Coronavirus News: ஹாங்காங்கில் கடுமையான விதிமுறைகள் அமல் - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. அதே போன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 34,546 என்னும் எண்ணிக்கையை தொட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியே குறைந்தது 25 நாடுகளில் 270 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சீனாவை தவிர்த்து பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே சூழ்நிலையில், சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட ஹாங்காங்கில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் (சனிக்கிழமை நடைமுறைக்கு வந்துள்ளன.
அதாவது, இன்று முதல் சீனாவிலிருந்து ஹாங்காங்கிற்கு வருபவர்கள் இரண்டு வாரகாலத்திற்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர்.
இதற்காக சீனாவிலிருந்து ஹாங்காங் வருபவர்களுக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருவர் தன்னைத்தானே விடுதிகளில் தனிமைப்படுத்தி கொள்ளலாம் அல்லது அரசாங்கம் நடத்தும் மையங்களில் சேர்ந்து கொள்ள வேண்டும். அதே சூழ்நிலையில், ஹாங்காங் வாசிகள் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருப்பது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு அபாரதத்துடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கை பொறுத்தவரை, இதுவரை 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சீனா எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன?
கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கும் ஹூபே மாகாணம் உள்பட நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூட வாய்ப்புள்ள பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
ஹாங்க்சோ மற்றும் நாஞ்சாங் உள்ளிட்ட நகரங்களில், ஒவ்வொரு நாளும் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியேறலாம் என்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, ஹூபே மாகாணத்தில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதை தடுக்கும் வகையில், மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கிகளின் செயல்பாடு முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

''வுஹானில் இன்னமும் 80 இந்திய மாணவர்கள் உள்ளனர்''
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரில் இன்னமும் 80 இந்திய மாணவர்கள் உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கூறிய ஜெயசங்கர், '' எங்களின் கணக்குப்படி 80 இந்திய மாணவர்கள் வூஹானில் உள்ளனர். இந்திய மாணவர்களை இந்தியா அழைத்து வர முற்பட்டபோது, அதில் 10 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது விமான நிலையத்தில் கண்டறியப்பட்டு சீன அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து மற்ற 70 பேரும் வுஹானிலேயே இருக்க முடிவு செய்ததாகக் கூறினார். தூதரகம் மூலம் அவர்களுடன் இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளது அவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது'' என மாநிலங்களவையில் கூறினார்.
மேலும் அண்டை நாடுகளின் மாணவர்களையும் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் 7 மாலத்தீவு மாணவர்களை தவிர வேறு எந்த மாணவர்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முன்னதாக இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மூன்று மாணவர்கள் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து அங்கு மாநில பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று வெள்ளிகிழமை மாலை கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா இந்த பேரிடர் அறிவிப்பை திரும்பபெறுவதாக அறிவித்தார். ஆனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் நோய் எதிர்ப்புக்கான வழிமுறைகளும் தொடர்ந்து எடுத்துரைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது. குறிப்பாக நேற்று (வியாழக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 636 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 31,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக அறியப்படும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் சாதாரண சளி, காய்ச்சல் ஏற்பட்டு, பிறகு அது வறட்டு இருமலாக மாறி, அடுத்து நுரையீரல் போன்ற உறுப்புகளை பாதிப்பதால், அதன் காரணமாக நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
சீனாவிற்கு வெளியே, அதிகபட்சமாக ஜப்பானில் 45 பேருக்கும், சிங்கப்பூரில் 28, தாய்லாந்தில் 25, தென்கொரியாவில் 23, ஆஸ்திரேலியாவில் 14, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் தலா 12 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரிட்டனில், மூன்று பேருக்கும் இலங்கையில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை சீனாவிற்கு வெளியே ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கப்பலில் பரவிய கொரோனா
ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலின் பயணிகளில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே சிலருக்கு வைரஸ் பாதித்திருந்த நிலையில் , தற்போது மொத்தம் 61 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.
டைமண்ட் பிரின்ஸஸ் என்ற 3,700 பயணிகளைக் கொண்ட சொகுசு கப்பலில் கடந்த இரண்டு வாரமாக ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்தில் உள்ளது.
வேர்ல்டு ட்ரீம்ஸ் என்னும் 3,600 பயணிகள் கொண்ட மற்றொரு சொகுசு கப்பலில் நடந்த சோதனையில் இதுவரை யாரும் நோயால் பாதிக்கப்படவில்லை.
தனிமைப்படுத்தப்பட்ட அந்த கப்பலுக்கு 19 பிப்ரவரி வரை மருந்துகள் வழங்கப்பட்டு வரும் எனத் தெரிகிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த 20 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மக்களின் கோபத்தை தூண்டிய மருத்துவரின் மரணம்
இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்திலேயே எச்சரித்த சீன மருத்துவர் இந்த வைரஸ் தொற்றால் இறந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கோப அலைகளை தூண்டியுள்ளது.
லீ வெண்லியாங் என்ற அந்த கண் மருத்துவர் வுஹான் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் 30-ஆம் தேதியன்று அவர் சக மருத்துவர்களிடம் இந்த வைரஸ் குறித்து எச்சரித்து இருக்கிறார்.

பட மூலாதாரம், LI WENLIANG
ஆனால், இப்படி போலியான தகவல்களை பகிர்வதை நிறுத்தும்படி சீன காவல்துறையினர் கூறியுள்ளனர். கொரோனா பரவல் தொடங்கியபின் அதிகாரிகள் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இது குறித்த தகவல்களை அவர் சீன சமூக ஊடகமான வெய்போவில் பகிர்ந்திருந்தார்.
"அனைவருக்கும் வணக்கம், நான் கண் மருத்துவர் லீ, வுஹான் சென்ட்ரல் மருத்துவமனையில் பணியாற்றுகிறேன்," என தொடங்கும் அந்த பதிவை மருத்துவமனை படுக்கையில் இருந்தப்படி பகிர்ந்திருக்கிறார்.
டிசம்பர் இறுதியில் வைரஸால் தாக்கப்பட்ட பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இது சார்ஸ் வைரஸாக இருக்கலாம் என சந்தேகித்து இருக்கிறார் லீ. ஆனால், இது புதிய கொரோனா வைரஸ் என அவருக்கு தெரியவில்லை.
பிற செய்திகள்:
- 'அமைச்சர் சொல்கிறார் என்பதால் பயந்துகொண்டு செருப்பை கழற்றினேன்' - பழங்குடியின சிறுவன்
- 'அல்-கய்தாவின் முக்கிய தலைவரை கொலை செய்துவிட்டோம்' - டிரம்ப்
- ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறதா ‘கியா’ கார் தொழிற்சாலை?
- இந்தியா மீதான விமர்சனம்: மகாதீர் தொனி மாறிவிட்டது என்கிறார் அன்வார் - காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













