கியா கார் தொழிற்சாலை ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறதா? - நடப்பது என்ன?

KIA

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, KIA

ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் மிக்க 'கியா' (KIA) கார் தொழிற்சாலை, கட்டி முடிக்கப்பட்டு இரண்டே மாதங்களில் தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்வது பற்றிப் பேச்சு நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

News image

பெயர் வெளியிடாத மூத்த அரசு அதிகாரி மற்றும் இந்த பேச்சுவார்த்தை பற்றித் தெரிந்த மற்றொரு நபர் ஆகிய இருவரும் இந்த தகவலைத் தெரிவித்ததாக கூறி ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த பிரத்யேக செய்தியை வெளியிட்டுள்ளது.

கியா நிறுவன நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கியா நிறுவனமும், ஆந்திரப் பிரதேச அதிகாரிகளும் இந்த செய்தியை மறுத்துள்ளனர்.

என்ன சொல்கிறது ராய்டர்ஸ் செய்தி?

"(கியா ஆந்திரப்பிரதேசத்தில்) பிரச்சனைகளை எதிர்கொண்டுவருகிறது. எங்களோடு அவர்கள் ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த வாரம் செயலாளர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது இது குறித்து அதிக தெளிவு பிறக்கும்" என்று அந்த அதிகாரி தெரிவித்ததாகவும் ராய்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஆந்திரப் பிரதேச அரசின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தாலும், கியா தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களை வழங்கும் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமைந்திருப்பதாலும், அனந்தபூர் தொழிற்சாலையை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது பற்றி பேச்சு நடந்து வருவதாக ராய்டரஸ் தமது செய்தியில் தெரிவித்துள்ளது.

7,800 கோடி ரூபாய் தொழிற்சாலை

7,800 கோடி ரூபாய் மதிப்பில் அனந்தபூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட இந்த தொழிற்சாலை 12 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தருகிறது.

கியா

ஆந்திரப் பிரதேச அரசுடன் 2017ல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டுமானம் தொடங்கப்பட்டு, இரண்டாண்டு காலம் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது. பிறகு, 2019 டிசம்பரில் 23 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்த இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டது.

செலோட்ஸ் எஸ்.யு.வி. வகை வாகனங்கள் போன்றவற்றை இந்திய மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்காக இந்த தொழிற்சாலை உற்பத்தி செய்யும். கியா நிறுவனத்தின் உலக அளவிலான உற்பத்தி வலைப்பின்னலின் இன்றியமையாத பகுதியாக இந்த தொழிற்சாலை காலப்போக்கில் உருவாகும் என்றும் கூறப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தை கியாவின் சகோதர நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தில் நடந்ததாகவும், கியாவின் செயல் அதிகாரிகள் இதில் பங்கேற்றதாகவும் தமிழக அதிகாரி தெரிவித்ததாகவும் ராய்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவிக்க ஹூண்டாய் தரப்பு மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியாவுக்கு என்ன பிரச்சனை?

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆட்சிக்கு வந்த புதிய ஆந்திரப் பிரதேச அரசு எந்த நிறுவனத்திலும் 75 சதவீதம் பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களாக இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் தகுதியான பணியாளர்களைக் கண்டறிவதில் கியா நிறுவனத்துக்கு பிரச்சனை ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் முந்தைய அரசு அளிக்க முன்வந்த சில நிதி சார்ந்த சலுகைகளை மறு ஆய்வு செய்ய தற்போதைய அரசு முயல்வதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, மின்சார வரியில் இடைவெளிகள், நிலத்துக்கான பணத்தை காலம் தாழ்த்தி தருவது ஆகிய சலுகைகளை தற்போதைய அரசு மறுபரிசீலனை செய்கிறது.

கடந்த ஆண்டு அதிகாரத்துக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முந்தைய அரசு பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யப் போவதாக அறிவித்தது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

என்ன சொல்கிறது கியா?

ஆனால் அதே நேரம், "இந்திய சந்தை குறித்து கியாவுக்கு நீண்ட காலத் திட்டம் உள்ளது. மேற்கொண்டு விரிவாக்கம் செய்யும் முன்னர், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையின் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திட்டமிடப்படுகிறது. தொழிற்சாலையை அதன் தற்போதைய இடத்தில் இருந்து மாற்றும் திட்டம் எதுவும் இல்லை" என்று கியா விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திர அரசின் கொள்கை தொடர்பாக தங்களுக்கு கவலை இருப்பதாகவோ, தமிழ்நாட்டுடன் பேச்சு நடப்பதாகவோ பேசப்படுவது குறித்து அந்த அறிக்கையில் எதுவும் இல்லை என்பதையும் ராய்டர்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.

பிபிசியிடம் என்ன சொன்னது கியா?

கியா தொழிற்சாலை தமிழ்நாட்டுக்கு செல்வது குறித்துப் பேச்சு நடத்துவதாக வெளியான செய்தி குறித்து பிபிசி தெலுங்கு சேவை கியா நிறுவனத்திடம் விசாரித்தது. "ராய்டர்ஸ் இந்தியா முகமை வெளியிட்ட செய்தியில் உண்மை இல்லை" என்று கியா தரப்பு தெரிவித்தது.

ஆந்திராவில் உள்ள கியா தொழிற்சாலை.

மறுபக்கம் ஆந்திரப்பிரதேச அரசும் இந்த செய்தியில் அடிப்படை இல்லை என்று தெரிவித்துள்ளது. கியாவுடன் இணைந்து பேசி வருவதாக ஆந்திரப் பிரதேச தொழில், முதலீடு, வணிகத் துறை செயலாளர் ரஜத் பர்கவா தெரிவித்துள்ளார்.

கியா மோட்டார் நிறுவனம் தங்களுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தவில்லை என்று பெயர் வெளியிடவிரும்பாத தமிழக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். கியா தங்களை அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விவாதம்

இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் தெலுங்கு தேசம் எம்.பி. ராம்மோகன் நாயுடு 'ஜீரோ அவர்' நேரத்தில் இந்த பிரச்சனையை எழுப்பினார்.

இது அந்நிய முதலீடு சம்பந்தப்பட்ட விவகாரம். அரசாங்கம் செயல்படும் விதம் காரணமாக ஒரு நிறுவனம் இடம் பெயர விரும்புகிறது. எனவே மத்திய அரசு உடனே தலையிடவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், மாநில ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. இந்த செய்தி "முற்றிலும் உண்மையற்றது" என்று தெரிவித்தார். இன்று காலை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருடன் தாம் பேசியதாகவும் ஊடகத்தில் வெளியான செய்தி பொய் என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: