அரவிந்த் கேஜ்ரிவால்: டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் வெற்றியை எப்படி புரிந்துகொள்வது?

பட மூலாதாரம், NurPhoto/Getty Images
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்திய செய்தியாளர்
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறது. அதிலும் கணிசமான தொகுதிகளை வென்று. ஆனால், இந்த வெற்றியை பிரதமர் நரேந்திர மோதியின் தோல்வியாக பார்க்க முடியாது.
அதற்கு காரணம் இதுதான்.
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான வாக்குகளாக இதனை பார்ப்பதைவிட, இதனை மக்கள் நல அரசுக்கு அளித்த வாக்குகளாகதான் பார்க்க வேண்டும். ஆம் ஆத்மி டெல்லியை முழுமையாக புனரமைத்து இருக்கிறது. பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குறைந்த விலையில் குடிநீர் மற்றும் மின்சாரத்தை வழங்கி இருக்கிறது.
மக்கள் நல வாக்குறுதிகள்

பட மூலாதாரம், NurPhoto/Getty Images
பிரசாரத்தின் தொடக்க காலத்தில், அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசை பா.ஜ.க குற்றஞ்சாட்டியது. ஆனால், பா.ஜ.க.அவர்கள் ஆட்சியில் இருந்த போது வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது, அவர்கள் ஆம் ஆத்மியை குற்றஞ்சாட்டியதை யாரும் ரசிக்கவில்லை.
அடுத்து அவர்கள் காஷ்மீர் பிரச்சனை, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் ராமர் கோயில் என இந்து முஸ்லிம் வாக்குகள் என பிரிக்க பார்த்தனர். அதற்கு அடுத்து பா.ஜ.க தலைவர்களின் வெறுப்பு பிரசாரம். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.க தலைவர்கள் வெறுப்பு அரசியலை முன்னெடுத்தனர்.
இது பலன் அளிக்கும் என பா.ஜ.க நம்பியது. ஆனால், இது பலனளிக்கவில்லை.
பிரிவினைவாத அரசியல் நிராகரிப்பா

பட மூலாதாரம், Getty Images
பாரதிய ஜனதா கட்சியின் பிரிவினைவாத அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாமா? இல்லை என்பதுதான் பதில். அதாவது பா.ஜ.க கொள்கைகள் மீது பற்றுள்ளவர்கள், நம்பிக்கை உள்ளவர்கள், தங்களது வாழ்க்கை தரம் வேறு கட்சிகளால் மேம்பட்டிருக்கிறது என்று நம்பி இருந்தால், அவர்கள் வேறு கட்சிகளுக்கு வாக்கு அளித்திருக்கலாம்.
வளரும் சமூகத்திற்கான கல்வி மையம் எடுத்த தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில், 70 சதவீத மக்கள் கேஜ்ரிவால் அரசு நிறைவேற்றிய நலத்திட்டங்களை ஆதரித்துள்ளார்கள்.
ஷாஹி ன்பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் பங்கெடுத்த போராட்டக்காரர்களை தேச துரோகிகள் என்று பா.ஜ.க பிரசாரத்தில் குறிப்பிட்டனர்.
மோதிக்கு எதிராக இல்லை
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய வளரும் சமூகத்திற்கான கல்வி மையத்தின் இயக்குநர் சஞ்சய் குமார், "கேஜ்ரிவால் அரசு நிறைவேற்றிய நலத்திட்டங்களை அங்கீகரித்தே டெல்லி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இதன் பொருள் பா.ஜ.கவின் கொள்கைகளையோ அல்லது குடியுரிமை திருத்தச் சட்டத்தையோ எதிர்க்கிறார்கள் என்று இல்லை. இந்த தேர்தல் வெற்றியை மோதிக்கு எதிரானதாகவோ அல்லது பா.ஜ.கவுக்கு எதிரானதாகவோ நாம் புரிந்துகொள்ள கூடாது," என்கிறார்.
"மக்கள் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஜார்கண்டில் பெற்றது பா.ஜ.க கூட்டணி. ஆனால், அவர்களால் அதனை தொடர்ந்து நடந்த ஜார்கண்ட் மாநில தேர்தலில் வெல்ல முடியவில்லை. அவர்களின் வாக்கு சதவீதமும் 17% வரை சரிந்து இருந்தது. இதே நிலைதான் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தலிலும் எதிரொலித்தத என்கிறார் அரசியல் ஆய்வாளர் சுஹஸ் பால்ஸிகர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













