You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CAA Protest: அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்பினர்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற்ற மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை, இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிதம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், இன்று, சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.
அப்போது அனைத்து இஸ்லாமியர் இயக்க கூட்டமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திடீரென, சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியபோது காவல்துறையினர் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டு, அதிமுக கூட்டம் நடைபெற்ற தனியார் திருமண மண்டப வாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சிதம்பரம் நகர காவல்துறையினர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த நடந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை என்பதால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினரை சந்தித்து அவர்களது பிரச்சனைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: