கோவையில் போக்சோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது - நடந்தது என்ன?

சித்தரிப்பு படம்

பட மூலாதாரம், Getty Images

கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

News image

கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்துள்ள காட்டம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவிகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்களை முறையற்ற வகையில் தொட்டதாக கோவை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் நெகமம் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின்கீழ் தலைமை ஆசிரியரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தங்களது பெற்றோர்களிடம் பள்ளி தலைமையாசிரியர் தகாத முறையில் நடந்துகொள்வதாக சென்ற வாரம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி காட்டம்பட்டி பேருந்துநிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புகார் அளித்தால் மட்டுமே தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனக்கூறி போலீசார் போராட்டத்தை கலைத்தனர்.

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் சிலரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி தலைமை ஆசிரியரின் மீது தவறில்லை என காவல்துறையினர் எழுதி வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் பெற்றோரிடம் தலைமை ஆசிரியர் மன்னிப்பு கேட்கும் செல்போன் உரையாடல் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தலைமை ஆசிரியர் மீது புகார் அளிக்க பெற்றோர்கள் முன்வரவில்லை.

இந்நிலையில் ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்பினர் கோவை மாவட்ட காவல் கண்கானிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்ட தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வித் துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பள்ளி மாணவிகளிடம் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது, தலைமை ஆசிரியர் பலமுறை பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நேற்று மாலை நெகமம் காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் இன்று (வியாழக்கிழமை) காலை தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர், 10 வருடங்களாக காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. 39 மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: