11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: "சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது" - உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரும் விவகாரத்தில், சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த நிலையில், அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் நடந்து வந்தது.
இந்த நிலையில், தகுதிநீக்கம் செய்யும் விவகாரத்தில் 11 எம்எல்ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அட்டர்னி ஜெனரலின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், சபாநாயகர் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவார் என நம்புவதாகக் கூறியதோடு, சபாநாயகர் நடவடிக்கை எடுக்க கால வரம்பு எதையும் நிர்ணியிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
வழக்கின் பின்னணி
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்த பிறகு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால், அவரை பதவிவிலகச் சொன்ன ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இதனை எதிர்த்து, ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் பல எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அ.தி.மு.கவை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதை தொடர்ந்து 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இந்திரா பானர்ஜி, அப்துல் குட்டோஸ் அடங்கிய அமர்வு 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தகுதி நீக்க விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இருந்தபோதும், சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவு நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது என்று கூறிய நீதிபதிகள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.
இதனை எதிர்த்து சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இருந்தபோதும், இந்த வழக்கில் நீண்ட காலமாக விசாரணை ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக தலைமை நீதிபதியை சந்தித்த தி.மு.க. தரப்பு வழக்கறிஞர், வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டுமெனக் கோரினார். இதையடுத்து இந்த வழக்கு பிப்ரவரி மாத துவக்கத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பி.ஆர். கவை மற்றும் சூர்யகாந்துடன் சேர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே இந்த வழக்கை விசாரித்தார். விசாரணையின்போது, இந்த வழக்கில் முடிவெடுக்க மூன்று ஆண்டுகள் தாமதம் தேவையற்றது; தமிழக சபாநாயகர் ஏன் இவ்வளவு காலதாமதம் செய்திருக்கிறார், பேரவைத் தலைவர் எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார் என்றெல்லாம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பிறகு வழக்கு பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













