சமையல் எரிவாயு: சிலிண்டர் விபத்து நடந்தால் ரூ.50 லட்சம் வரை இழப்பீடு பெறுவது எப்படி?

பட மூலாதாரம், NOAH SEELAM / getty images
- எழுதியவர், விக்னேஷ்.அ
- பதவி, பிபிசி தமிழ்
எல்.பி.ஜி சிலிண்டர் என்று அறியப்படும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களின் விலை நாடு முழுவதும் சுமார் 144 முதல் 149 ரூபாய் வரை அதிகரிக்கப்படுவதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பிப்ரவரி 12 அன்று அறிவித்துள்ளன.
மாதம்தோறும் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து மாற்றப்பட்டு வந்தாலும், ஆறு ஆண்டுகளில் இதுதான் மிகப்பெரிய விலை உயர்வு. கடைசியாக ஜனவரி 2014இல் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர்களின் விலை சுமார் 220 ரூபாய் அதிகரித்தது.
இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசு வழங்கும் மானியமும் சுமார் 150 ரூபாயில் இருந்து சுமார் 300 ரூபாய் அளவுக்கு உயர்த்துவதாக இந்திய அரசு தெரிவிக்கிறது.
அதாவது விலை உயர்வு காரணமாக வாடிக்கையாளர்கள் கூடுதலாக செலுத்தும் தொகையை அவர்கள் வங்கிக்கணக்கில் மானியமாக மத்திய அரசால் செலுத்தப்படும். எனினும், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்குக்கு 12 சிலிண்டர்கள் வரை மட்டுமே இந்திய அரசு மானியம் வழங்கும்.
12 சிலிண்டர்கள் எனும் வரம்பைக் கடந்தால் எண்ணெய் நிறுவனங்கள் அந்த மாதம் நிர்ணயித்துள்ள விலையை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும்.
எல்.பி.ஜி சிலிண்டர் விலை உயர்வு குறித்த செய்திகள் பரவலாகி வரும் சூழலில், அதன் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள்.
1. சிலிண்டரின் எடை எவ்வளவு?
காலி சிலிண்டரின் எடை எவ்வளவு என்பது அதன் மீதே அச்சிடப்பட்டிருக்கும். அத்துடன் உள்ளே இருக்கும் எரிவாயுவின் எடை 14.2 கிலோ என்ற அளவில் இருக்கும். உங்கள் வீட்டுக்கு சிலிண்டரை கொண்டு வந்து சேர்க்கும் ஊழியர் பாதுகாப்பை உறுதி செய்வதுபோல அதன் எடையையும் அளவிட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
சிலிண்டரின் மொத்த எடை காலி சிலிண்டரின் எடை மற்றும் 14.2 கிலோ என்பதன் கூட்டுத்தொகையாக இருக்க வேண்டும். இதில் பெரிய வேறுபாடு இருந்தால் நீங்கள் உங்கள் விநியோகஸ்தர் மீது, எண்ணெய் நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கலாம்.
2. விபத்து நடந்தால் யார் பொறுப்பு?
சிலிண்டர் விபத்து நடந்த சமயங்களில் வாடிக்கையாளரின் தவறே காரணம் என்று விநியோகஸ்தர்களும், விநியோகஸ்தர்களே காரணம் என்று நிறுவனங்களும் கூறும் நிகழ்வுகள் பலவும் நடந்துள்ளன.
ஆனால், சிலிண்டர் விநியோகிக்கும் உள்ளூர் முகமை மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகிய இருவருமே விபத்துகளுக்கு பொறுப்பு என்கிறது இந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் 2008இல் வழங்கிய தீர்ப்பு. (Indian Oil Corporation Limited vs Rakesh Kumar Prajapati)
மத்தியப் பிரதேசத்தைச் ராஜேஷ் குமார் எனும் ஆட்டோ ஓட்டுநர் சிலிண்டர் வெடித்த விபத்தில் அவரது மனைவியை இழந்தார். 2004 நவம்பரில் சிலிண்டரில் பழுது உள்ளதால் கசிவு ஏற்படுவதாக அவர் புகார் அளித்தார். அடுத்த மாதம் ஏற்பட்ட விபத்தில் அவரது மனைவி இறந்தார்.

பட மூலாதாரம், PRAKASH SINGH / getty images
ராகேஷ் குமார்தான் விபத்துக்கு காரணம் என்று உள்ளூர் விநியோகஸ்தரும், உள்ளூர் விநியோகஸ்தர்தான் விபத்துக்கு காரணம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் கூற. அவர்கள் இருவருமே பொறுப்பு என்று தீர்ப்பு வந்தது.
3. காப்பீட்டுத் தொகை எவ்வளவு?
ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் தனித்தனியாக காப்பீடு செய்யவில்லை என்றாலும், இந்தியாவில் உள்ள எரிவாயு தயாரிக்கும் நிறுவனங்கள் பொது பொறுப்புடைமை காப்பீடு செய்யவேண்டும். (Public Liability insurance)
சிலிண்டரில் எரிபொருள் நிரப்பும் இடம், சேமிப்புக் கிடங்கு, போக்குவரத்தின் போது, வாடிக்கையாளர் வீடு என எங்கு சிலிண்டர் விபத்து நிகழ்ந்தாலும் அதற்கு மேற்கண்ட காப்பீடு பொருந்தும். சிலிண்டரை கையாளும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு பெற இந்த வகை காப்பீடு வழிவகை செய்யும்.
தற்போதைய நிலவரத்தின்படி, ஒரு சிலிண்டர் விபத்துக்கு அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும். உயிரிழந்தால் ஒரு நபருக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெறலாம்.

பட மூலாதாரம், Hindustan Times / getty images
காயமடைந்தவர்களுக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் வரையிலும், சொத்துகள் சேதமடைந்தால் சுமார் 2 லட்சம் ரூபாய் வரையிலும் பெற முடியும்.
எரிவாயு நிறுவனங்கள் எடுக்கும் காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஏற்ப இந்த தொகை மாறும்.
4. இழப்பீடு பெறுவது எப்படி?
விபத்து நடந்தவுடன் வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் விநியோகஸ்தரிடம் எழுத்துபூர்வமாக தெரியப்படுத்த வேண்டும். எரிவாயு நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியோருக்கு தகவல் தெரிவிப்பது உள்ளூர் விநியோகஸ்தரின் கடமை.
இழப்பீட்டைப் பெற மருத்துவச் செலவுகள் செய்தற்கான ரசீது, மருத்துவ அறிக்கை உள்ளிட்டவற்றையும், இறப்பு நேர்ந்திருந்தால் இறப்புச் சான்றிதழையும் எரிவாயு இணைப்பு வழங்கியுள்ள நிறுவனத்திடம் வழங்க வேண்டும்.
சொத்துகளுக்கு இழப்பீடு ஏற்பட்டால், எரிவாயு நிறுவனம் நியமிக்கும் மதிப்பீட்டாளர் மூலமாக இழப்பு எவ்வளவு என்பது கணக்கிடப்படும்.
5. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
சிலிண்டர் வாங்கும்போது அது நன்றாக சீலிடப்பட்டுள்ளதா என்று சோதிப்பதைப் போலவே உரிய கால இடைவெளிக்கு ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ள எரிவாயு இணைப்பு நல்ல நிலையில் உள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் தங்கள் உள்ளூர் விநியோகஸ்தர்கள் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சிலிண்டர் மற்றும் அடுப்பை இணைக்கும் குழாய் போன்ற உபகரணங்கள் ISI தர உறுதிச் சான்று பெற்றவையாக இருக்க வேண்டும்.

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE / getty images
தரம் குறைவான உபகரணங்கள் மலிவு விலையில் கிடைப்பதால் அவற்றைப் பயன்படுத்துவது விபத்துக்கு வழிவகுக்கும். அவற்றால் மரணமே நிகழ்ந்திருந்தாலும் இழப்பீடு வழங்க முடியாது என்று கூற நிறுவனங்களுக்கு உரிமையுண்டு என்பதால் விபத்து நடந்தபின் இழப்பீடு பெற அல்லல்படுவதைவிட விபத்தை தவிர்ப்பதே நல்லது.
6. சிலிண்டர் கசிவு - முதல் தகவல்யாருக்கு?
கசிவை கண்டறிந்தபின் முதல் வேலையாக வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது கதவு ஜன்னல்களை திறந்து வைப்பதும், மின் உபகரணங்களுக்கான 'ஸ்விட்ச்' எதையும் ஆன் செய்யாமல் இருப்பதும் பலருக்கும் தெரிந்ததே.
அதே அளவு முக்கியம் உடனடியாக உள்ளூர் விநியோகஸ்தருக்கும் தகவல் கொடுப்பது. அவர்கள் ஊழியர்கள் வந்து பழுது என்ன என்பதை உடனடியாக கண்டறிந்து நிவர்த்தி செய்ய இது வழிவகுக்கும்.
சமயலறையில் எளிதில் தீ பற்றும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
மேலும், சமைக்கும்போது பருத்தி நூலிழைகளால் ஆன ஆடைகளையும் அணிவது முக்கியம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













