டெல்லி தேர்தல் முடிவுகள்: பாஜக தோல்வி - தேசியக் கட்சியாக உருவெடுக்கிறதா ஆம் ஆத்மி?

பட மூலாதாரம், Getty Images
டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், அந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
கே. ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன?
ப. ஆம் ஆத்மி கட்சி கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. பெரும்பாலான 'வாக்களிப்பிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்' ஆம் ஆத்மி கட்சி சுமார் 50 இடங்களைப் பெறுமென்றே கணித்தன. இந்தியா டுடே - ஆக்சிஸ் கருத்துக் கணிப்பில் மட்டும் 63 இடங்களை வெல்வார்கள் எனக் கணித்திருந்தனர். அவர்கள் கடந்த காலங்களைப் போலவே இந்த முறையும் சரியாகக் கணித்திருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரம் என்னவாக இருந்தது, பா.ஜ.கவின் பிரசாரம் என்னவாக இருந்தது என்று பார்க்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி மத ரீதியான பிரசாரத்தை முன்னிறுத்தாமல், அதற்குப் பதிலளிக்காமல் நாங்கள் என்ன செய்தோம் என்று பிரசாரம் செய்தார்கள்.
இது ஒரு விசித்திரமான அணுகுமுறையாக இருந்தது. யாருடன் கூட்டணி வைத்தால் எந்த ஜாதியினரின் ஓட்டுகள் கிடைக்கும் என்று விவாதிக்காமல், எத்தனை பள்ளிகளைக் கட்டியிருக்கிறோம், மொஹல்லா மருத்துவமனைகளைத் துவங்கியிருக்கிறோம், பெண்களுக்கு இலவசமாக பேருந்து வசதியளிக்கிறோம் என்றே ஆம் ஆத்மியின் பிரசாரம் இருந்தது.
இம்மாதிரியான ஒரு பிரசாரம் இந்தியாவின் பிற பகுதிகளில் எடுபடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 2019ல் தன்னுடைய வளர்ச்சிக் கொள்கையை முன்வைத்து வாக்குக் கேட்டார். அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. வளர்ச்சிக்குத்தான் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் கேரளாவில் இடதுசாரிக் கூட்டணி அதிகாரத்திலிருந்தே இறங்கியிருக்கக்கூடாது.
ஏனென்றால், அவர்கள்தான் முதன் முதலில் நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தினார்கள். ஆகவே, 50களுக்குப் பிறகு இடதுசாரிகள் ஆட்சியிலிருந்து இறங்கியிருக்கவே கூடாது. தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம். 2001ல் தி.மு.க. தான் ஆட்சியில் செய்த வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி வாக்குக் கேட்டது. வெற்றி கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஆகவே, இந்தியாவின் பிற பகுதிகளில் நடக்காத ஒரு சம்பவம் டெல்லியில் நடந்திருக்கிறது.டெல்லியில் உள்ள மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள் எனத் தெரிகிறது. ஏனென்றால் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றுள்ளது.
கே. இந்தத் தேர்தலில் நடந்த பிரசாரங்கள் இந்தியா முழுவதும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. இந்தியாவின் எதிர்காலத் தேர்தல்களில் இது எதிரொலிக்குமா?
ப. இப்படித்தான் இனி பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுமென்றால், இந்தியாவில் இனி தேர்தலே நடக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. அந்த அளவுக்கு வெறுப்பை முன்னிறுத்தி பிரசாரம் செய்தார்கள். 12 முன்னாள் முதலமைச்சர்கள், 300 எம்பிக்கள் டெல்லியில் முகாமிட்டு வெறுப்புப் பிரசாரத்தில் மட்டும்தான் ஈடுபட்டார்கள்.
உத்தரப்பிரதேச முதல்வர் பிரசாரத்தில் ஈடுபடும்போது, 'சாஹின் பாக் போராட்டக்காரர்கள் டெல்லி போலீஸிற்கு தலைவணங்காவிட்டால் குண்டுகளுக்கு தலைசாய்க்க வேண்டும்' என்ற அர்த்தத்தில் பேசுகிறார். ஒரு முதலமைச்சர் 'கோலி மாரோ' என்று பேசுகிறார் என்றால் என்ன சொல்வது?
