நாராயணசாமி Vs கிரண்பேடி: CAA NRCக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? - வல்லுநர்கள் கூறுவது என்ன?
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், J. COUNTESS/GETTY IMAGE
மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அச்சட்டத்தைப் புதுச்சேரியில் நிறைவேற்ற மாட்டோம் என்பதை புதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்ததை தொடர்ந்து புதுச்சேரியில் நாளை சிறப்பு சட்டமன்றம் கூடவுள்ளது.
இந்த கூட்டத்தில் இச்சட்டத்தினை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று வலியுறுத்தி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு மனு கொடுத்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்ற கிரண்பேடி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்ட சட்டத்தை எதிர்க்கப் புதுச்சேரி அரசிற்கு அதிகாரம் இல்லை எனவும், இதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பினார்.
புதுச்சேரியில் நாளை நடைபெற இருக்கும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என ஆளுநர் கிரண்பேடி அனுப்பிய கடிதம் குறித்து முதல்வர் நாராயணசாமியிடம் விளக்கம் கேட்ட போது, "நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான பதில் கொடுக்கப்படும் " என்று தெரிவித்தார்.
புதுச்சேரியில் மத்திய அரசிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று ஆளுநர் கிரண்பேடி கூறியது குறித்து சட்ட வல்லுநரான வழக்கறிஞர் சுப்பிரமணியன் கூறுகையில், "இந்திய சட்ட விரிவாக்கத்தின்படி(Extension of Law) மத்திய அரசு அமல்படுத்திய எந்தவொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று முடிவெடுக்கும் அதிகாரம் புதுச்சேரி அரசாங்கத்திற்கு உண்டு'' என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், CM_PUDUCHERRY
''ஆனால், மத்திய அரசு அமல்படுத்திய சட்டத்தை விமர்சனம் செய்யவோ அல்லது அந்த சட்டம் செல்லாது என சொல்வதற்கான அதிகாரம் புதுச்சேரி மாநில அரசாங்கத்திற்கு கிடையாது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத்தின் தீர்ப்பானது நிலுவையில் இருக்கும் நிலையில் இதுகுறித்து புதுச்சேரி அரசு விவாதிக்கக் கூடாது என்பதற்கு எந்த சம்மந்தமும் இல்லை. காரணம், உச்ச நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கில் புதுச்சேரி அரசு ஒரு அங்கமாக இல்லை என்பதினால் இதுகுறித்து விவாதிக்க புதுச்சேரி அரசாங்கத்திற்கு உரிமை உண்டு," என தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு இதற்கு முன்பு அமல்படுத்திய சட்டத்தை புதுச்சேரி அரசாங்கம் அமல்படுத்தாமல் இருந்துள்ளதா? அல்லது எதிர்த்து இருக்கிறதா? என்று அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த சட்ட வல்லுநர், "இதற்கு முன்பு மத்திய அரசு அமல்படுத்திய சட்டத்தை புதுச்சேரி அரசு எதிர்த்தது இல்லை, ஆனால் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால், இந்திய கிறிஸ்டியன் சட்டம் (Indian Christian Act) என்ற சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்திய நிலையில் அச்சட்டத்தின் எந்தவொரு பிரிவையும் இதுவரை நடைமுறை படுத்தாமல் இருக்கிறது புதுச்சேரி அரசு,"என தெரிவித்தார்.
இது குறித்து புதுச்சேரியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பேராசிரியருமான ராமதாஸ் கூறுகையில், "மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து ரத்து செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்ற புதுச்சேரி அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை. ஆனால் இச்சட்டத்தினை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று சொல்ல புதுச்சேரி அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது" என்று குறிப்பிட்டார்.
"குடியுரிமை திருத்தச் சட்டத்தினை எதிர்ப்பதில் நியாயம் இருந்தாலும் கூட, புதுச்சேரியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு யூனியன் பிரதேச அரசானது மத்திய அரசுடன் ஒரு மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது. இதனால் புதுச்சேரியின் வளர்ச்சியும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒரு முதிர்ச்சியான போக்கை கடைபிடிக்க வேண்டும்," என மேலும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













