BJP Vs AAP Vs Congress: டெல்லி சட்டமன்ற தேர்தலில் குற்றப் பின்னணி, பணக்கார வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?

பட மூலாதாரம், PRADEEP GUAR / MINT VIA GETTY IMAGES
சமீபத்தில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில், 2019 மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டாத நிலையில், தலைநகர் புதுடெல்லியை உள்ளடக்கிய டெல்லிக்கு இன்று (சனிக்கிழமை) சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது.
வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது.
வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது; மாலை 6 மணிக்கு முடிகிறது.
காலை 12 மணி நிலவரப்படி, டெல்லியில் 15.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் வசிக்கும் மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் ஆகியோர் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நிர்மாண் பவன் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியிலும், அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒளரங்கசீப் பகுதியிலுள்ள வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனர்.
"அனைவரும் வாக்களிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது. சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள்" என்று வாக்களித்த பின்னர் பேசிய பிரியங்கா காந்தி கூறினார்.

பட மூலாதாரம், Twitter
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒளரங்கசீப் பகுதியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் குடியரசுத் தலைவர் தோட்டத்தில் உள்ள பள்ளியொன்றில் தனது வாக்கை பதிவு செய்தார்.
டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வாக்களித்த பிறகு, டெல்லியிலுள்ள அனைத்து இளைஞர்களும் தவறாது வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 672 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். சுமார் 1.47 கோடி பேர் இன்றைய வாக்குப்பதிவில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டுக்கு பிறகு பாஜக 67 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
'தேர்தல் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு' என்று பொருள்படும் அசோசியேஷன் ஃபார் டெமோக்ரடிக் ரிஃபார்ம்ஸ் எனும் அமைப்பு இந்தத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைகளில் உள்ள சில முக்கியத் தகவல்களைப் பார்ப்போம்.
- ஒட்டுமொத்தமாக ஆம் ஆத்மி கட்சியின் 42 வேட்பாளர்கள் (60%), பாஜகவின் 26 வேட்பாளர்கள் (39%) மற்றும் காங்கிரசின் 18 (27%) வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
- அவர்களில் ஆம் ஆத்மி கட்சியின் 36 வேட்பாளர்கள் (51%), பாஜகவின் 17 வேட்பாளர்கள் (25%) மற்றும் காங்கிரசின் 13 (20%) வேட்பாளர்கள் தீவிர குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
- போட்டியிடும் 672 வேட்பாளர்களில் சுமார் 20% பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. தீவிர குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளவர்களின் விகிதம் 15%.
- டெல்லி தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு முறையே 15.15 கோடி ரூபாய், 10.22 கோடி ரூபாய் மற்றும் 80.90 லட்சம் ரூபாய் ஆகும்.
- களத்தில் உள்ள வேட்பாளர்களில் சுமார் 36% பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துள்ளவர்கள். முண்ட்கா தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் தரம்பால் லக்ரா 292.11 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
- இரண்டாம் இடத்தில் உள்ள பிரமிளா தோகாஸ் மற்றும் ராம் சிங் நேதாஜி ஆகிய இருவரும் 80 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உடையவர்கள். இவர்கள் இருவரும் ஆம் ஆத்மி கட்சியினர்தான்.
- பாளம் தொகுதியில் போட்டியிடும் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) வேட்பாளர் ராஜேஷ் குமார் தமக்கு 3,600 ரூபாய் மட்டுமே சொத்து உள்ளது என்று கூறியுள்ளார்.
- கல்வியறிவு இல்லாத 16 பேர், எழுதப்படிக்க மட்டுமே தெரிந்த 6 பேர், இளநிலை பட்டம் பெற்ற 62 பேர், முதுநிலை பட்டம் பெற்ற 90 பேர் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற 11 பேர் களத்தில் உள்ளனர்.

பட மூலாதாரம், EPA / getty images
2014 மக்களவைத் தேர்தலில் டெல்லியின் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி, அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வென்றது. 70இல் 67 தொகுதிகளில் வென்று அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
2019 மக்களவைத் தேர்தலிலும் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வென்றுள்ளது.
இந்திய தேசிய காங்கிரசும் களத்தில் இருந்தாலும், பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையேதான் முக்கியப் போட்டி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முடிவுகள் எப்படி இருக்கும் என்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பிப்ரவரி 11 அன்று தெரியவரும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