இவர்களை நம்பி இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியோடு சென்று சாஹின் பாகில் பிடிக்கப்படுகிறார்கள். இன்னொரு பா.ஜ.க. எம்பி, 'சாஹின்பாக் போராட்டக்காரர்கள் உங்கள் வீடு புகுந்து பெண்களை பாலியல் வல்லுறவு செய்யப்போகிறார்கள்' என்று சொல்கிறார். இதற்கெல்லாம் ஒரு கண்டனக் குரலும் பா.ஜ.கவிடமிருந்து வரவில்லை. அந்த அளவுக்கு வெறுப்பை மட்டுமே முன்னிறுத்தி பிரசாரம் செய்தார்கள். இந்து - முஸ்லிம், இந்தியா - பாகிஸ்தான் என்றே பேசினார்கள்.
இன்றைக்கு என்ன ஆனது? இப்போது பாகிஸ்தான் வெற்றிபெற்றதாகச் சொல்லப்போகிறார்களா? அரவிந்த் கேஜ்ரிவாலை ஒரு பயங்கரவாதி என்று கூறினார்கள். இதைவிட மோசமாக ஒரு பிரசாரத்தை செய்துவிட முடியாது. 1952லிருந்து தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருக்கிறது. 1991லிருந்து ஒரு பத்திரிகையாளராக தேர்தல்களைக் கவனித்துவருகிறேன். இந்த அளவுக்கு இறங்கி மதவெறியைத் தூண்டிவிடுகிற பிரசாரத்தை நான் பார்த்ததில்லை.
இதுதான் தேர்தல் பிரசாரங்களுக்கு ஒரு அளவுகோல் என்றால் இந்தியாவுக்கு ஜனநாயகமே இனி தேவையில்லையென நான் வாதாடுவேன்.

பட மூலாதாரம், Getty Images
கே. கடந்த முறையோடு ஒப்பிட்டால் கூடுதல் இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. அதை வெறுப்புப் பிரசாரத்திற்கு கிடைத்த வெற்றியாக சொல்ல முடியுமா? இந்தியா முழுவதும் அந்த பாணி எடுபடுமா?
ப. பா.ஜ.க. கடந்த முறை மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்றினார்கள். இந்த முறை கூடுதல் இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். ஆகவே கூடுதல் வெற்றி என அவர்கள் நினைக்கலாம். ஆனால், மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளனர். இம்மாதிரி மும்முனைப் போட்டியில் காங்கிரசிற்கும் சிலர் வாக்களிக்க முடிவெடுத்திருக்கலாம். அப்படியிருந்திருந்தால் வாக்குகள் சிதறியிருக்கும். ஆனால், மக்கள் இந்த முறை தெளிவாக, ஆம் ஆத்மியே மீண்டும் வெல்லும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே அக்கட்சிக்கே முழுமையாக வாக்களிக்கலாம் என முடிவுசெய்திருக்கிறார்கள்.
ஷாஹின்பாக்கை உள்ளடக்கிய ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஏறத்தாழ ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மக்களை பிளவுபடுத்தி வாக்குகளைப் பெற பா.ஜ.க. நினைத்தது. ஆனால், அது நினைத்த அளவுக்கு பலனளிக்கவில்லை.
அமித் ஷா தாங்கள் 45 இடங்களில் வெல்வோம் என்றார். பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக கருதப்பட்ட மனோஜ் திவாரி, தாங்கள் 48 இடங்களில் வெல்வோம் என்றார். ஆகவே, பா.ஜ.கவின் வெறுப்புப் பிரசாரத்திற்கு ஓரளவுக்கு பலன் இருந்திருக்கிறது. ஆனால், இவர்கள் நினைத்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை.
கே. ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. ஆளும் கட்சி மீது சுத்தமாக அதிருப்தி இல்லையெனச் சொல்லலாமா?
ப. 2013ல் தேர்தல் நடந்தபோது பா.ஜ.க. கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது. தாங்கள், ஊழலில்லாத, திறமையான அரசைத் தரப்போவதாக அவர்கள் அப்போது சொன்னார்கள். அந்த முறை தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டது. 2015ல் மீண்டும் தேர்தல் வந்தபோது, தான் ஊழலில்லாத அரசைத் தருவேன் என்றார் கேஜ்ரிவால். அவருக்கு ஆதரவாக யோகேந்திர யாதவ் போன்ற பெருந்தலைகள் எல்லாம் வாக்கு சேகரித்தார்கள்.
அப்போது ஷீலா தீக்சித்தின் செல்வாக்கு குறைய ஆரம்பித்திருந்த நேரம் அது. மெல்ல மெல்ல ஆம் ஆத்மியின் செல்வாக்கு உயர ஆரம்பித்திருந்தது. ஆம் ஆத்மி இளைஞர்களை கவர ஆரம்பித்திருந்தது. அரவிந்த் கேஜ்ரிவால், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பிலிருந்து உருவானவர். 2013, 2015 தேர்தல்களின்போது ஊழல் எதிர்ப்பாளர் என்ற இமேஜ் இருந்தது. 2019 தேர்தலில்தான் வளர்ச்சியைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். 2013 - 2015 காலகட்டத்தில் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற்றது மட்டும்தான் அவரது சாதனையாக இருந்தது.
இந்த முறை வளர்ச்சிப் பணிகளை மட்டுமே வைத்து வாக்குக் கேட்டார்கள். வேறெதையும் பற்றிப் பேசவில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு பிரச்சனை நடந்தது. கேஜ்ரிவாலின் வீடு ஜேஎன்யுவிலிருந்து 20 நிமிட தூரத்தில்தான் இருந்தது. இருந்தபோதும் அவர் அங்கு செல்லவில்லை. சாஹின் பாகில் இவ்வளவு பிரச்சனை நடந்தபோதும் அவர் அங்கு செல்லவில்லை. மக்களின் போராட்டங்களில் கேஜ்ரிவால் பங்கேற்கிறாரா என்று பார்த்தால், எங்கு தேவையோ அங்கு மட்டும் இருந்தார்.
ஆனால், ஒரு தேர்தல் வியூகமாக அரவிந்த் கேஜ்ரிவாலின் நடவடிக்கையை ஒப்புக்கொள்ளலாமே தவிர, ஒரு கட்சியின் தலைவராக இதனை ஏற்க முடியாது. இந்தியா டுடே கான்க்ளேவில் பேசுகிறார். ஹிந்துஸ்தான் டைம்சின் உச்சி மாநாட்டில் பேசுகிறார். இம்மாதிரியான ஏசி அறைகளில் தாராளவாதிகள் கூடியுள்ள இடங்களில் மட்டும் சிஏஏ பற்றிப் பேசினார். அதோடு அதை விட்டுவிட்டார்.
ஜேஎன்யுவிலோ, ஜாமியாவிலோ தாக்குதல் நடந்தபோது இவர் அங்கே செல்லவில்லை. இம்மாதிரியான இடங்களுக்கு அவர் வருவார்; அதை வைத்துப் பிரசாரம் செய்யலாம் என பா.ஜ.க. கருதியது. ஆனால், ஆம் ஆத்மியின் தலைமையிலிருந்து கீழே வரை, யாரும் இம்மாதிரி இடங்களுக்குச் செல்லவில்லை. ஆனால், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தார்கள். சிறுபான்மையினரிடம் சென்று நாங்கள்தான் உங்களைக் காக்க முடியுமென சிறுபான்மை மக்களிடம் கூறியிருக்கிறார்கள். அதன் விளைவாகத்தான் இவ்வளவு இடங்கள் கிடைத்தாக நான் நினைக்கிறேன்.
கே. ஜாமியா, ஷாஹின் பாக் இடங்களைத் தவிர்த்தது ஆம் ஆத்மி என்கிறீர்கள்; ஆகவே, பா.ஜ.கவின் மென் வடிவமாக இக்கட்சியை பார்க்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
ப. இல்லை. அப்படி ஒரு மென் இந்துத்துவாவை அவர்கள் கொண்டுவரவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அந்த மென் இந்துத்துவாவை ராகுல் காந்திதான் செய்தார். ஆம் ஆத்மியினர் பெரிதாக கோவில்களுக்குச் செல்லவில்லை. அனுமார் பக்தரான கேஜ்ரிவால் கடைசி நாள் மட்டும் கோவிலுக்குச் சென்றார். அதைத் தவிர, பெரிதாக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவில்லை.
ஆனால், அவர்களை பா.ஜ.கவின் மென் வடிவமா என்று கேட்டால் இப்போது பதில் சொல்ல முடியாது. ஊழல், வளர்ச்சி தவிர வேறு எதைப் பற்றியும் அவர்களுக்கு என்ன கொள்கையெனத் தெரியவில்லை. தேர்தலை எப்படி எதிர்கொண்டு வெல்ல வேண்டுமோ, அப்படி வென்றிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
கே. நாடாளுமன்றத் தேர்தலில்கூட குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், ஏன் இந்த முறை இவ்வளவு மோசமாகத் தோற்றிருக்கிறது. ஆம் ஆத்மி வெற்றிபெறட்டுமென விட்டுவிட்டார்களா?
ப. ஆம் ஆத்மி வெற்றிபெற்றுவிடட்டும் என்று விட்டுத்தரவில்லை. காங்கிரசிற்குள் இருந்த குழப்பமே இந்தத் தோல்விக்குக் காரணம். காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கு உடல் நலம் சரியில்லை. அடுத்த இடத்தில் இருப்பது காங்கிரஸ் காரிய கமிட்டி. ஆனால், அவர்கள் வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார்கள். ப. சிதம்பரம், ஆண்டனி, கெலாட், கமல்நாத் என எல்லோருமே அப்படித்தான் இருக்கிறார்கள்.
ஷீலா தீக்ஷித்தின் மறைவு அவர்களை வெகுவாக பலவீனப்படுத்தியிருக்கிறது. காங்கிரசின் சார்பில் முன்னிறுத்தப்பட்ட அஜய் மாக்கன், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர் போன்ற இடங்களில் போய் மதிய உணவு சாப்பிடுவது, இரவு உணவைச் சாப்பிடுவதால் மட்டும் வாக்குகள் கிடைக்காது என்பதை உணரவில்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் எத்தனை நாள் பிரசாரம் செய்தார்கள்?

பட மூலாதாரம், Getty Images
மாறாக, பா.ஜ.கவில் அமித் ஷா முழு மூச்சாக வேலை பார்த்தார். ஒவ்வொரு தெருவுக்கும் சென்றார். துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். 12 இந்நாள், முன்னாள் முதல்வர்கள் துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்கிறார்கள். மக்களிடம் பேசினார்கள். 300க்கும் மேற்பட்ட எம்பிக்கள் வந்து பேசினார்கள். காங்கிரஸ் இதில் எதையுமே செய்யவில்லை. இதுதான் மிகப் பெரிய பிரச்சனை. காங்கிரசின் மெத்தனப் போக்கினால், அக்கட்சி தோல்வியடைந்திருக்கிறது.
கே. ஆம் ஆத்மிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, அக்கட்சியை ஒரு தேசியக் கட்சியாக உருவெடுக்க வைக்குமா?
ப. என்னைப் பொறுத்தவரை பிராந்தியக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேராவிட்டால், 2024ஆம் ஆண்டு தேர்தலில் மட்டுமல்ல 2029 தேர்தலிலும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பில்லை. காங்கிரசை நம்பியிருந்தால் நிச்சயம் வாய்ப்பில்லை. ஆம் ஆத்மியையோ, திருணாமூல் காங்கிரசையோ, தேசியவாத காங்கிரசையோ, தி.மு.கவையோ மையமாகக் கொண்டு தேர்தலை சந்தித்தால்தான் இப்போது இருக்கும் பா.ஜ.கவை எதிர்கொள்ள முடியும். இதைவிட்டுவிட்டு, 2019ல் செய்ததைப்போல, யார் பிரதமராவது என சண்டை போட்டுக்கொண்டிருந்தால் நிச்சயம் நரேந்திர மோதியை எதிர்கொள்ள முடியாது.
நரேந்திர மோதி களத்தில் உள்ள தேர்தல் என்பது மிக மிக வித்தியாசமான ஒரு தேர்தல். அவரைத் தோற்கடிக்கும் அளவுக்கான ஒரு அரசியல் தலைவர் இன்றைக்கும் இந்தியாவில் வளரவில்லை என்பதுதான் யதார்த்தம்.
கே. இந்தத் தேர்தல் முடிவுகள் மூன்று கட்சிகளுக்கும் என்ன செய்தியைச் சொல்கிறது?
ப. கடந்த முறை மூன்று இடங்களில் தோற்ற ஆம் ஆத்மி, இந்த முறை கூடுதல் இடங்களில் தோல்வியைடந்திருக்கிறது. ஆகவே அந்த இடங்களில் ஏன் தோற்றது என ஆராய வேண்டும். இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறதே என்று விட்டுவிடக் கூடாது. பா.ஜ.கவைப் பொறுத்தவரை அவர்கள் இடங்கள் அதிகரித்துள்ளன. ஆகவே தங்கள் பாணிக்கு வெற்றி கிடைத்திருப்பதாக அவர்கள் நினைப்பார்கள். ஆனால், காங்கிரசிற்கு ஒரு பாடமும் கிடையாது. அவர்கள் எந்தத் தேர்தல் தோல்வியிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்வதில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













