ஆஸ்திரேலிய காட்டுத்தீ: ’உடனடி உதவி தேவை இல்லையேல் 113 விலங்கினங்கள் அழிந்துவிடும்’ மற்றும் பிற செய்திகள்

கோலா

பட மூலாதாரம், Reuters

ஆஸ்திரேலியாவில் 113 விலங்கினங்களின் பாதுகாப்புக்கு உடனடி உதவி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

சமீபத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவத்தால் இந்த விலங்கு இனங்கள் மற்றும் அதன் இருப்பிடங்கள் அழிந்துள்ளதால் இந்த உதவி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆறுதல் தரும் விஷயமாக எந்த விலங்கினமும் அழிந்துவிடவில்லை என்கிறது அந்நாட்டு அரசு.

ஆனால் விலங்குகள் 30 சதவீதம் அளவிற்கு தங்களின் இருப்பிடங்களை இழந்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் கோடைக் காலத்தில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த காட்டுத்தீ ஏற்பட்டது.

முன்னதாக இந்த காட்டுத்தீயில் சுமார் 100 கோடி விலங்குகள் வரை அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதில் சில விலங்குகள் ஏறக்குறைய தங்களின் இருப்பிடத்தை மொத்தமாக இழந்துள்ளதால் அதற்கு உடனடியாக உதவி கிடைக்காவிட்டால் அழிந்துவிடும் நிலையில் உள்ளன.

இந்த தகவல்கள் ஒருபக்கம் வெளியிடப்பட்டாலும், இன்னும் பல பகுதிகள் உள்ளே சென்று ஆய்வு செய்ய ஆபத்தானதாக உள்ளதால் மேலும் பல விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த கேஜ்ரிவால்?

கேஜ்ரிவால்

பட மூலாதாரம், Getty Images

டெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால்.

ஹரியாணாவில் ஒரு நடுத்தர பொறியாளரின் குடும்பத்தில் 1968-ஆம் ஆண்டு பிறந்தவர் கேஜ்ரிவால். ஐஐடி காரக்பூரில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் 1989-ஆம் ஆண்டு சேர்ந்தார். ஜாம்ஷெட்பூரில் அவருக்கு பணி வழங்கப்பட்டது.

1992-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு ஆயத்தமாவதற்காக விடுப்பு எடுத்திருந்த பின்னணியில், தமது தனியார் பணியில் இருந்து அவர் விலக நேர்ந்தது. பிறகு கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வாழ்ந்தபோது அன்னை தெரசா நடத்தி வந்த மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ், வடகிழக்கு இந்தியாவில் ராமகிருஷ்ணா மடத்தின் சேவை, நேரு யுவ கேந்திரா ஆகியவற்றின் சேவைகளுடன் தன்னை கேஜ்ரிவால் தொடர்புபடுத்திக் கொண்டார்.

ஓடுவதற்கு மைதானம் இல்லை பின் எப்படி ஒலிம்பிக் மெடல் கிடைக்கும்?

விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

பெண் குழந்தைகள் என்றாலே விளையாட்டை விடப் படிப்பில்தான் கவனம் செலுத்தவேண்டும் என்னும் கற்பிதத்தைப் பெற்றோர் கைவிடவேண்டும் என்கிறார் அனுபவமிக்க தடகள பயிற்சியாளர் நாகராஜன்.

2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வீராங்கனை விருது வழங்கும் விழாவை இந்தியாவில் முதன்முறையாக நடத்துகிறது பிபிசி.

2019ம் ஆண்டின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில், இறுதிக் கட்ட தேர்வாக, இணையத்தில் வாக்கெடுப்பு நடந்துவருகிறது. இந்த வாக்கெடுப்பில் பங்கெடுத்த, நாகராஜன் விளையாட்டுத்துறையில் பெண்கள் சந்திக்கும் தடைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

காவிரிக்கு கைகொடுத்த முதல்வர் கடலூரை கைவிட்டுவிட்டாரா?

விவசாயி

பட மூலாதாரம், Getty Images

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், கடலூர் மாவட்டத்தில் அமெரிக்க நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை வரவுள்ளது என்ற அறிவிப்பும் வந்துள்ளதால், விவசாயிகள் மத்தியில் குழப்பமும், சந்தேகமும் எழுந்துள்ளன.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி,முன்னர், அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கடலூரில் ரூ.50,000 கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு,பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது குறித்து ஆலோசித்ததாக இரண்டு நாட்களுக்கு முன்னர், அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்தா?

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

மாநில அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கட்டாயம் இல்லையென்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லையென்றும் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு தேசிய அளவில் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரமாக எழுப்பியுள்ளது.

2001ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் உருவானபோது அம்மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு 19% இட ஒதுக்கீடும் மலைவாழ் மற்றும் பழங்குடியினருக்கு 2 சதவீத இட ஒதுக்கீடும் வழங்க முடிவெடுக்கப்பட்டது.

அதனை எதிர்த்து சிலர் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்றம் 'பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதா, இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட பிரிவினர் போதிய அளவில் அரசுப் பணிகளில் பிரதிநிதித்தும்பெறவில்லை என்பதை புள்ளிவிவரங்களின் மூலம் உறுதிசெய்ய வேண்டும். அதனை எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றம் ஆராயும்' என்று கூறியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: