சிரியாவின் ஏவுகணை தாக்குதல்: நூலிழையில் தப்பிய பயணிகள் விமானம் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், AFP
சிரியாவில் பயணிகள் விமானம் ஒன்று அந்நாட்டு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் கிட்டத்தட்ட தாக்கப்படும் நிலைக்கு சென்றதாகவும், பிறகு விமானத்தை வலுக்கட்டாயமாக திசைதிருப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸில் அந்த விமானம் தரையிறங்கும் சமயத்தில், இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் சிரியாவின் விமான தடுப்பு அமைப்பு இந்த தாக்குதலை தொடுத்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த ஏர்பஸ் 320 விமானம் பின்னர் வடமேற்கு சிரியாவில் உள்ள ஹமீமிம் என்ற ரஷ்ய விமான தளத்திற்கு திருப்பி விடப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அந்த விமானத்தில் 172 பேருக்கும் மேலானவர்கள் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த மாதம், இரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி புறப்பட்ட விமானம் இரானின் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதால் ஏற்பட்ட அதிர்வலைகள் அடங்குவதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சீன மக்களின் கோபத்தை தூண்டிய மருத்துவரின் மரணம்

பட மூலாதாரம், WEIBO
கொரோனா வைரஸ் பரவல் ஏற்படும் முன்னரே அதற்கான வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்த இளம் மருத்துவரின் மரணம் சீன மக்களிடையே கடும் கோபத்தை தூண்டியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தபோது அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி வியாழன் இரவு 9.30 மணிக்கு அவர் இறந்ததாக அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ், பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தைப்பூச திருவிழாவுக்கு அச்சத்தை மீறி குவிந்த பக்தர்கள்

தைப்பூச விழாவையொட்டி மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. வழக்கம் போல் இந்தாண்டும் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவுடன் தைப்பூச விழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் பினாங்கு உள்ளிட்ட இந்தியர்கள் அதிகம் வாழக்கூடிய பிற பகுதிகளிலும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

இந்தியாவுக்கு மீண்டும் திரும்பும் உலகின் அதிவேக விலங்கு

பட மூலாதாரம், AFP
இந்தியாவுக்கு சிவிங்கிப்புலிகளைக் (Cheetah) கொண்டு வருவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. எனவே, தற்போது ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கிப்புலிகளை கொண்டு வரலாம்.
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சிவிங்கிப்புலிகள் இருந்துள்ளன. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் அவை கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது உச்ச நீதிமன்றத்தின் அனுமதி காரணமாக, தரையில் அதிவேகமாக ஓடக் கூடிய இந்த மிருகத்தைப் பார்க்கும் வாய்ப்பு இந்திய மக்களுக்குக் கிடைத்துள்ளது.

திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார்

பட மூலாதாரம், TN GOVT
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தங்களுக்கு பல உதவிகளை செய்ய உள்ளதாகவும், அவர் மீது பதியப்பட்ட புகாரை திரும்பபெறவுள்ளதாகவும் அமைச்சரால் காலணியை கழற்றுமாறு பணிக்கப்பட்ட பழங்குடியின சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) சிறுவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்களை நேரில் அழைத்து தெப்பக்காடு சம்பவம் தொடர்பாக அமைச்சர் வருத்தம் தெரிவித்தார் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
விரிவாக படிக்க: திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார்; புகாரை திரும்ப பெறும் பழங்குடியின சிறுவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













