தமிழகத்துக்கு 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் சாதகமா, இழப்பா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
15வது நிதிக் குழுவின் இடைக்கால பரிந்துரை அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கும் நிலையில், மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்குக் கிடைக்கும் வரிப் பகிர்வு குறையும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இடைக்கால அறிக்கை தமிழகத்திற்கு சாதகமானதா?
இந்தியாவின் வரி வசூலிக்கும் கட்டமைப்பில், பெருமளவிலான வரியை மத்திய அரசு பெறுகிறது; ஆனால், பெருமளவிலான செலவுப் பொறுப்புகளை மாநில அரசுகள்தான் செய்ய வேண்டும். ஆகவே, மொத்த வரி வருவாயை எந்த அளவுக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்வது என்பதை முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது.
மேலும் மாநிலங்களுக்கென ஒதுக்கப்படும் நிதியில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதியை ஒதுக்க வேண்டும் என்பதையும் கணக்கிட வேண்டும். இதைச் செய்வதற்காகத்தான் நிதிக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து இருக்கிறது.
14வது நிதி குழுவின் காலம் 2020 ஆண்டோடு முடிவடையும் நிலையில், 15வது நிதி குழு என்.கே. சிங்கைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதி குழு 2020-21ஆம் ஆண்டுக்கான இடைக்கால பரிந்துரைகளை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தது. இறுதி அறிக்கை, அதாவது 2021-26ஆம் ஆண்டுக்கான பரிந்துரைகள் இந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கு செய்யப்பட்டிருக்கும் பரிந்துரைகளில், முக்கியமான பரிந்துரையாக மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 2015-20 காலகட்டத்தில் மாநிலங்களுக்கு 42 சதவீத வரிப் பகிர்வு இருந்த நிலையில், இந்த ஆண்டிற்கான வரிப் பகிர்வு 41 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மொத்த வரியில் ஒரு சதவீதம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசங்களான ஜம்மு - காஷ்மீர், லடாக் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
மேலும் சில மாற்றங்களும் 15வது நிதி குழுவில் செய்யப்பட்டுள்ளன. 14வது நிதி குழுவில், மக்கள் தொகையை கணக்கில் எடுக்கும்போது 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகைக்கு 17.5 புள்ளிகளும் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு 10 புள்ளிகளும் தரப்பட்டன. ஆனால், 15வது நிதி குழுவில் 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை விவரங்கள் கணக்கிலேயே கொள்ளப்படவில்லை. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டு, அதற்கு 15 புள்ளிகள் தரப்படுகின்றன.
இதனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்தது. இருந்தபோதும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் Demographic Performance என்ற அளவீடு 15வது நிதி குழுவில் பயன்படுத்தப்படுகிறது.
நிதி குழுவைப் பொறுத்தவரை, ஏழ்மையான நிலையில் உள்ள மாநிலங்கள் தங்கள் சமூக நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக போதுமான நிதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதன் காரணமாகவே, வளமான மாநிலங்களிடமிருந்து பின்தங்கிய மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி பிரித்துக்கொடுக்கப்படுகிறது.
மக்கள் தொகைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதும் 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகைக்குப் பதிலாக 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகையை பயன்படுத்துவது தென் மாநிலங்களுக்கு சிக்கலானதாகவே இருக்கும்.
1971ல் பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கூட்டு மக்கள் தொகை 21.21 கோடியாக இருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கூட்டு மக்கள் தொகை 13.53 கோடியாக இருந்தது.
40 ஆண்டுகள் கழிந்த நிலையில், பிகார், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், அவற்றிலிருந்து பிரிந்த மாநிலங்களின் மக்கள் தொகை 51.37 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரம் தென் மாநிலங்களின் மக்கள் தொகை 25.12 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
1971ல் இந்த நான்கு வட மாநிலங்களின் மக்கள் தொகையானது, இந்தியாவின் மக்கள் தொகையில் 38.7 சதவீதமாக இருந்தது. ஆனால், 2011ல் இது 42.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், தென் மாநிலங்களின் மக்கள் தொகை, இந்தியாவின் மக்கள் தொகையில் 24.7 சதவீதத்தில் இருந்து 20.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் நேரடி வரி வருவாயில் தென் மாநிலங்களின் பங்கு 23.5 சதவீதம். ஆனால், வட மாநிலங்களின் பங்கு 9.7 சதவீதம் மட்டுமே.
ஆனால், "14வது நிதி கமிஷனோடு ஒப்பிட்டால், 15வது நிதிக் குழு ஒதுக்கீட்டில் பெரிதாக மாற்றம் இல்லை. 42 சதவீதத்திற்குப் பதிலாக 41 சதவீதமாக ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். தவிர, தமிழகத்திற்கு சாதகமான சில மாற்றங்கள் இந்த நிதிக் குழு அறிக்கையில் இருக்கின்றன" என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானம்.
நிதி குழுவானது, ஒரு மாநிலத்தின் தேவையின் அடிப்படையில் நிதியைப் பகிர்கிறது. இதற்கு மாநிலத்தின் நிலப்பரப்பு, அதன் வருமானம், தேவை ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகின்றன. இதில் வருமானமும் தேவையும் income distance என்ற முறையில் அளக்கப்படுகின்றன. அதாவது அதிக வரி வசூல் செய்யும் மாநிலத்தோடு ஒப்பிட்டால், ஒரு மாநிலம் எந்த தரவரிசையில் இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு, நிதி பகிரப்படும். எல்லாம் மாநிலங்களுக்கும் வளங்களை சமமாகப் பிரித்தளிக்க ஏதுவாக இந்த முறை பின்பற்றப்படுகிறது.
ஆனால், இந்த முறையில் கூடுதல் வரி வசூல் செய்யும் மாநிலங்கள், நிதியை இழக்க வேண்டியிருக்கும். இந்த தரவரிசையில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
"இந்த income distance என்ற பிரிவுக்கு 14வது நிதிக் குழுவில் 50 புள்ளிகள் தரப்பட்டன. ஆனால், இந்த 15வது நிதிக் குழுவில் அது 45 புள்ளிகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்பது வரவேற்கத்தக்கது.
அதேபோல, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு 12.5 வரை புள்ளிகள் தரப்படுகின்றன. இதுவும் 14வது நிதிக் குழுவில் இல்லை. மேலும் மாநிலங்களின் சொந்த வருவாய் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு 2.5 புள்ளிகள் தரப்படுகின்றன. இவையெல்லாம் தென் மாநிலங்களுக்கு சாதகமான அம்சங்கள். இருந்தபோதும் தென் மாநிலங்களில் கர்நாடகா, கேரளா ஆகியவை நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்" என்கிறார் ஜோதி சிவஞானம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த நிதி கமிஷனில் 4.023 சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 4.189 சதவீதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது 0.166 சதவீதம் கூடுதல் நிதி தமிழகத்திற்குக் கிடைக்கும்.
இது பெரிய அளவு அதிகரிப்பு இல்லையென்றாலும்கூட, குறிப்பிடத்தக்க மாற்றம் என்கிறார் ஜோதி சிவஞானம். காரணம், 7வது நிதி குழு காலத்தில் சுமார் 7 சதவீதம் அளவுக்கு நிதியைப் பெற்றுவந்த தமிழகம், தொடர்ச்சியாக இழப்பை சந்தித்து தற்போது நான்கு சதவீதத்தை நெருங்கியிருக்கிறது. 15வது நிதி கமிஷனில், இந்த சதவீதம் மேலும் குறையாமல், ஓரளவுக்கு மேலே உயர்ந்திருக்கிறது. ஆனால், கர்நாடகா 1.067 சதவீதமும் கேரளா 0.557 சதவீதமும் இழப்பைச் சந்திக்கின்றன என்கிறார் அவர்.
