காஷ்மீர் அரசியலில் வெற்றிடம்: பாஜக வலுப்பெற முயல்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர்
- பதவி, பிபிசி, ஸ்ரீநகர்
கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 5-ம் தேதி இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த பகுதி பிரிக்கப்பட்டது.
புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு ஆறு மாதங்களாகியும் இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தொடர்ந்து பலத்த அமைதி நிலவி வருகிறது.
இந்திய அரசின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவை தொடர்ந்த நடவடிக்கைளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு தடை நடவடிக்கைள் மற்றும் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கையும் உள்ளடங்கும்.
கடந்த ஆறு மாதங்களாக இங்கு தகவல்தொடர்பு தடைகளை சரிசெய்ய மக்கள் முயன்றுவரும் வேளையில், இப்பகுதியில் அரசியல் களம் மிகவும் அமைதியாக காணப்படுகிறது.

பட மூலாதாரம், SOPA IMAGES
பெரும்பாலான காஷ்மீர் மக்கள், 370-வது சட்டப்பிரிவை நீக்கும் தங்கள் முடிவை ஆதரித்து வருவதாக வலியுறுத்தி வரும் இந்திய அரசு, ''முன்னெச்சரிக்கை தடுப்புக்காவல் மற்றும் சில தடை நடவடிக்கைகளுக்கு'' மத்தியில் இதுவரை ஒரு புல்லட்கூட பயன்படுத்தப்படவில்லை என்று கூறுகிறது.
ஆனால், தொடர்ந்து தொழில்கள் முடக்கப்பட்ட நிலை, இணைய நிறுத்தம் மற்றும் தடை உத்தரவுகளால் ஏறக்குறைய 18,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல், காஷ்மீரில் நடந்த போராட்டங்களில், கிட்டத்தட்ட அரை டஜனுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக சில மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
பட்டதாரி இளைஞர்கள் குறைந்தது 2 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்து வேலை இல்லாமல் இருப்பதாக அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது.
தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சிறிது விலக்கப்பட்டுள்ள நிலையில், சமூகஊடகங்களை பயன்படுத்துவதில் தடைகள் தொடர்ந்து அமலில் இருந்து வருகின்றன.

பட மூலாதாரம், NURPHOTO / GETTY IMAGES
வணிகர்கள் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ள நிலையில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை தொடர்பாக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
''தீவிர சிகிச்சைப் பிரிவின் பயன்பாட்டுக்கு இணையதளமும் தேவை என்ற நிலையில், ஆரம்ப மாதங்களில் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். தற்போதும் குறைந்த அளவு வசதிகளை கொண்டே நாங்கள் மருத்துவமனைகளை இயக்கி வருகிறோம்'' என்று அரசு மருத்துவமனையில் பணியாற்றும் உமர் என்ற மருத்துவர் குறிப்பிட்டார்.
இதேபோல் இணையதள சேவைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், முன்னாள் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் வீட்டுச்சிறையிலோ அல்லது சிறைச்சாலைகளிலோ தற்போது இருப்பதால், இங்கு அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது. தற்போதுள்ள நிலையில் பாஜக மட்டுமே செயல்பாட்டில் உள்ள அரசியல் கட்சியாக உள்ளது.
''நாங்கள் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை. அதேபோல் எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில்கூறி எங்கள் நேரத்தையும் வீணாக்க மாட்டோம். பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்த மக்கள் நலத்திட்டங்களால் மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்'' என்று கடந்த மாதம் இங்கு நடந்த மத்திய அரசின் பிரசார விளக்க கூட்டத்தில் மத்திய அமைச்சரான முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
முன்னாள் மாநில முதல்வர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில் உள்ள நிலையில், இவர்களின் கட்சித்தொண்டர்கள் தற்போது செயலற்று காணப்படுகின்றனர்.

மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகம் மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி அலுவலகம் ஆகியவை வெறிச்சோடி காணப்படுகின்றன.
''எங்கள் கட்சித்தலைமையை சந்திக்க நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. எங்களின் கட்சித்தலைமை அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும். ஆனால் அவர்கள் சிறையில் உள்ளனர். எங்கள் தலைவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர் தெளிவான திட்டம் வகுக்கப்படும்,'' என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் இம்ரான் நபி தர் பிபிசியிடம் தெரிவித்தார்.
2014க்கு முன்பு காஷ்மீர் அரசியலில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவையே முக்கிய கட்சிகளாக இருந்தன. முதல்முறையாக மோதி அலையால் பாஜக 25 இடங்களை காஷ்மீரில் வென்றது.
தற்போது இங்கு ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தால், பாஜக தனது ஆதரவுத்தளத்தை மேலும் விரிவுபடுத்தி வருகிறது.
''தற்போதுள்ள அமைதியை அரசின் முடிவுகளுக்கு மக்கள் இணக்கமாக உள்ளதாக நாம் எடுத்துக் கொள்ளமுடியாது. மக்கள் இன்னமும் கோபமாக உள்ளனர். தற்போது இங்கு அரசியல் அமைதியாக இருப்பதாக ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு புதிய நபர்களை புகுத்த புதுடெல்லி முயன்றால் அது மக்கள் மத்தியில் அமைதியை உண்டாக்காது'' என்று பிபிசியிடம் அரசியல் ஆய்வாளரான இஜாஸ் அயூப் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













