"11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3 ஆண்டுகளாக முடிவெடுக்காதது ஏன்?"

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அ.தி.மு.க. கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏக்கள் மீது மூன்று ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த நிலையில், அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பி.ஆர். கவை மற்றும் சூர்யகாந்துடன் சேர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே இந்த வழக்கை விசாரித்தார். அந்த விசாரணையின்போது, இந்த வழக்கில் முடிவெடுக்க மூன்று ஆண்டுகள் தாமதம் தேவையற்றது; தமிழக சபாநாயகர் ஏன் இவ்வளவு காலதாமதம் செய்திருக்கிறார், பேரவைத் தலைவர் எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார் என கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது தி.மு.கவின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான கபில் சிபல், சமீபத்தில் ரோஹிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டினார். அந்தத் தீர்ப்பில், இம்மாதிரியான தகுதி நீக்க விவகாரங்களை நியாயமான கால அளவிற்குள் சபாநாயகர் தீர்மானிக்க வேண்டுமென்றும், மூன்று மாத காலம் என்பதை இந்த கால அளவாக வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியிருப்பதை அவர் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம்

இந்த வழக்கில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். ரோஹின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு சமீபத்தில்தான் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆகவே, அதனை வைத்து தமிழக சபாநாயகரை கேள்வியெழுப்பக்கூடாது என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சட்டசபை செயலரின் பதிலைக் கேட்டு 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்த பிறகு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால், அவரை பதவிவிலகச் சொன்ன ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்தார்.

இலங்கை

தொடர்புடைய சில செய்திகள்:

இலங்கை

இதனை எதிர்த்து, ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 10 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அ.தி.மு.கவை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஓ.பன்னீர்செல்வம்

இதை தொடர்ந்து 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இந்திரா பானர்ஜி, அப்துல் குட்டோஸ் அடங்கிய அமர்வு 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தகுதி நீக்க விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இருந்தபோதும், சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவு நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது என்று கூறிய நீதிபதிகள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.

இதனை எதிர்த்து சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இருந்தபோதும், இந்த வழக்கில் நீண்ட காலமாக விசாரணை ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் தலைமை நீதிபதியை சந்தித்த தி.மு.க. தரப்பு வழக்கறிஞர், வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டுமெனக் கோரினார். இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: