன் பரிசோதிக்கப்படும் என்று இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியிருந்தார்.

ஆனால், தனக்கு கம்பாலா விளையாட்டில் கிடைக்கும் வாய்ப்புகளும், கட்டடத் தொழிலாளியாக பணியாற்றுவதன்மூலம் கிடைக்கும் வருவாயும் போதும் என்றும் அவர் கூறிவிட்டார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய ஸ்ரீநிவாச கவுடா, "என்னால் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தகுதி சுற்றில் கலந்துகொள்ள முடியாது. எனக்கு கால்களில் அடிப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் என் கவனம் முழுவதும் கம்பாலாவில் மட்டுமே உள்ளது," என்றார்.

சர்வதேச போட்டிகளில் நடத்தப்படும் சாதனைகளையும் தொழில் முறை அல்லாத உள்ளூர் போட்டிகளில் நடத்தப்படும் சாதனைகளையும் ஒப்பிடக்கூடாது என்று கிரண் ரிஜ்ஜூ கூறியிருந்தார்.

ஸ்ரீநிவாச கௌடாவை உசைன் போல்ட் உடன் ஒப்பிடுவதற்கு, அவர் கலந்துகொண்ட கம்பாலா எருமை பந்தயத்தை நடத்திய அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

"ஒலிம்பிக்ஸ் போன்ற போட்டிகளில் நேரத்தை கணக்கிட துல்லியமான வழிமுறைகள் உள்ளன," என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

தனியாக ஒருவர் ஓடிக் கடப்பதற்கு, வேகமாக ஓடும் எருமைகளுடன் சேர்ந்து ஓடிக் கடப்பதற்கும் வேறுபாடு இருப்பதாக வல்லுனர்களும் தெரிவித்தனர்.

கம்பாலா என்றால் என்ன?

'கம்பாலா' என்றால் துளு மொழியில் 'நெல் பயிரிடப்படும் களிமண் வயல்' என்று பொருள்.

இந்த விளையாட்டு கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் மிகவும் பிரபலமானது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டை போலவே கம்பாலாவும் பாரம்பரியம் மிக்கது.

கம்பாலா போட்டிகளின்போது 132 அல்லது 142 மீட்டர் தூரத்தை, ஒன்றாக இணைத்து கட்டப்பட்ட எருமை மாடுகளைப் பிடித்துக்கொண்டு, வயல்வெளியில் வேகமாக ஓடிக் கடக்க வேண்டும்.

2014இல் ஜல்லிக்கட்டு நடத்துவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்ட சமயத்தில், ஜல்லிக்கட்டு போன்று கால்நடைகளை பயன்படுத்தப்படும் போட்டிகள் அனைத்தையும் இந்திய உச்ச நீதிமன்றம் தடை செய்தது.

2016இல் கம்பாலா போட்டிகள் அனைத்துக்கும் கர்நாடக உயர் நீதிமன்றமும் தடை விதித்தது. சாட்டைகளை பயன்படுத்தக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் 2018இல் கர்நாடக அரசு கம்பாலா போட்டிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கியது.

ஸ்ரீநிவாச கௌடா போன்ற தமது மாணவர்களுக்கு விலங்குகளை காயப்படுத்தாமல் கம்பாலா விளையாட கற்றுக்கொடுத்துள்ளதாகக் கூறுகிறார் பேராசிரியர் கடம்பா.

பல ஆண்டுகளுக்கு முன்பு விளையாடப்பட்ட கம்பாலா மற்றும் தற்போது தாங்கள் விளையாடும் கம்பாலா ஆகிய இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதாக அவர் கூறுகிறார்.

கம்பாலா எருமை பந்தயத்துக்கு அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :