கிரண்பேடி:”குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது”

பட மூலாதாரம், Getty Images
புதுச்சேரியின் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, நாடு முழுவதம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிறப்பு தீர்மானமானது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் வரும் 12ம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூடவுள்ளது.
இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் சார்பாக சட்டமன்ற செயலரிடம் மனு அளித்தனர்.

பட மூலாதாரம், CM_PUDUCHERRY
புதுச்சேரி சிறப்பு சட்டமன்றம் இன்னும் இரு தினங்களில் கூடவுள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என்று பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த மனுவிற்கு சபாநாயகரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. இதன் காரணமாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (திங்கள்கிழமை) துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து சிறப்பு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதிக்க கூடாது என மனு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி முதல்வருக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடித்தில் கிரண்பேடி, "புதுச்சேரி சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மனு கொடுத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டமானது பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுடன் அரசானையும் வெளியிடப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைப்படி பாராளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்ட சட்டத்தை எதிர்க்க யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரம் இல்லை. அதன்படி பாராளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எந்த ஒரு தீர்மானமோ, விவாதமோ சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற முடியாது," என்றார்.

தொடர்ந்து, "மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் புதுச்சேரி அரசாங்கத்திற்கு குடியுரிமை தொடர்பாக கருத்து பகிரவோ, விவாதம் மேற்கொள்ள முடியாது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விஷயம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. ஆகவே, புதுச்சேரி யூனியன் பிரதேச சட்ட விதிமுறைப்படி எந்த ஒருவிவகாரம் தொடர்பான தீர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் சட்டமன்றத்தில் மேற்கொள்ள முடியாது," என குறிப்பிட்டிருந்தார் கிரண்பேடி.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேறக்கூடாது என வலியுறுத்தும் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் கூறுகையில், "அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க சபாநாயகரிடம் நாங்கள் கொடுத்த மனுவிற்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை. ஆகவே, ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக மனு அளித்துள்ளோம். புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த சிறப்பு சட்டமன்றம் கூட்டப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த ஒரு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என தெரிந்தும், இங்கே இச்சட்டத்தை எதிர்ப்பதன் அவசியம் என்ன? அமைதியாக இருக்கும் புதுச்சேரியை கலவர பூமியாக மாற்றவே இந்த சதி திட்டம் செய்கின்றனர். மேலும் ஸ்டாலினின் நிர்பந்தத்தினாலும், அவரை திருப்தி படுத்தவேண்டும் என்பதற்காகவும், இந்த ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே நாராயணசாமி இவ்வாறு செய்கிறார்," என தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