ஆனால், புள்ளிவிவர நிபுணரான ஆர்.எஸ். நீலகண்டன் 15வது நிதி குழு தமிழகத்திற்கு சாதகமானது என்பதை ஏற்க மறுக்கிறார். "ஏனென்றால் 14வது நிதி குழு ஒதுக்கீட்டிலேயே தமிழகம் பெரும் இழப்பைச் சந்தித்துவிட்டது. இப்போது ஒப்பிட வேண்டுமானால், 13வது நிதி குழு பரிந்துரையையும் 15வது நிதி குழு பரிந்துரையையும்தான் ஒப்பிட வேண்டும். 13வது நிதி குழு பரிந்துரையோடு ஒப்பிட்டால், தமிழகம் 16 சதவீதம் இழப்பைச் சந்தித்திருக்கிறது" என்கிறார் அவர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
மேலும், நிதிப் பகிர்வுக்கு அடிப்படையாக வைத்திருக்கும் நிலப்பரப்பு, காடுகளின் பரப்பு ஆகிய இரண்டைத் தவிர, மற்ற அளவீடுகளான income distance, மக்கள் தொகை கணக்கீடு, Demographic Performance ஆகியவை மக்கள் தொகையோடு சம்பந்தப்பட்டவை. அவை, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கே சாதகமாக இருக்கும் என்கிறார் நீலகண்டன்.
குறிப்பாக income distance என்ற பிரிவை எடுத்துக்கொண்டால், அதில் உத்தரப்பிரதேசத்திற்கு 27.11 சதவீதமும் பிஹாருக்கு 16.32 சதவீதமும் தமிழகத்திற்கு வெறும் 2.07 சதவீதமும் கிடைக்கும். இப்படி வருவாயைப் பகிரும் அடிப்படையே தவறானது என்கிறார் நீலகண்டன். இதற்கான கணக்கீடுகளின்படி, மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் ஏழ்மையான மாநிலமாக இருந்தால் கூடுதல் ஒதுக்கீடும் மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும் வளமான மாநிலமாக இருந்தால் குறைவான ஒதுக்கீடும் கிடைக்கும் என்கிறார் நீலகண்டன்.
இது போதாதென மக்கள் தொகையையும் அடிப்படையாகக் கொள்வதால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இன்னும் இழப்பைச் சந்திக்கின்றன என்கிறார் அவர். தவிர, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காக வழங்கப்படும் பிரிவும் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்திருப்பதால், அதுவும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு எதிராக இருக்கும் என்கிறார் அவர்.
ஆனால், வேறு சில எச்சரிக்கைகள் இந்த நிதி குழு அறிக்கையில் இருக்கின்றன.

பட மூலாதாரம், K.JOTHI SIVAGNANAM
15வது நிதிக் குழுவின் அறிக்கையே முழுமையாக தயாராகிவிட்ட நிலையில், ஏன் இடைக்கால அறிக்கையை, அதாவது ஒரு வருடத்திற்கான அறிக்கையை மட்டும் அளித்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது என்கிறார் ஜோதி சிவஞானம்.
மேலும், "மொத்த வரி வருவாயில் 42 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வசூலிக்கப்படும் செஸ், சர்சார்ஜ் ஆகியவற்றை வரி வருவாயிலிருந்து கழித்துவிட்டு மத்திய அரசு நிதியைப் பகிர்கிறது. இந்த செஸ், சர்சார்ஜ் ஆகியவை சுமார் 12 சதவீதம் அளவுக்கு இருக்கும். இவற்றைத் தவிர்த்துவிட்டு வரியைப் பகிர்வதால், மொத்த வரி வருவாயில் 33 சதவீதம்தான் மாநிலங்களுக்கு பகிரப்படுகிறது. கடந்த பட்ஜெட்டின் திருத்தப்பட்ட வடிவத்தில் பார்த்தால், அது 30 சதவீதமாகக் குறைந்திருக்கிறது" என்று சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம்.
இதற்கு நடுவில் உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்பிற்கென சுமார் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் நிதியை உருவாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியை ஒவ்வொரு வருடமும் மொத்த வரி வருவாயிலிருந்து ஒதுக்கீடு செய்துவிட்டு, அதற்குப் பிறகு மாநிலங்களுக்கு நிதியை பகிர வேண்டுமென ஒரு ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.
ஏற்கனவே, சர்சார்ஜ், செஸ் ஆகியவை மொத்த வரி வருவாயிலிருந்து எடுக்கப்பட்டுவிடுகின்றன. இந்த நிலையில், பாதுகாப்பிற்கான நிதியையும் எடுத்துவிட்டால், மாநிலங்களுக்குக் கிடைக்கும் பங்கு மேலும் குறையும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













